Published : 02 Dec 2016 12:13 PM
Last Updated : 02 Dec 2016 12:13 PM

காதல் வழிச் சாலை 11: ரொமான்ஸ் தெரியும்... லிமரென்ஸ் தெரியுமா?

கல்லூரி மாணவர் ஒருவர் ஆலோசனைக்காக என்னைச் சந்திக்க வந்திருந்தார். உடன் படிக்கும் மாணவியைத் தீவிரமாக நேசிப்பதாகச் சொன்னார். “நீங்கள் விரும்புவது அவருக்குத் தெரியுமா?” என்றேன். “தெரியவில்லை” என்றார். என் பார்வையைப் புரிந்துகொண்டவராக அவரே தொடர்ந்தார்.

“இல்லை சார்… நான் அவங்களை நேசிக்கறது உண்மை. ஆனா அதை அவங்ககிட்டே சொல்ல மனம் வரலை. ஒருவேளை நிராகரிச்சிட்டா என்ன செய்வதுங்கற பயமும் ஒரு காரணம். என் பிரச்சினை இப்போ அதுவல்ல” என்று நிறுத்தியவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“எப்பவும் அவங்க நினைவாகவே இருக்கேன். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியலை. அவங்க என்கூடவே இருக்கணும், அவ்ளோதான். தொட வேண்டாம், ரொமான்ஸ் வேண்டாம், டேட்டிங் வேண்டாம். ஒரு பார்வை மட்டும் போதும். சில நேரம் வேண்டாம்னு எவ்ளோ முயற்சி செஞ்சாலும் அவங்க நினைவு திரும்பத் திரும்ப வருது. சில நேரம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. சில நேரம் எதையோ இழந்ததுபோல கஷ்டமாக இருக்கு.

இப்போ அடிக்கடி சோர்ந்துடறேன். சாதிக்க வேண்டிய வயதில் இப்படி இருக்கோமேன்னு குற்ற உணர்வு என்னைக் கொல்லுது. குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய நேரத்தில் இது ஒரு புரியாத இம்சையாக இருக்கு” - உணர்வுகளின் கலவையாகச் சொல்லி முடித்தார் அந்த மாணவர்.

இதுதான் காதல் என்பதா?

ஈர்ப்பு என்றும் சொல்ல முடியாத, காதல் என்றும் சொல்ல முடியாத ஒரு விசித்திர உணர்வு நிலையில் அவர் இருப்பதைப் புரிந்துகொண்டேன். இதை ‘லிமரென்ஸ்’ (Limerence) என்று சொல்கிறது உளவியல். கிட்டத்தட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு டோரதி டெனோவ் (Dr DorothyTennov) என்ற உளவியலாளர் கண்டறிந்த வார்த்தைதான் இது. இன்னதென்று புலப்படாத எதிர்ப் பாலினக் கவர்ச்சியாகத்தான் இது ஆரம்பிக்கும்.

காலப்போக்கில் அந்த உணர்வுகள் சடசடவென அதிகரித்து, தான் அவரைத் தீவிரமாகக் காதலிக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவரை நம்பவைத்துவிடும். இது இரண்டு, மூன்று ஆண்டுகள்தான் இருக்கும். பிறகு ஏறிய வேகத்திலேயே அந்த உணர்வுகள் கீழிறங்கத் தொடங்கிவிடும். பிறகென்ன? காதல் கசக்குதய்யா என்று பாட வேண்டியதுதான். சில நேரம் உறவு முறிவுக்கும் திருமண முறிவுக்கும்கூட இந்த லிமரென்ஸ் காரணமாக அமைந்துவிடும்.

காட்டிக்கொடுக்கும் உணர்வுகள்

# ஒருவரைத் தீவிரமாக விரும்புவோம். அது காதல்தான் என்பதைத் தெளிவாக விளக்க முடியாது.

# அவரது கவனத்தை ஈர்ப்பது மட்டுமே முதன்மையாக இருக்கும். உடல் ரீதியான அண்மையும் நெருக்கமும் இரண்டாம்பட்சமே. சமயத்தில் அது தேவையே இல்லை என்றும் சொல்வார்கள்.

# காதல் என்பதன் இருண்ட, அதே நேரம் ஆபத்தான மறுபக்கமே லிமரென்ஸ்.

# உண்மையில்லை என்று தெரிந்தபோதும், அவரைப் பற்றிய வண்ணக் கனவுகள் திரும்பத் திரும்ப வரும். போதைக்கு அடிமையான வருக்கு அந்த போதைப் பொருள் பற்றிய நினைவுகள் தொடர்ந்து வருமே அதைப் போல.

# ஒன்று சோகமாக இருக்கும். இல்லை அதீத சந்தோஷமாக இருக்கும். இடைப்பட்ட எந்த உணர்வும் இருக்காது.

# சில நேரம் நெஞ்சே வலிப்பது போலவும் நெஞ்சில் பாரமாகவும் உணர்வார்கள்.

# தாம் விரும்பும் நபரின் சுக துக்கங்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். தன்னை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற ஆராய்ச்சியில், பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

# வேலை, கடமை, குடும்பம், நட்பு வட்டம் என எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இந்தப் போலிக் காதலிலேயே ஆண்டுக்கணக்கில் உழன்றுகொண்டிருப்பார்கள்.

எதிர்பார்ப்பு இல்லாதது

காதல் அப்படியல்ல. அது கொடுத்து மகிழ்வது. பிரதிபலன் பார்க்காதது. லிமரென்ஸ், கொடுத்துவிட்டு எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும். காதல் உடலையும் உள்ளத்தையும் வலுவாக்கும். ஆனால், லிமெரென்ஸ் நம்மை நாளுக்கு நாள் பலவீனப்படுத்திவிடும். நம் மீதே சந்தேகமும் வெறுப்பும் கூடுதலாகி இறுதியில் தற்கொலை செய்யவும் தூண்டிவிடும். காதல் இரு பக்கமும் ஒரு அமைதியைக் கொண்டுவரும். லிமெரென்ஸ் அப்படியல்ல. அடுத்தவரை மூர்ச்சையடையச் செய்யும் அளவுக்கு உணர்வு ரீதியிலான பலவந்தம் இருக்கும்.

லிமரென்ஸ் என்பது ஒரு விசித்திர உணர்வு. காதலுக்குக் கீழே, ஈர்ப்புக்கு மேலே என்கிற இடைப்பட்ட நிலையில் உள்ள ஒன்று அது. நம் கட்டுப்பாட்டை மீறித் தானாக வெளிவருவது. அவரைப் பற்றிய எண்ணம் திரும்பத் திரும்ப மேலெழுந்துகொண்டே இருக்கும்.

சொன்னால்தான் காதல்

நிராகரிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் இதில் அதிகம் இருக்கும். அதனால் எந்தச் சூழ்நிலையிலும் தான் ஈர்க்கப்படும் நபரிடம் மனம் திறந்து தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டார்கள். நிராகரித்துவிடுவார்களோ என்ற அதீத பயம் அல்லது பதற்றத்தின் காரணமாகக் கடைசிவரை காதலைச் சொல்லவே மாட்டார்கள்.

எதிர்ப்புறம் இருப்பவரே காதலை எதிர்பார்த்து மனதளவில் தயாராகியிருப்பார். இருப்பினும் எங்கே நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் அந்தப் பக்கம் தெரியும் பச்சை சிக்னலைக்கூட கவனிக்கத் தவறிவிடும் அவலமும் இந்த லிமரென்ஸில்தான் இருக்கும்.

அதேநேரம் நம் செய்கைகளுக்கு எதிர்த்தரப்பிலிருந்து சின்னதாக ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும். வானமே காலடியில் வந்து வீழ்ந்ததைப்போல் பறப்பார்கள். சின்னதொரு சம்பவத்தைக்கூட பெரிதாக சிலாகித்து, காலம் கனிந்து வருகிறது என்று குதிப்பார்கள்.

லிமரென்ஸ் உணர்வு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட மாற்றங்களை உண்டாக்கிவிடும். கை கால்களில் நடுக்கம், படபடப்பு, பலவீனம், பேச்சில் தடுமாற்றம் ஆகியவற்றோடு இனம் புரியாத கூச்சமும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

லிமரென்ஸ் என்பது வெளியே தெரியாத அளவுக்கு மறைந்து தாக்கும் உணர்வு. ஏனெனில், காதலில் இருப்பது போன்றே உணர்வுகள் இதிலும் இருக்கும். ஆனால் இது காதல் இல்லை.

நமக்கு ஏற்பட்டிருப்பது காதலா, ஈர்ப்பா அல்லது லிமரென்ஸ்தானா என்பதைப் பகுத்தாய்வது கொஞ்சம் சிரமம்தான். அதிகம் அறியப்படாத இந்த லிமரென்ஸின் முதலாவதும் முக்கியமானதுமான அறிகுறி எது தெரியுமா? நமது உணர்வுகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மறைக்க முயல்வதுதான். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, காதலைத் தேடுவோம்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x