Last Updated : 12 Oct, 2013 05:30 PM

 

Published : 12 Oct 2013 05:30 PM
Last Updated : 12 Oct 2013 05:30 PM

வீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி?

நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்கமுடியாது. அப்படி வாங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள்.

(மேலும் வீட்டுக்கடன் கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுகடன்தான் வா ங்குகிறார்கள்) ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவிகிதத் தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள்.

உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும்.

வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு என்னும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில்(இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம்.

இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும். குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது.

இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட, நீங்கள் கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும். அதனால் கடனை முழுமையாக அடைத்த பிறகு, வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.

அதேபோல இந்த டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். அதனால், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

பொதுவாக ஒருவருடைய மாத வருமானத்தில் 40 சதவிகிததுக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கபட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

ஆனால், அதேநேரம் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எஃப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம்.

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம். வீட்டுக்கடன் வட்டியில் 1.5 லட்சம் வரை(வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 25 லட்ச ரூபாய்க்குள் முதல்முறையாக கடன் வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் வரிலக்கு பெற்றுக்கொள்ளலாம்) வரிவிலக்கு பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் அதிகபட்சம் 30 % வரி செலுத்த வேண்டி இருந்தால்கூட 45,000 ரூபாய் சேமிக்க முடியும். ஆனால், இந்த 45,000 ரூபாயை சேமிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வீட்டுக்கடன் வாங்க விடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x