Last Updated : 30 Jun, 2017 11:40 AM

 

Published : 30 Jun 2017 11:40 AM
Last Updated : 30 Jun 2017 11:40 AM

தொலைதூரக் காதலை வளர்த்தெடுப்பது எப்படி?

தொலைதூரக் காதலில், அதாவது ‘லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில்’ இருப்பது சற்றுக் கடினமான விஷயம்தான். தொழில்நுட்பங்களின் உதவியோடு யாரிடமும் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இப்போது பேசலாம். வெளிநாட்டிலோ வெளிமாநிலத்திலோ வெளியூரிலோ இருக்கும் உங்களுடைய காதலர்/காதலியோடு நினைத்த நேரத்தில் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், மனிதர்கள் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டவர்கள். அதுவும், காதல் என்பது பரஸ்பரம் இரண்டு நபர்களின் உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்தே வளர்கிறது.

வாழ்க்கையின் இன்பம், துன்பம் என இரண்டு தருணங்களையும் மனதுக்குப் பிடித்த ஒருவரோடு கடப்பதில்தான் காதலின் உறவு வலிமையடைகிறது. ஆனால், தொலைதூரக் காதலில் இருப்பவர்களால் எல்லா முக்கியத் தருணங்களையும் காதலர்/காதலியோடு அருகிலிருந்து பகிர்ந்துகொள்ள முடியாது. உங்களுடைய காதல் உறவின் அடிப்படை வலிமையானதாகவும், தொலைதூரம் என்பது நிரந்தரமானதல்ல தற்காலிகமானதே என்ற புரிதலும் இருவருக்கும் இருந்தால் தொலைதூரக் காதலில் வெற்றிபெறுவது சுலபமானதுதான். தொலைதூரக் காதலில் இருப்பவர்களுக்குச் சில ஆலோசனைகள்:

விரும்பப்படுபவராக உணரவையுங்கள்

தொலைதூரக் காதலில், உங்கள் காதலரோ/காதலியோ எந்தச் சூழ்நிலையில் அங்கே இருக்கிறார்கள் என்பதை முழுமையாக உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால், அவரைப் பற்றித் தேவையில்லாமல் உங்கள் மனதில் எழும் ஊகங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். தொலைதூரத்திலிருக்கும் உங்கள் காதலரோ/காதலியோ நீங்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதை உணர வேண்டும். அவருடைய வருகைக்காக நீங்கள் முழுமனதோடு காத்திருக்கிறீர்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து உங்களுடைய காதலருக்கு/காதலிக்குத் தெரியப்படுத்துங்கள். தொலைதூரக் காதலில் தகவல் பரிமாற்றம் குறையும்போது, அந்த உறவு முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கிறது.

நிறைய நம்பிக்கை கொஞ்சம் தீர்மானங்கள்

தொலைதூரக் காதலில் இருப்பவர்கள் சீக்கரத்தில் பொறாமைக்கு ஆட்படுவார்கள். சாதாரணமாக, யாராவது நண்பர்களிடம் பேசினால்கூட அதைப் பற்றிப் பெரிதாக யோசித்துக் குழப்பிக்கொள்வார்கள். இப்படிச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பொறாமையோ சந்தேகமோ பட்டால், உங்களுடைய காதல் உறவில் அது விரிசலை ஏற்படுத்தும். காதல் வெற்றிபெறுவதற்கு அடிப்படையே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்படுவது உங்களுடைய காதலுக்கு நல்லதல்ல. அதனால் உங்களுடைய காதலர்/காதலியைப் பற்றி எந்த ஒரு தீர்மானகரமான முடிவுக்கும் வருவதற்கு முன் பொறுமையாக யோசியுங்கள்.

ஆர்வங்களைப் பின்தொடரலாம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அதில் உங்கள் இருவருக்குமே ஆர்வமிருக்கும் விஷயங்களைப் பட்டியிலிடுங்கள். அப்படி இருவருக்கும் ஆர்வமிருக்கும் விஷயங்களை ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் செய்வதற்கு முயலுங்கள். உதாரணமாக, உங்கள் இருவருக்குமே இசையில் ஆர்வமிருந்தால் ‘ஸ்கைப்’ மூலம் இருவரும் பாடல்களைப் பாடியும் கேட்டும் ரசிக்கலாம். அப்படியில்லாமல், இருவருக்கும் பிடித்த படத்தை ஒரே நேரத்தில் பார்த்துவிட்டு, அதைப் பற்றி உரையாடலாம். உங்கள் இருவருக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வமிருந்தால், அதை இருவரும் சேர்ந்து விளையாடலாம். ஒரே நேரத்தில் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்யலாம். தொலைதூரத்தில் இருந்தாலும் காதலர்/காதலியோடு ஒன்றாக நேரம் செலவிடுவதற்கு இப்படிப்பட்ட சின்னச்சின்ன வாய்ப்புகளை உருவாக்கிகொள்வது உங்களுடைய காத்திருப்பின் வலியைக் குறைக்க உதவும். அத்துடன், இந்த நினைவுகள் வருங்காலத்தில் உங்களுடைய உறவின் சிறந்த நினைவுகளாகவும் மாறலாம்.

நேர்மை முக்கியம்

உறவில் நேர்மை முக்கியமான அம்சம். இந்த நேர்மை என்ற அம்சம்தான் உறவின் அடித்தளம். அதுவும் தொலைதூரக் காதலில் இருவருக்குமிடையேயான பரஸ்பரக் காதல், நம்பிக்கை, மரியாதை, புரிதல், நேர்மை போன்ற அம்சங்களே காதலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. அதனால், உங்கள் காதலர்/காதலிக்கு எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறீர்களோ, அதே அளவுக்கு உங்களுக்கும் நேர்மையாக இருக்க வேண்டியதும் அவசியம். உங்கள் காதலர்/காதலியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒருவேளை, உண்மையிலேயே நீங்கள் உங்கள் காதலர்/காதலியை விட்டு மனதளவில் விலகத் தொடங்கியிருந்தால் அதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் இருந்தால் அதைப் பற்றிப் பேசுங்கள். உண்மையிலேயே, உங்களுடைய உறவில் பிரச்சினையிருக்கும்போது, காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால், எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் உங்கள் காதலரையோ/காதலியையோ நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துபேசிய பிறகு எடுங்கள். ஒருவேளை, உங்கள் தரப்பில் எல்லா முயற்சிகளையும் எடுத்த பிறகும், உங்களுடைய தொலைதூரக் காதல் உறவில் முன்னேற்றம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். காதலின் பிரிவுத் துயரை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும் என்பதற்காக ஒத்துவராத காதல் உறவைத் தொடர முடியாது அல்லவா?

பரிசுகள், கடிதங்கள்

என்னதான் 21-ம் நூற்றாண்டாக இருந்தாலும், அன்பைக் கடத்துவதில் கடிதங்கள் இடத்தை வேறு எந்த விஷயத்தாலும் பிடிக்க முடியாது. அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களுடைய காதலர்/காதலிக்கு மின்னஞ்சலில் கடிதங்களை எழுதி அனுப்புங்கள். இப்படி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் உங்கள் காதலர்/காதலிக்குப் பெரிய ஆச்சரியப் பரிசாக அமையும். தொலைதூரத்தில் இருக்கும்போது, உங்களுடைய காதலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி இது. இன்னொரு விஷயம் பரிசுகள். காதலில் இருக்கும்போது நீங்கள் கொடுக்கும் எல்லாப் பரிசுகளுக்கும் ஒரு தனி மதிப்பு இருக்கும். பெரிய பரிசா, சின்ன பரிசா என்பதெல்லாம் காதலில் முக்கியமில்லை. எந்தப் பரிசாக இருந்தாலும் அது காதலை வளர்ப்பதற்கு உதவும்.

உண்மையிலேயே உங்களுடைய காதலில் தீவிரமாக இருந்தால், உங்கள் காதலர்/காதலியுடன் இருப்பதற்கான வழிகளை நீங்களே எப்படியாவது கண்டடைந்துவிடுவீர்கள். உங்கள் காதல் உறவை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான வலிமையை உங்களுடைய காதலே வழங்கும். கடைசியாக, உங்கள் காதலர்/காதலி உங்கள் முன்னால் இருக்கும்போது, காதலில் காத்திருப்பதன் வெற்றியை முழுமையாக உணர்வீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x