Published : 14 Nov 2013 04:31 PM
Last Updated : 14 Nov 2013 04:31 PM
நவீன தொழில்நுட்ப யுகத்தில், கட்டுமானத் துறையில் ஏராளமான மாற்றுப் பொருள்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் செங்கல்லுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் எனப்படும் எரி சாம்பல் செங்கல், கட்டுமானத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.
தமிழகத்தில் குடியிருப்புகளும், தொழில்நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகளும் அதே வேகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் செங்கற்கள், செங்கல் சூளைகள் அமைத்துத் தமிழகத்தில் பரவலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் மழைக்காலத்தில் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதால், கட்டுமானப் பணிகள் தேக்கமடைகின்றன. அதே வேளையில் செங்கல்லுக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் ‘ஃபிளை ஆஷ்' செங்கல் எல்லாக் காலங்களிலும் கிடைப்பதால், இதற்குக் கட்டுமானத் துறையினரிடம் வரவேற்பு காணப்படுகிறது.
நிலக்கரி சாம்பல் (ஃபிளை ஆஷ்), மணல், ஜிப்சம், சுண்ணாம்பு சேர்ந்த கலவை மூலமே ஃபிளை ஆஷ் கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் கலவை மிக்சர் இயந்திரத்தில் கொட்டிய பின், கன்வேயர் பெல்ட் வழியாக இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டுப் ஃபிளை ஆஷ் கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முறையில் சிறிய இயந்திரம் மூலம் தினமும் 20 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் உற்பத்தி நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர் விஜய். ‘‘இதுவே பெரிய இயந்திரம் என்றால் 30 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்யலாம். இந்தச் செங்கல்லுக்கும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள செங்கற்களுக்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஒரு ஃபிளை ஆஷ் செங்கல் ரூ.5.50 முதல் ரூ.6.00 வரை விற்பனை செய்யப்படுகிறது’’ என்கிறார் விஜய்.
செங்கல்லைக் காட்டிலும் ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கூறுகின்றனர் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள். ‘‘செங்கல்லில் வீடு கட்டுவதற்கும், இந்தக் கல்லுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பொறியாளர்கள் பெரும்பாலும் கட்டுமானத்திற்கு இக்கல்லையே பரிந்துரை செய்கின்றனர். கற்கள் சரியான அளவில் இருப்பதால் சிமென்ட் கலவை குறைவாகிறது’’ என்கிறார் கட்டுமானத் தொழிலைச் செய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ராஜகோபால்.
மழை, வெயில் என எந்தக் காலத்திலும் உற்பத்தியாகித் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும், விலை ஏற்ற இறக்கமின்றி உள்ளதாலும் கட்டுமானங்களுக்கு இதனைப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment