Published : 05 Oct 2013 05:47 PM
Last Updated : 05 Oct 2013 05:47 PM
நீருக்கான பதற்றம் எப்போதும் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அபரிமிதமான நீர் எப்போதும் நம்மைத்தேடி வருகிறது. அதை அலட்சியம் செய்துவிட்டு நாம் நீருக்காகத் திண்டாடுகிறோம். மழைநீரை முறையாகச் சேமித்தாலே நீர்ப் பற்றாக்குறையைப் பெருமளவில் போக்கிவிடலாம்.
வடகிழக்குப் பருவமழை விரைவிலேயே தொடங்க உள்ளது. ஒவ்வொரு முறையும் மழை நீர் கடலில் கலந்து வீணாவது தொடர்கதையாகி விட்டது. மழை நீரை வீணாக்காமல் நிலத்தில் சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீரின் தரமும் மேம்படும்.
மழை நீரைச் சேமிக்க நாம் எடுக்கும் சிறு முயற்சியும், மனித குலத்தையும் காக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டடங்களில் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.
கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து, மழை நீரைத் தரைப் பகுதிக்குக் கொண்டு செல்ல வசதியாக, மழை நீர் வடிகுழாயை அமைக்க வேண்டும்.
வடிகுழாய்க்கு அல்லது கட்டடங்களின் அருகில் தரைப் பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்துக்குக் கசிவு நீர்க்குழி ஒன்றை செங்கல் கொண்டு அமைக்க வேண்டும். அதன்பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை, வடிகுழாய் மூலம் கசிவு நீர்க்குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும்.
முறையாக கசிவு நீர்க்குழி அமைத்தால், மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச்செய்யலாம். கசிவு நீர்க்குழியை சிமெண்ட் மூடியால் மூட வேண்டும்.
கட்டடம் அமைந்துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மழை நீரைச் சேமிக்க நீரூட்டல் கிணற்றை அமைக்கலாம். கட்டட வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளிக் கிணற்றையும் பயன்படுத்தலாம். கட்டடத்தில் இருக்கும் மழை நீர் வடிகுழாய்களை இணைத்துக் கிணறு இருக்கும் பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அங்கே வடிகட்டும் தொட்டி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை, வடிகுழாய் மூலம் பயன்பாட்டுக் கிணற்றில் செலுத்தி மழை நீரை ஊறச்செய்யலாம். இதுவரை மழை நீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால், தாமதமின்றி அதை உருவாக்கி மழை நீரைச் சேமித்து நீர் வளத்தைப் பெருக்கலாம். ஏற்கெனவே, மழை நீர் கட்டமைப்பு இருந்தால், மேற்கூறியபடி முறையாகப் பராமரிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT