Published : 03 Feb 2017 09:41 AM
Last Updated : 03 Feb 2017 09:41 AM
அது 2008-ன் அக்டோபர் மாதம். எனது அலுவலக நண்பர்கள் பலரும், குடும்பத்தினரோடு கேரளாவுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். சுற்றுலாவின் இறுதி நாளன்று மாலை, வேம்பநாடு ஏரியில் படகில் சுற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். வானில் அந்தி மயங்க ஆரம்பித்திருந்தது. எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ரோகிணி பிரமாதமாகப் பாடுவார். நாங்கள் அவரைப் பாடச் சொன்னோம்.
ஏரியில், சிவப்பாக ஒரு ஜோதிக்கல் இறங்குவதுபோல வேகமாக இறங்கிக் கொண்டிருந்த சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ரோகிணி சட்டென்று, ‘பால் போலவே… வான் மீதிலே… யார் காணவே… நீ காய்கிறாய்…’ என்று ஆரம்பிக்க, அந்த இடமே மௌனமானது. தொடர்ந்து அவர், ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா…’ பாடலை, மிக மிக நேர்த்தியாக, எந்தப் பிசிருமின்றி, அற்புதமாகப் பாடி முடிக்க, அனைவரும் அனிச்சையாகக் கைதட்டினோம்.
இது நடந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. அந்தச் சுற்றுலாவுக்குப் பிறகு ரோகிணியை என் மனைவி வேறு எங்கும் பார்க்கவில்லை. ஆனால் இன்றும் என் மனைவி அந்தப் பாடலை டிவியில் பார்க்கும்போதெல்லாம், “ரோகிணி மேடம் எப்படி இருக்காங்க?” என்று தவறாமல் கேட்டுவிடுவார். என் மனைவிக்கு ரோகிணியை நினைவுபடுத்த, அந்த ஒரு பாடல் மட்டுமே போதுமானதாக உள்ளது. ஆம். பழைய திரைப்படப் பாடல்கள் என்பவை, வெறும் பாடல்கள் அல்ல. வாழ்க்கையின் நினைவுகள்.
தீவிரமாகப் பாடல்கள் கேட்கும் பழக்கம், என் தந்தையிடமிருந்து எனக்கு வந்தது. எங்கள் வீட்டில் புதிய பாடல்கள், பழைய பாடல்கள், இந்திப் பாடல்கள் என்று நூற்றுக்கணக்கான கேசட்டுகள் இருக்கும். என் அப்பா இரவு அலுவலகம் விட்டு வந்தவுடனேயே, வீட்டில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிடும். நான் எனது பால்யத்தையும், டீன் ஏஜையும் ஒருங்கே கடந்த 80-கள் ஒரு இசைக்காலம். அந்த இசைக்காலத்தின் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா.
இளையராஜா அறிமுகமான ஐந்தே வருடத்திற்குள் நூறு படங்கள், வருடத்துக்கு 30, 40 படங்கள் என்று மலையிலிருந்து அருவி நீர் கொட்டுவதுபோல் இளையராஜாவிடமிருந்து இசை கொட்டிக்கொண்டேயிருந்தது. நாங்கள் தீராத தாகத்துடன் அதனை அருந்திக் கொண்டேயிருந்தோம்.
எங்கள் வீட்டில் கேசட்டுகள் மட்டுமல்லாமல், நான்கைந்து அட்டைப் பெட்டிகளில் என் தந்தை சேகரித்த பழைய பாட்டுப் புத்தகங்களும் இருக்கும். அதில் இஸ்திரிப் பெட்டி, லவங்கி என்று கேள்வியேபட்டிராத படங்களின் பாட்டுப் புத்தகங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்தக் கதையின் பாதிச் சுருக்கத்தைக் கூறி, மீதி வெள்ளித்திரையில் என்று போட்டிருப்பார்கள். முடிவு தெரியாத அந்தக் கதைகள், இன்னும் என் மனதில் காற்றில் பறக்கும் சிறகுகள்போல் அலைந்து கொண்டேயிருக்கின்றன.
அவரைப் போலவே நானும் பாட்டுப் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு பாட்டுப் புத்தகத்தின் விலை 15 பைசா. டேப்ரிக்கார்டரில் பாடல்கள் ஓடும்போது, பாட்டுப் புத்தகங்களைப் பார்த்தபடி நானும் சேர்ந்து பாட, ஏராளமான பாடல்கள் மனப்பாடமாகிவிட்டன. இன்றும் குறைந்தது 500, 600 திரைப்படப் பாடல்களாவது எனக்கு மனப்பாடமாகப் பாடத் தெரியும்.
எனது பள்ளி நாட்களில் மழை பெய்ய ஆரம்பித்தால், பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பாடச் சொல்வார்கள். ஒரு முறை நான் ‘நிலா காயுது… நேரம் நல்ல நேரம்’ பாடலை மிக மிக உணர்ச்சிகரமாகப் பாடியபோது, டீச்சர் என் முதுகில் குச்சியால் அடித்துத் துரத்தியது மங்கலாக நினைவில் உள்ளது. ‘அடுத்த வாரிசு’ படத்தில் இடம்பெற்ற, ‘ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை வா’ பாடலுக்கு நான் பள்ளியில் ஆடிப் பரிசு வாங்கியிருக்கிறேன். பின்னர் உறவினர்கள் மத்தியில் அந்தப் பாடலை நானே பாடியபடி, ஆடிக் காண்பிப்பேன். சென்ற முறை திருச்சி சென்றபோதுகூட பெரியம்மா என் மகனிடம், “அந்தப் பாட்டை டிவில பார்க்குறப்பல்லாம் உங்கப்பனைத்தான் நினைச்சுப்பேன்” என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மே மாதம், நண்பர்களுடன் நான் கேரளத்தின், வயநாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் நீச்சல் குளம் இருந்தது. அதில் குளிக்கும்போது நானும், ராமச்சந்திரனும் ‘படித்தால் மட்டும் போதுமா?’ திரைப்படத்தின் சிவாஜி, பாலாஜி போல், ‘பொன் ஒன்று கண்டேன்… பெண் அங்கு இல்லை’ பாடலை பாடிக் களிக்க, அதை சிவகுமார் வீடியோ எடுத்தான்.
சென்னை திரும்பிய நான் அப்போது சிறுவனாக இருந்த எனது மகனிடம் அந்த வீடியோவைக் காண்பித்தேன். “நீச்சல் குளத்துல எல்லாம் குளிச்சீங்களா?” என்று கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். பிறகு என் தந்தை ஒரு முறை சென்னை வந்தபோது, நான் அந்த வீடியோவை அவரிடம் காண்பித்துவிட்டு, “இதைப் பார்த்துட்டு உங்க பேரன் முகத்தைத் திருப்பிப் படுத்துக்கிட்டான்” என்றேன். அதற்கு அவர், “டேய்… நீங்க பாட்டுப் பாடிக்கிட்டே குளிக்கிறத பார்க்குறப்ப, இந்த வயசுல எனக்கே பொறாமையா இருக்கு. அவனுக்கு இருக்காதா?” என்றார்.
இப்போது எனக்கு, அந்தப் பாடல், வெறும் பாடல் அல்ல. அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், நாங்கள் வயநாட்டின் சூஜிபாறா அருவியில் குளித்ததும், திருநெல்லிக் கோயிலுக்கு விடியற்காலையில் குளிரக் குளிரச் சென்றதும், என் மகனின் கோபமும், என் தந்தையின் பொறாமையும் நினைவிற்கு வருகின்றன.
இதே போல ஒரு முறை, நிறைய புது நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றிருந்தேன். அதில் ஒருவன் அதிகம் பேசாமல் நான்கு நாட்களும் அமைதியாகவே இருந்தான். நான்காம் நாள் இரவு, கொடைக்கானலிலிருந்து திரும்பியபோது அவன் என்னருகில்தான் அமர்ந்திருந்தான். பஸ் புறப்பட்டவுடன் குளிர் காற்று அடிக்க ஆரம்பித்தது. பஸ்ஸில் லைட்டை நிறுத்தினார்கள். திடீரென்று பஸ் ஸ்பீக்கரிலிருந்து ‘அழகி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘உன் குத்தமா... என் குத்தமா?’ பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
அந்த இருளின் குளிரில், அந்தப் பாடல் மெல்ல மெல்ல எங்களைக் கரைக்க, அந்த நண்பன் திடீரென்று, “இது எனக்கு வெறும் பாட்டில்ல…” என்று பேச ஆரம்பித்தான். நான்கு நாட்கள், எங்களுடைய எத்தனையோ சொற்களால் திறக்க முடியாத அவனுடைய மனக்கதவை, அந்த ஒற்றைப் பாடல் திறந்துவிட்டது. அன்று அவன் சொல்லிக்கொண்டு வந்த காதல் கதையை நான் எப்படி நண்பர்களே மறக்க முடியும்?
பழைய பாடல்களைக் கேட்பவர்களை, பாடுபவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பாடல் ஆரம்பித்த சில வினாடிகள் வரைதான் பாடலில் அவர்கள் கவனம் இருக்கும். பிறகு அவர்களின் கண்கள் மெல்ல அந்தரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும். பின்னர் அவர்கள் ஒரு தனி உலகத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அப்பாடல்கள் அவர்களை இறந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை வாழ வைக்கின்றன. எதையோ நினைத்துக்கொண்டு புன்னகைக்க வைக்கின்றன. எதையோ நினைத்து ரகசியமாக மனதிற்குள் கசிகிறார்கள். அவர்கள் ஒரு பொற்காலத்தின் பொன்னிற ஒளியில், சில மணித்துளிகள் நனைந்து பரிசுத்தமாகிறார்கள்.
இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பு, ரோகிணியிடம், “இப்படி ஒரு கட்டுரை எழுதப்போறேன். உங்க பெயரை எழுதலாமா?” என்றேன். “எழுதுங்க சார்” என்ற ரோகிணியிடம் “பாடல்ங்கிறது ஒரு காலகட்டத்தின் நினைவுகள்” என்றேன் நான்.
அவர், “ஆமாம் சார். நான் காயிதே மில்லத் காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்ப, ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாட்டுப் பாடி பிரைஸ் வாங்கியிருக்கேன். அப்புறம்… ‘பாலைவனச் சோலை’ படத்துல வர்ற ‘மேகமே… மேகமே…’ பாட்ட இன்டர்வெல்ல ஃப்ரண்ட்ஸ்கிட்ட பாடுவேன். இன்னைக்கி அந்தப் பாட்டை எல்லாம் கேட்குறப்ப, எனக்கு காயிதே மில்லத் காலேஜ் டேஸ்லாம் ஞாபகத்துக்கு வரும்…” என்று பேசிக்கொண்டேயிருந்த ரோகிணியின் கண்களில் கொஞ்சம் முயன்றால், என்னால் அந்த 80-களின் காயிதே மில்லத் கல்லூரியைப் பார்த்துவிட முடியும். பழைய திரைப்படப் பாடல்கள் என்பவை வெறும் பாடல்கள் அல்ல. அவை ஒரு வாழ்க்கையின் நினைவுகள்!
- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT