Published : 10 Jun 2016 12:51 PM
Last Updated : 10 Jun 2016 12:51 PM
கடந்த சில ஆண்டுகளின் புத்தகக் காட்சிகளில் இளைஞர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துவருவது ஆரோக்கியமான விஷயம். புத்தகக் காட்சிகளின் ஆரம்ப காலங்களில் கணினி தொடர்பான புத்தகங்கள் வாங்குவதிலேயே இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், போகப் போக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. புத்தகக் காட்சிகளுக்கு வரும் கல்லூரி மாணவர்கள், ஐடி துறையினர் ஆகியோர் தீவிர இலக்கியப் புத்தகங்களையும் வாங்க ஆரம்பித்தார்கள். கைகளில் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுஜாதா போன்றோரின் புத்தகங்களுடன் வலம்வரும் இளைஞர்களைப் புத்தகக் காட்சிகளில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிந்தது (இளைஞர்கள் என்றால் இளம் பெண்களும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்). இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?
இணையம்தான் காரணம். இன்றைய இளைஞர்களின் பள்ளி, கல்லூரிப் படிப்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவர்களின் மனதின் மொழி தமிழே. ஆகவே, இளைஞர்கள் கையில் இணையம் வந்த உடன் தமிழ் எழுத்தாளர்களின் இணையதளங்கள், ஃபேஸ்புக் பக்கங்களை அவர்கள் படிக்க ஆரம்பித்தார்கள்.
ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் தளங்களின் கணிசமான வாசகர்கள் இளைஞர்களே. மேற்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் இணையதளங்களில் தொடர்ந்து இளைஞர்களுடன் உரையாடல் நடத்தினார்கள். பிறகு, இணையம் சார்ந்தே நிறைய எழுத்தாளர்கள் உருவாகிப் பிரபலமானார்கள். வா. மணிகண்டன் போன்றோரை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக, இந்த எழுத்தாளர்களை வாசிக்கும் கல்லூரி, ஐடி இளைஞர்களும் தங்களுக்கென்று வலைப்பூக்களைத் தொடங்க ஆரம்பித்து, தங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். உலக சினிமா, இலக்கியம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றிய பதிவுகளை எழுதினார்கள். ஃபேஸ்புக்கின் வருகைக்குப் பிறகு வலைப்பூக்களிலிருந்து நகர்ந்து ஃபேஸ்புக் பக்கம் வந்தார்கள்.
அங்கே, எழுத்துக்களின் அளவு குறைந்து, எண்ணிக்கை அதிகரித்தது. எழுத்தாளர்களை ஆதரித்தும் விமர்சித்தும் நக்கலடித்தும் உடனடியாகப் பதிவிட்டு, அதற்கு லைக்குகளையும் ஆதரவு-எதிர்ப்புப் பின்னூட்டங்களையும் உடனடியாகப் பெற்றார்கள்.
இதற்கு முன்பு விமர்சகர்கள் செய்துவந்த வேலையை இந்த இளைஞர்கள் கையிலெடுத்துக்கொண்டார்கள். விமர்சகர்களிடத்தில் இருந்த ஆழம் இந்த இளைஞர்களிடம் இல்லாவிட்டாலும் யாரையும் பற்றி, எதையும் பற்றி எழுதலாம் என்ற கட்டற்ற சுதந்திரத்தின் காரணமாகத் தாங்களே விமர்சகர்களாக மாறினார்கள்.
இவர்கள் பலரும் எழுத்தாளர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் அவர்களுடன் உரையாடியும் வந்தார்கள். இந்த இளைஞர்களின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களும் மெல்ல மெல்ல இந்த உரையாடலில் கலந்துகொள்ள, வட்டம் விரிந்தது. உடனடியாக ஒருத்தரை விமர்சிக்க அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என்ற சுதந்திரத்தை இணையம் அளித்தது இந்த வட்டம் விரிவடைய ஒரு காரணம்.
இந்த வட்டத்தில் உள்ள எல்லோருமே தீவிரமாகப் புத்தகங்களைப் படித்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தீவிர வாசிப்பை நோக்கி நகர்ந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இணைய யுகம் தீவிர வாசிப்பை அழித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இதுபோன்ற சிறிய அளவிலான நன்மையும் ஏற்பட்டிருப்பதையும் பார்க்க வேண்டும்.
இவர்கள் பலரும் எழுத்தாளர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் அவர்களுடன் உரையாடியும் வந்தார்கள். இந்த இளைஞர்களின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களும் மெல்ல மெல்ல இந்த உரையாடலில் கலந்துகொள்ள, வட்டம் விரிந்தது.
உடனடியாக ஒருத்தரை விமர்சிக்க அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என்ற சுதந்திரத்தை இணையம் அளித்தது இந்த வட்டம் விரிவடைய ஒரு காரணம். இந்த வட்டத்தில் உள்ள எல்லோருமே தீவிரமாகப் புத்தகங்களைப் படித்தார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தீவிர வாசிப்பை நோக்கி நகர்ந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இணைய யுகம் தீவிர வாசிப்பை அழித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இதுபோன்ற சிறிய அளவிலான நன்மையும் ஏற்பட்டிருப்பதையும் பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் புத்தகங்களை வாசிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கி, புத்தகக் காட்சிக்கு இளைஞர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புத்தகங்களின் சந்தை விரிவடைந்ததும், அதற்கு இணையம் உதவியதும் முக்கியமான காரணம்.
வெகுசனப் பத்திரிகைகளிலும் தீவிர எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்துவருவதால் முந்தைய தலைமுறையைவிட இந்தத் தலைமுறையில் வாசிப்பு நோக்கிய ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டியும் வாசிப்பில் தங்களுக்குக் கிடைத்த தொடக்கப் புள்ளியைத் தாண்டி மேலும் தீவிரமான எழுத்துக்களைத் தேடி இளைஞர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. அடுத்ததாக, தமிழில் தீவிரமாகவும் அதிக அளவிலும் வாசிக்கப்போகும் இறுதித் தலைமுறையாக இது ஆகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
ஆரம்பக் கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி வரை தமிழை விடுத்து ஆங்கிலத்தையே நம் சமூகம் நாடுமென்றால் தமிழ் வாழும் என்று எதைக் கொண்டு நம்புவது? கல்விக்கும் பணிக்குமான மொழி ஆங்கிலமாகவும் மனதின் மொழி தமிழாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.
இதில் மாற்றம் ஏற்படுத்த முயலவில்லை என்றால் மனதின் மொழியும் ஆங்கிலமாக ஆகிவிடும் ஆபத்து ஏற்படும். அந்த நிலையை மாற்றுவதற்கு அரசாங்கமும் பெற்றோர்களும் மட்டுமல்ல இன்றைய இளைஞர்களும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
அணையாத ஒலிம்பிக் தீபம்போல் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழை எத்தனையோ தலைமுறைகள் ஏந்திக்கொண்டு வந்திருக்கின்றன. அதை மேலும் அணையாமல் எடுத்துச்செல்லும் பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. அதற்கு முதலில் செய்ய வேண்டியது தமிழில் வாசிப்பது.
இதோ, சென்னையில் புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கே சென்று நம் அறிவையும் கற்பனையையும் விசாலப்படுத்தும் நூல்களை வாங்குவதும் மூலம் இளைஞர்கள் தமிழின் தீபத்தை அணையாமல் ஏந்திச் செல்ல முடியும்!
உதவி, படங்கள்: நா. ரேணுகாதேவி, அ. பார்வதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT