Published : 26 May 2017 10:03 AM
Last Updated : 26 May 2017 10:03 AM
கோடைவிடுமுறையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதைக் கல்லூரி மாணவர்கள் விடுமுறை தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கிவிடுவார்கள். இந்த இரண்டு மாத இடைவெளியில் மனதுக்குப் பிடித்த பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சில மாணவர்கள் விரும்புவார்கள்.
சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் சிலர் ஆர்வம்காட்டுவார்கள். சிலர் படித்து படித்துக் களைத்துப்போய் விடுமுறை முழுக்கவும் சும்மா இருப்பதற்குத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செய்தும்காட்டுவார்கள். சிலரால் நீண்ட பயணங்கள் இல்லாத விடுமுறையைக் கற்பனைசெய்துபார்க்கவே முடியாது. இப்படிக் கல்லூரி மாணவர்களின் விடுமுறைக் கொண்டாட்டங்களின் பட்டியல் நீளமானது.
கவிதையோடும் இசையோடும்
பள்ளிப் பருவத்திலிருந்தே சமூக அக்கறையுடன் சிந்திக்கத் தொடங்கிய மாணவர்தான் ஃபதின். தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘விஸ்.காம்’ இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர், கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழித்துவருகிறார். இவர் 12-ம் வகுப்புப் படிக்கும்போது ‘6MB’ என்ற தன்னார்வல அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இசையின் மூலம் சமூக விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுத்துவரும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் இவர். இந்த விடுமுறையில் கவிதைத் திறமையை வளர்த்துக்கொள்வதற்காகத் தினமும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குச் சென்று தமிழ்க் கவிதைகளைப் படித்துவருகிறார்.
பாரதிதாசன், அப்துல் ரகுமான், வைரமுத்து போன்றவர்களின் கவிதைகளை வாசித்துவரும் இவர் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பான புத்தகங்களையும் வாசிக்கிறார். “எனக்கு இரண்டு மாத கோடை விடுமுறை. முதல் மாத விடுமுறையை வாசிப்பதற்கும் கவிதை எழுதுவதற்கும் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு பியானோ மிகவும் பிடிக்கும். அடுத்த மாதம் முழுவதும் பியானோ கற்றுக்கொள்ளப்போகிறேன்” என்று சொல்லி அசத்துகிறார் ஃபதின்.
- ஃபதின்
மே 28 அன்று வரும் உலக பசி தினத்தை ‘ஃபுட் பேங்க் இந்தியா’ அமைப்பு சென்னையில் கொண்டாடுகிறது. அதற்கான தமிழ்ப் பிரசாரப் பாடலை எழுதியிருக்கிறார் ஃபதின். உணவு வீணாக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வு, பசியின் கொடுமை ஆகியவற்றை விளக்குகிறது அந்தப் பாடல். இந்த மாத இறுதியில் நண்பர்களுடன் இணைந்து கல்வி பற்றிய விழிப்புணர்வுப் பேரணியையும் ஒருங்கிணைக்கவிருக்கிறார்.
“நாம் வாழும் சமூகத்துக்குப் பயன்படும் வகையில் விடுமுறையைக் கழிக்க விரும்புகிறேன். மோசமான சமூகத்தில் வாழ்கிறோம் என்று புலம்பிக்கொண்டிருப்பதைவிட அதை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கேற்ப இந்த விடுமுறையை என்னால் முடிந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்கிறார் ஃபதின்.
ஹாலிவுட் கொண்டாட்டம்
விடுமுறையில் மட்டுமே பிடித்ததைச் செய்ய முடியும் என்ற நிலையில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறைப் படிப்புகளைப் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலைமை அதுதான். அதனால், அவர்கள் விடுமுறையில் தங்களை முழுமையாக ‘ரீசார்ஜ்’செய்துகொள்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான் குறிப்பிட்ட வகையான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அதைப் பார்த்து முடிப்பது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘வேதிப் பொறியியல்’ நான்காம் ஆண்டு படிக்கும் ராகவன் அப்படிப்பட்ட ஒருவர்தான்.
- ராகவன்
திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் இவர். தந்தையுடன் சேர்ந்து பல படங்களைப் பார்த்திருக்கிறார். ஹாலிவுட் நடிகர்கள் பலரின் திரைப்படங்களைத் தந்தைதான் இவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “இந்த விடுமுறையில் ஒரு மாதம் ‘இன்டர்ன்ஷிப்’ செய்கிறேன். மற்ற நாட்களில் தினமும் இரண்டு ‘ஹாலிவுட்’ திரைப்படங்கள் பார்க்கிறேன். பெரும்பாலும் ‘ஆக் ஷன்’ திரைப்படங்கள்தான். திரைப்படங்களைப் பார்த்து முடித்த பிறகு, அவற்றின் பின்னணித் தகவல்களை இணையத்தில் படிக்கவும் செய்கிறேன். இதனால் ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ” என்கிறார் ராகவன்.
பகுதிநேரப் பணி தரும் நிறைவு
கல்லூரியில் படிக்கும்போதே பொறுப்புடன் பகுதி நேரத்தில் பணியாற்றும் மாணவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிமாகிக்கொண்டிருக்கிறது. இந்த மாணவர்கள் பகுதிநேரப் பணி, கல்வி என இரண்டையும் திறம்படக் கையாள்கிறார்கள். ஜெயா சக்தி பொறியியல் கல்லூரியில் ‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்’ படிப்பை முடித்திருக்கும் கே. ஸ்ரீவத்ஸன் அப்படியான ஒருவர்.
நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேரமாகச் சில வேலைகளைச் செய்திருக்கிறார். இப்போதும் பகுதிநேரமாகச் சில ‘மெக்கானிக்கல்’நிறுவனங்களின் குறுகியகாலத் திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
களப்பணிகள், மேற்பார்வை என இந்தப் பகுதிநேரப் பணி அனுபவம் சுவாரசியமாக அமைந்தது என்றும் பத்து நாட்கள் ஒரு திட்டத்தில் பணியாற்றியதற்காக ரூ. 6000 சம்பளமும் கிடைத்தது என்றும் மகிழ்ச்சியாகக் கூறுகிறார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக ‘ஃப்ரண்டஸ் ஆஃப் போலிஸ்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறார்.
- ஸ்ரீவத்ஸன்
“இரவில் காவல்துறையுடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபடுவது, காவல் துறையினருக்குக் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உதவுவது என அந்தப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்க ‘ஃப்ரண்டஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்புடன் பணியாற்றுவதும் உதவும் என்று நம்புகிறேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ஸ்ரீவத்ஸன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT