Published : 26 Aug 2016 01:17 PM
Last Updated : 26 Aug 2016 01:17 PM
“பார்த்தவுடனேயே வர்றதுதான்டா காதலு. பார்க்க… பார்க்க… வந்தா அது பேரு காஜிடா.” செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் வரும் ஒரு வரி வசனம் இது. அதீத விருப்பத்தின் கொச்சை வழக்குதான் ‘காஜி’. மெட்ராஸின் பேச்சு வழக்கில் இருக்கும் இந்த வார்த்தையை கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பேசிக் கேட்டிருக்கலாம்.
“அவன ஏன்டா ஓப்பனிங் ஆட அனுப்பிச்சீங்க? சரியான ஓவர்-காஜாச்சேடா அவன்” என்று, தான் இருக்கும் சொந்தக் குழுவிலிருந்தே ஒருவருக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது என்றால், அவருக்குப் பேர்தான் ‘ஓவர்-காஜி’. அதாவது, அவர் ஐந்து பந்துகளில் ரன் எடுக்க முயற்சி செய்ய மாட்டார். ஆறாவது பந்தில் ஒரு ரன் எடுப்பார். இதன் மூலம் அவரே அடுத்த ஓவரையும் ஆடுவார். இதற்குப் பெயர்தான் ஓவர்-காஜி. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப இதன் அர்த்தங்கள் வேறுபடுவதும் உண்டு.
மொழிகளின் சங்கமம்
உண்மையில் மெட்ராஸ் பாஷை என்பதில் செங்கல்பட்டு, வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிழைப்புத் தேடிப் பட்டணம் வந்தவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள், நவாப் ஆளுகையின் கீழ் வாழ்ந்த உருது, அரபு, தெலுங்கு பேசும் மக்கள், வடநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆகியோரின் பேச்சு மொழிக் கலப்பு வெகு காலத்துக்கு முன்பே இருந்துவந்திருக்கிறது.
“என்ன கேட்டுக்கிட்டா அவனுக்குக் கடன் கொடுத்தே… நான் ஜவாப்தாரி இல்லப்பா”
“ரீஜென்டா சொல்றேன் போயிடு”
“நாஸ்தா ரெடியா?”
“ஜல்தி… ஜல்தி…”
இந்த வரிகளிலிருந்தே மெட்ராஸ் தமிழில் எவ்வாறு பிற மொழிகள் ‘மிக்ஸ்’ ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். (நாஸ்தா உருது மொழியில் காலை உணவு. ஜவாப், ஜல்தி போன்றவை இந்தி. ‘டீசன்ட்டா’ என்பதன் பிறழ் வடிவம்தான் ரீஜென்ட்!).
“ஜார்ஜ் டவுன் பகுதியில் அமெரிக்கர்களிடம் அமெரிக்க ஸ்லாங்கிலும், பிரிட்டிஷாரிடம் பிரிட்டிஷ் ஸ்லாங்கிலும் பேசும் ரிக்ஷாக்காரர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்” என்கிறார், நீண்ட காலமாக மெட்ராஸ் பேச்சு மொழியைக் குறித்து அவதானித்துவரும் மூத்த பத்திரிகையாளர் சிவகுமார். ‘மிரட்சி’ என்னும் வார்த்தையின் திரிபே, இன்றைக்கு சென்னை மக்களிடம் பரவலாகப் புழங்கும் வார்த்தையான `மெர்சல்’ என்கிறார்.
ஊடகங்களில் மெட்ராஸ் பாஷை
பெரும்பாலும் மெட்ராஸ் பாஷை புழங்கும் இடங்களாக இருப்பவை வட சென்னையின் வண்ணாரப்பேட்டை, மூளகொத்தளம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கொண்டித்தோப்பு, திருவொற்றியூர், பாரிமுனை, எண்ணூர் போன்ற இடங்கள்தான். குடிசைப் பகுதிகள், குடிசை மாற்றுக் குடியிருப்புகள், நடைபாதைவாசிகள், கூலி வேலை, பீடி சுற்றுதல், எவர்சில்வர் பாலீஷ் செய்பவர்கள் போன்ற எளிய தொழில் செய்வோர்களின் பேச்சு மொழியே மெட்ராஸ் பாஷை. ஆனால் நாடகம், சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வடஇந்தியர்கள் தமிழ் பேசுவதற்கு `நம்மில்கி, நிம்மில்கி’ என்று ஒரு டெம்பிளேட் வைத்திருப்பார்கள். அதேபோல், மெட்ராஸ் பாஷைக்கும் ஒரு தவறான டெம்பிளேட்டை காலம்காலமாக வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்குப் பல திரைப்படங்களில் வில்லன்கள், சில சமயம் ஹீரோக்கள், சில நகைச்சுவை நடிகர்கள் பேசும் பாஷை மெட்ராஸ் பாஷையே இல்லை. ‘ப்யூர்’ மெட்ராஸ் பாஷை பேசிய ஒரே நடிகர் சந்திரபாபு மட்டும்தான்!
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கு வேறு வேறு அர்த்தம் தொனிக்கப் பேசுவார்கள். உஷார் என்பதற்கு எச்சரிக்கை என்பது பொதுவான அர்த்தம். ஆனால் மெட்ராஸ் பாஷையில் இது தவிரவும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு காரியத்தை முடிப்பதற்கு 500 ரூபாய் தேவை என்றால் அந்தக் காரியத்தில் கூட்டுச் சேர்வதற்கான உரையாடல் இப்படி அமையும்:
“மச்சான் 200 ரூபா உஷார் பண்ணிக்க… மீதிய நாம் பாத்துக்கிறேன்.” ஒருவருக்குத் தெரியாமல் ஒரு பொருளை எடுப்பதற்கும் `உஷார்’ பண்ணிட்டியா என்பார்கள். காலத்துக்கு ஏற்றாற்போல் மெட்ராஸ் பாஷையிலும் சில சொற்களின் பிரயோகங்கள் மாறியிருக்கின்றன.
நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து உடனே கலைந்து செல்வதற்கு முன்பெல்லாம் பயன்பட்ட வார்த்தை ‘தவுடாவது’ (தவுடை ஊதினால் காற்றில் காணாமல் போவது போல). இதையே இப்போது `எஸ்’ ஆயிடு என்கிறார்கள். தட்டுனா ‘தாராந்துடுவே’ என்பது இன்றைக்கு `தஸ்’ ஆயிடுவே என்றாகிவிட்டது. பேஜாராயிட்டேம்பா, ஸ்டன்னாயிட்டேம்பா என்பதற்குப் பதில், இப்போது ‘ஜர்க்’ ஆயிட்டேம்பா என்கிறார்கள்.
சந்திரபாபுவின் நடிப்பிலும் ஜெயகாந்தனின் பல கதைகளிலும் மைய நீரோட்டமாக அச்சு அசலான மெட்ராஸ் பாஷை கலந்திருக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவற்றைத் தரிசியுங்கள்!
மெட்ராஸ் எண்கள்
மெட்ராஸில் பர்மா பஜார், சைனா பஜார், கொத்தவால்சாவடி என ஒவ்வொரு பகுதிக்குமான தனித்துவமான பாஷைகள் சம்பாஷிக்கப்படும். உதாரணத்துக்கு பர்மா பஜாரில் எண்களைக் குறிப்பதற்கு சில பிரத்யேக வார்த்தைகள் (கேவு -1, ராயம்-2, உத்ரம்-3, பணம்-4) பேசப்படுகின்றன. கொத்தவால்சாவடியில் தாவண்ட (1), தோண்ட (2), திருண்ட (3), தாத்தண்ட (4), கொச்சுண்ட (5), வள்ளுண்ட (6), பிச்சுண்ட (7), அத்தண்ட (8), தாயிண்ட (9), பில்லூண்ட (10), சரணம் (100), கிராஜி (1000).
சில வார்த்தைகள்... சில அர்த்தங்கள்
குதிர (செருப்பு), ஸீன் (வேறு ஏரியாவுக்கு போய் வம்பு செய்வது), அசால்ட் (லேசான பாதிப்பை உண்டாக்குவது), மிட்டா (மிகவும் சிறப்பானது), சப்பை (சிறப்புக்கு எதிரானது).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT