Last Updated : 11 Jan, 2014 03:41 PM

 

Published : 11 Jan 2014 03:41 PM
Last Updated : 11 Jan 2014 03:41 PM

ஒரே நாளில் வீட்டைச் சுத்தமாக்குவது எப்படி?

பரபரப்பான வேலைக்கு இடையே வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வாரயிறுதி மட்டும்தான். அன்றைக்குச் சீலிங்குகள் மற்றும் கப்போர்டுகளை சுத்தம் செய்வதைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்தாலே தலைசுற்றும். இதை எளிமையாகச் செய்து முடிப்பதற்கான ஒரே வழி, திட்டமிட்டு வேலைச் செய்வதே. எப்போது, எப்படி உங்கள் வீட்டைச் சுத்தம் செய்யப் போகிறீர்கள், அதற்கான பொருள்களை வாங்கி விட்டீர்களா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கீழ்க்கண்ட வேலைகளை வாரம் ஒரு முறை செய்தால் போதும், கிளீனிங் வேலைகள் சரசரவென முடிந்துவிடும்.

வீட்டின் முதல் அறையில் இருந்து சுத்தம் செய்யும் பணியைத் தொடங்க வேண்டும். பின்னர் உள்நோக்கிச் சுத்தம் செய்துகொண்டு செல்ல வேண்டும். மாடி வீடு என்றால், வீட்டின் கடைசி அறையில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே அடுத்த அறைக்குச் செல்ல வேண்டும்.

ஜன்னல்

சுத்தம் செய்வதற்கு ரொம்ப கஷ்டமான விஷயங்களில் ஒன்று ஜன்னல்கள். ஜன்னலைக் கழுவுவதற்கு, அரை கப் அமோனியா, 550 மி.லி. துடைக்கும் ஆல்கஹால், 1 தேக்கரண்டி டிஷ் வாஷர் மற்றும் 4.5 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி ஜன்னல்களுக்கான ஸ்லைடிங் பகுதிகளில் அழுக்கும், தூசியும் சேர்ந்து திறப்பதற்குக் கஷ்டமாவதற்கு முன்பாக, முதலிலேயே சுத்தம் செய்துவிடுவது நல்லது. அந்தப் பகுதியைப் பழைய, உலர்ந்த டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்து, பின்னர் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். கடைசியில் ஈரமான ஸ்பாஞ்சைக் கொண்டு துடைத்தெடுக்கவும்.

சமையலறை

ஸ்டவ் மற்றும் சமையல் மேசைகளில் மிச்சமிருக்கும் உணவுத்துணுக்குகளின் காரணமாகச் சமையலறை எப்போதுமே பாக்டீரியாக்களுக்கான சரணாலயமாக மாறிவிடுகிறது. டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சமையலறையை முதலில் மாப் செய்யவும், எல்லாப் பொருள்களின் வெளிப்புறங்களையும் ஈரத் துணியைக் கொண்டு துடைக்கவும். வெளிர் நிறப் பிளாஸ்டிக் பொருள்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் மேலிருந்து அழுக்குகளை நீக்க ஒரு பங்கு பிளீச் மற்றும் நான்கு பங்கு நீரில் ஊற வைத்துத் துடைக்கவும்.

குளியலறை

பொதுவான ஸ்பிரே கிளீனர்கள் அல்லது வினிகரையும் நீரையும் கலந்து சிங்க், டாய்லெட்டின் வெளிப்பகுதி மற்றும் குழாய்கள் போன்றவற்றைத் துடைக்கவும். டாய்லெட் பௌலை டிஸ்இன்ஃபெக்டண்ட் மற்றும் சோடாவைக் கலந்து கழுவவும்.

வரவேற்பறை

மென்மையான தோல் பொருட்களை, கிளீனர் மற்றும் கண்டிஷனரைக் கொண்டு சுத்தம் செய்யவும். சற்றுக் கடினமான தோல் பொருள்களைப் பிரஷால் துடைக்கவும். மரச் சாமான்களைச் சுத்தம் செய்யக் கிளீனரை உருவாக்கலாம். அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில், அரை கப் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் இவற்றை ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் கலந்துகொண்டு, நன்றாகக் குலுக்கித் துணியில் ஸ்ப்ரே செய்து துடைக்கவும்.

திரைச்சீலைகளைச் சுத்தம் செய்ய, உங்கள் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். அவற்றில் உள்ள அழுக்குகளை, உங்கள் டிரையரை மெதுவாக ஓடச் செய்து நீக்கலாம்.

கறை மீது தாக்குதல்

வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும்போது, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

துணிகளைத் தனித்தனியாகப் பிரிக்கவும். அதாவது வெளிர் மற்றும் அடர் நிறத் துணிகளைக் கலக்க வேண்டாம். அதேபோல மென்மையான அண்டர் கார்மென்ட் துணிகளை ஜீன்ஸ் போன்ற கடினமான துணிகளுடன் கலக்கக் கூடாது. மாறாக உள்ளாடைகள் போன்ற மென்மையான துணிகளை நெட்பேக்கில் போட்டுத் துவைக்கவும். கையால் துவைக்க அல்லது டிரைகிளீன் மட்டும் என்று குறிப்பிடப்பட்ட துணிகளை மெஷினில் பயன்படுத்தக் கூடாது.

நீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் காட்டன் அல்லது மிகவும் அழுக்கான ஆடைகளுக்கே உதவும், பட்டு போன்ற துணிகளுக்குக் குளிர்ந்த நீரே நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x