Published : 01 Feb 2014 04:05 PM
Last Updated : 01 Feb 2014 04:05 PM
“எனக்குப் பயமாக இருந்தது. வயிறெல்லாம் கலங்கியது. செத்துவிடுவோமோ என்று கூச்சலிட்டேன். என்னுடன் இருந்த எல்லாருமே கூச்சலிட்டார்கள். ஆனாலும் அந்த ரோலர் கோஸ்டர் மேலேயேறி இறங்கியபோது, தலை கிறுகிறு வென்று ஆனது. உடலையே சுருட்டியது போல உணர்ந்தேன். ஆனாலும் எனக்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத அனுபவம் அது. திரும்ப ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யவே விரும்புகிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தீம்பார்க் ஒன்றில் பயணம் செய்த ப்ளஸ் டூ மாணவன் ஹரீஸ் அரவிந்த்.
ராட்சத வடிவ ராட்டிணங்கள், தீம்பார்க்குகளில் உள்ள ரோலர் கோஸ்டர்கள், ஹாலிவுட் பேய் படங்கள், மனித குலத்தை அழிக்கப் புறப்படும் கற்பனை மிருகங்கள் பயமுறுத்தும் திகில் படங்கள், பிரம்மாண்ட மால்களில் குழந்தைகளைப் பயமுறுத்தும் பேய் வீடுகள் என்று திகில் அனுபவம் தரும் இடங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஏன் நமக்குப் பயம் தேவையாக உள்ளது?
யதார்த்த வாழ்வில் இல்லாத பரபரப்பும் திகிலும் நமக்கு ‘விளையாட்டு’ போல ஒன்று தேவைப்படுகிறது. அமெரிக்காவில் இயற்கையான சூழலில் ஒரு தண்ணீர்ப் பாம்பைக்கூடப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் மூன்று, நான்கு தலைமுறைக் குழந்தைகள் வளர்ந்துவிட்டன. அதனால் அவர்களைப் பயமுறுத்த பிரமாண்ட அனகோண்டா பாம்புகள் சினிமாவில் தேவையாக உள்ளன.
அது போலவே, நம் அன்றாடத்தில் எந்தப் பாத்திரமும் வகிக்காத பேய்களும் திரைப்படங்கள் வழியாக நூறாண்டுகளைத் தாண்டியும் பயமுறுத்தி வருகின்றன. 1896-ல் வெளிவந்த ‘தி ஹவுஸ் ஆஃப் த டெவில்’ படம்தான் முதல் பேய்படம்.
தேவையான பரபரப்பு
காலம்காலமாக நாம் நவீனமாகிக் கொண்டு வருகிறோம். அதற்கேற்றாற்போல, நம்மைத் திகிலுக்கும், பரபரப்புக்கும், பதற்றத்துக்கும் உருவாக்கும் ஊடகங்களையும் உருவாக்கியபடி இருக்கிறோம். மனிதர்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டுமே விரும்புவதில்லை. அவர்களுக்கு எதிர்மறையான உணர்வுகளும் தேவைப்படுகிறது. பரபரப்பும், ரத்த உஷ்ண அனுபவமும் அவசியமாக உள்ளன. அந்த அனுபவத்துக்காகக் குடும்பம் குடும்பமாகப் பயணம் செய்து பணம் செலவழித்து உலகம் முழுவதும் குழந்தைகளும், பெரியவர்களும் செல்கிறார்கள். ஏன்?
ஒரு பேய் படத்தைப் பார்த்து உண்மையிலேயே அந்தப் பார்வையாளன் அச்சம் கொள்கிறானா? அல்லது கிளர்ச்சி அடைகிறானா?
ஒரு பயங்கரமான அனுபவத்தை, நேரடி வாழ்க்கையில் அடைபவர் அந்த நிகழ்வு நடக்கும்போதே அதை அனுபவிக்கவோ, கிளர்ச்சி அடையவோ முடியாது. ஆனால் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யும்போதோ, திகில் படங்களைப் பார்க்கும் போதோ பயங்கரம் போன்ற மெய்நிகர் அனுபவத்தைப் பாதுகாப்பான சூழலில் பெறுகிறார். அத்துடன் அந்த மெய்நிகர் அனுபவம் தரும் நெருக்கடியிலிருந்து நிம்மதி அடைந்து, கீழிறங்கிச் செல்லலாம் என்ற நிச்சயமும் இருக்கிறது. எதிர்மறை அனுபவத்தின் வழியாக அந்தப் பார்வையாளனின் உடலும் மனமும் ஒரு நேர்மறையான ஆற்றலை அடைகிறது.
பொதுவாக நமது வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்போமானால், நம்மால் மறக்கவே இயலாத சம்பவங்கள் அனைத்தும் கொஞ்சம் பயங்கரத்தையும், அதிர்ச்சியையும் வைத்திருப்பவைதான்.
நாம் ஏன் திகிலுணர்வை விரும்புகிறோம் என்பதற்கான பதில் நாம் உணர்வுரீதியான தீவிரத்தன்மையை விரும்புகிறோம் என்பதுதான். ஏனெனில் நமது அன்றாடத்தில் நாம் செய்யும் பெரும்பாலான காரியங்கள் தீவிரமற்றவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT