Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

செல்லமாய் வளர்த்த மாட்டுக்கு சின்னதாய் ஒரு சிலை!

போற்றுதலுக்குரிய சாதனை கள் படைத்தவர்களுக்கு சிலைகள் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். போற்றி வளர்த்த மஞ்சுவிரட்டு மாட்டுக்காக ஊர் முகப்பில் சிலை வைத்திருக்கிறார் சிராவயல் அம்பலக் காரர் வெள்ளைச்சாமி.

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளைப் போல சிராவயல் மஞ்சுவிரட்டும் தென்மாவட்டங்களில் பிரபலம். பிள்ளையார்பட்டிக்கு கூப்பிடு தொலைவில் உள்ளது சிராவயல். இங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலாக தை 3-ம் தேதி மஞ்சுவிரட்டை விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறது சிராவயல் அம்பலக்காரர் குடும்பம். லட்சம் பேருக்கு மேல் கூடும் இந்த மஞ்சுவிரட்டு திருவிழாவுக்கான மொத்த செலவும் அவர்கள் வீட்டுச் செலவு!

இந்த கிராமத்தின் சார்பிலும் ஒரு மஞ்சுவிரட்டு மாடு வளர்க்கிறார்கள். மூன்று மாத கன்றிலிருந்து அம்பலக்காரர் வீட்டில் செல்லமாய் வளரும். வயது தளர்ந்துவிட்டால், அடுத்த கன்றை எடுத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊரில் எல்லோருக்கும் கட்டுப்படும் பரம சாதுவாய் இருக்கும் இந்த மாடு, மஞ்சுவிரட்டு திடலுக்குப் போனால் ‘டெரராகி’விடும். சிராவயல் மாடு இதுவரை யார் கையிலும் சிக்கியதில்லை என்பது மஞ்சுவிரட்டு சரித்திரம்!

இப்போதும் சிராவயலில் ஒரு மஞ்சுவிரட்டு வாரிசு வளர்கிறது. இதற்கு முன்பு இறந்துபோன மாட்டுக்குத்தான் ஊர் முகப்பில் சிலை வைத்திருக்கிறார் அம்பலக்காரர்.

‘‘2008ம் வருஷம் அந்த மாடு இறந்துபோச்சு. அந்த நேரத்துல மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்துல வழக்கு தீவிரமா நடந்துட்டு இருந்துச்சு. இனிமே மஞ்சுவிரட்டே நடத்த முடியாமப் போயிரும்கிற நிலை இருந்துச்சு. அப்பதான் ஊர் முகப்புல, நாங்கள் போற்றி வளர்த்த மஞ்சுவிரட்டு மாட்டுக்கு சிலை வைக்க முடிவெடுத்தோம்.

மஞ்சுவிரட்டு மாடுகளுக்குன்னு ஒரு சக்தி இருக்கு. அதனால, மஞ்சுவிரட்டு மாடுகள் இறந்துட்டா எரிக்கிறதில்ல. காக்கா, கழுகு கொத்தித் தின்னுட்டுப் போகட்டும்னு காட்டுல கொண்டுபோய் போட்டுருவோம். அந்த மாட்டையும் அப்படித்தான் போட்டுருந்தோம். மூணு மாசம் கழிச்சு அதோட மண்டை ஓட்டை எடுத்துட்டு வந்து வைச்சு, இந்த சிலையை அம்சமா வடிவமைச்சோம்’’

மாட்டுச் சிலை மீது கைபோட்டபடி சொன்னார் சிராவயல் அம்பலக்காரர் வெள்ளைச்சாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x