Published : 03 Mar 2017 10:56 AM
Last Updated : 03 Mar 2017 10:56 AM

கனவுகளின் மனிதன்!

இந்தக் கட்டுரையில் வரும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையே. கற்பனையல்ல!

“ஆட்டோ...”

க்க்க்ச்ச்ச்...க்ர்ர்ர்....

“எங்க போகணும்...”

“மவுண்ட் ரோடு... எவ்ளோ”

“ஹண்ட்ரட் ருபீஸ் சார்..”

“இல்லைங்க. நான் ரெகுலரா போறேன். 80 ரூபாதான்”

“சார்.. சண்டே சார். கொஞ்சம் பார்த்துக்குடுங்க..”

“இல்லை. 80 ரூபாதான்..”

“சரி ஏறுங்க..”

“சார். நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா. தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”

“சொல்லுங்க..”

“உங்க கால்.. பிறந்ததிலிருந்தே இப்படியா. இல்ல ஏதாவது ஆக்ஸிடென்ட்டுல..?”

“ஆக்ஸிடென்ட். ஒரு ஷேர் ஆட்டோகாரன் இடிச்சிட்டான்..”

“ஃப்ராக்சரா..?”

“ம்... அந்த மாதிரிதான்..”

“ஓ.. அப்படியா. சாரி சார்..”

“ஏன் கேட்கறீங்க..”

“இல்ல.. என்னோட ஸ்கிரிப்ட்ல இப்படி ஒரு சீன் ஒண்ணு இருக்கு...”

“ஓ.. நீங்க ரைட்டரா..”

“இல்ல சார். சினிமாவுல ட்ரை பண்ணிட்டிருக்கேன். அதுல ஒரு காமெடியன் ஹேண்டிகேப்ஸ் எல்லாத்தையும் கிண்டல் பண்ணுவான். கடைசியில அவனுக்கும் இப்படி ஒரு நிலைமை வரும். அப்போ அவன் தான் கிண்டல் அடிச்சவங்ககிட்ட சொல்வான்: ‘இப்பத்தாண்டா உங்க கஷ்டம் எல்லாம் புரியுதுன்னு..”

“ம்.. குட். எப்போதிலிருந்து சினிமாவுல இருக்கீங்க..”

“ஒன்றரை வருஷமா இருக்கேன் சார். நமக்கு மதுரைப் பக்கம், வண்டியூர் சார். சினிமாவுல டைரக்டராகணும்கிற கனவோட சென்னைக்கு வந்தேன். நம்ம தலையெழுத்து அப்படி. யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டாக்கூட சேர முடியலை. அதனால, இப்போ பாட்டு எழுதறதுக்கு சான்ஸ் தேடிட்டிருக்கேன் சார்..”

“சூப்பர். பாட்டுகூட எழுதுவீங்களா..”

“ஆமா. சார். இப்போ ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சே. அப்போகூட அதை வெச்சு நானா சொந்தமா மெட்டுப் போட்டு, ஒரு பாட்டு எழுதியிருக்கேன். கேட்கறீங்களா...”

“ம்..”

“ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுடா

தமிழனின் வீரம் சொன்ன மல்லுக்கட்டுடா

தமிழ் மணம் வீசி வரும் மல்லி மொட்டுடா

மறத் தமிழனின் கலை இந்த ஜல்லிக்கட்டுடா...”

“நல்லாருக்குங்க..”

“இன்னொன்னு. இது லவ் ஸாங்கு சார்..

கட்டிக்கிற ஆசை வந்து நெஞ்ச உலுக்குதடி

குட்டிகுரா பவுடரைப் போல காதல் தெறிக்குதடி

வாழைப்பூ வாசம் என்னை சுண்டி இழுக்குதடி

தோளைத் தொட்டுப் பார்த்ததுமே சொர்க்கம் தெரியுதடி..”

“சூப்பருங்க. சான்ஸ் ஏதாவது கிடைச்சுதுங்களா..?”

“என்னை மாதிரி புதுசா வந்திருக்கிற சில மியூஸிக் டைரக்டர்கள் அப்பப்போ கூப்பிடுவாங்க. ஆனா இன்னும் ஏதும் அமையலை. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா. முட்டி மோதிக்கிட்டுத்தான் இருக்கேன் சார். அதுவரைக்கும் பொழைப்பு ஓடணும் இல்ல. அதான் ஆட்டோ..”

“ம்.. உங்க பேர் என்னங்க..”

“முத்துக்குமார் சார்..”

“அட..”

“எல்லோரும் இப்படி ஆச்சரியமா பார்க்குறதாலதான் என் பேரை மாத்தி வெச்சுக்கலாம்னு இருக்கேன் சார். அந்தக் கவிஞனுடைய பேருக்கு ஏதோ நம்மால ஆன மரியாதை..”

“ம்.. நல்லா பேசுறீங்க..”

சிரிப்பு.

“இங்கதான். ரைட்ல கட் பண்ணுங்க..”

க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்...க்க்ச்ச்ச்...

“இந்தாங்க..”

“சார் 20 ருபீஸ் சேஞ்ச் இல்லையே..”

“பரவாயில்ல வெச்சுக்கோங்க. அந்த இருபது ரூபாய் உங்க நம்பிக்கைக்காக..”

“ஐயோ வேண்டாம் சார். நான் உழைச்சு சம்பாதிக்கிறது எனக்குப் போதும். ஒரு நிமிஷம் இருங்க. சில்லறை வாங்கிட்டு வந்துடறேன்..” என்று சொல்லிவிட்டு ஆட்டோவிலிருந்து இறங்கினார்.

நான் அதிர்ந்தேன். அவரின் கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த பெட்டிக் கடையில் சில்லறை மாற்றிவிட்டு வந்தவரின் கைகளைப் பிடித்துக் குலுக்கினேன். புன்னகைத்தார். அவரின் நேர்மைக்காகவாவது அவரின் கனவுகள் நிஜமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x