Last Updated : 08 Mar, 2014 12:45 PM

 

Published : 08 Mar 2014 12:45 PM
Last Updated : 08 Mar 2014 12:45 PM

ராஜராஜ சோழனின் முதல் போர்

காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது.

காந்தளூர்ச் சாலை

காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.

போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. தனுர்வேதம் எனப்படும் வில்வித்தைப் பயிற்சி, களறிப்பயிற்சி, வர்மம் ஆகிய போர்க் கலைகள் போதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ராஜாங்க நிர்வாகமும் பயிற்றுவிக்கப்பட்டுவந்துள்ளது.

இச்சாலையின் போதகர்கள் சட்டர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். இச்சாலையின் தலைமைச் சட்டர் பொறுப்பு மதிப்பு மிக்க ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. தலைமைச் சட்டருக்கு ஓர் அரசனுக்குரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இச்சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

இங்குப் பல்வேறு சிறு சிறு நாடுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும், படைத் தளபதிகளும், இளவரசர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். அக்கால கட்டத்தில் நடந்த பல முக்கிய அரசியல் நடவடிக்கைகளிலும், போர்களிலும் இச்சாலையின் பயிற்சி முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது .

ராஜராஜ சோழனும் பாஸ்கர ரவி வர்மனும்

கி.பி. 985ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் ராஜராஜ சோழன். இவருடைய தந்தை சுந்தர சோழன் ஆவர். காந்தளூர்ச் சாலைப் போர் ராஜராஜனின் முதல் போராகப் போற்றப்படுகிறது.

பாஸ்கர ரவி வர்மனின் காலகட்டம் கி.பி. 962இலிருந்து கி.பி. 1019வரை. இவருடைய ஆட்சியில் சேர நாடு, குடமலை நாடு, வேணாடு, கொங்கு நாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அதவாது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. மிக நீண்ட ஆட்சிக் காலம் உடைய சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மன். 58 ஆண்டுக் காலம் இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் யூதர்களுக்குச் சமூகத்தில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரமாக இவர் யூதர்களுக்குத் தாமிரப் பட்டயம் (Jewish Copper Plate) அளித்துள்ளார் . இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் சேர நாட்டில் காந்தளூரில் போர்ப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது.

போருக்கான பின்புலம்

முற்காலச் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பின் உறையூரில் சிற்றரசர்களாகக் குறுகியிருந்த சோழர்கள், விஜயாலய சோழன் காலத்தில் கி.மு. 9ஆம் நூற்றாண்டில்தான் எழுச்சி பெற்றனர். அவர், முத்தரையர்களை வீழ்த்தித் தஞ்சையைக் கைப்பற்றி, தஞ்சைச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தார். இதன் பிறகு பெரும் செல்வாக்குடன் வளர்ந்த சோழ சம்ராஜ்ஜியம் பராந்தகச் சோழன் காலத்தில், ராஷ்டிரகூடர்களுடன் நடந்த தக்கோலம் (அரக்கோணம்) போரில் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது.

இப்போரில் பராந்தகனின் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டார். பராந்தகனின் இறப்புக்குப் பின் அவருடைய இளைய மகன் கண்டராதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கண்டராதித்தன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் பலவீனமடைந்தது.

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. அவர் ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டார். ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். சேர, பாண்டிய, ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர்ச் சாலையின் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி எனச் சொல்லப்படுகிறது.

காந்தளூர்ச் சாலைப் போர்

தொண்டைநாடு, கொங்குநாடு, பாண்டியநாடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய ஒரு வலுவான அரசாக மாறியிருந்த சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலையாகும். நுட்பமான போர்த் தந்திரங்கள், தற்காப்புக் கலைகள், தாக்கும் நுட்பம் ஆகியவை அங்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் இது போன்ற போர்ப் பயிற்சிக் கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர்ச் சாலையில் பயிற்சிபெற்ற வீரர்கள்தான் என்பதால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.

முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்குத் தன் தூதுவரை அனுப்பிப் பேச்சு வார்த்தை நடத்த முயன்றான். ஆனால் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட சோழ நாட்டுத் தூதுவரைச் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மா சிறைபிடித்தார். இதுதான் ராஜராஜன் உடனடியான படையெடுப்புக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

ராஜராஜனுக்கும் பாஸ்கரவர்மனுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்ததது எனவும் சொல்லப்படுகிறது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சேரர்களின் கப்பல்களை வீழ்த்தி வெற்றியடைந்தார்.

‘காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி’ என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பது கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம். இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றி பெற்றான். காந்தளூர்ச் சாலை சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

சர்ச்சைகளும் விவாதங்களும்

காந்தளூர் சாலைப் போர் குறித்தான விவாதங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும் இப்போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்ததெனவும் சொல்லப்படுகிறது. ராஜராஜன் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ள சொற்களின்படி, (‘காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி’) கலம் என்றால் கப்பல் எனப் பொருள் கொண்டு சில ஆய்வாளர்கள் இது போன்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காந்தளூர்ச் சாலை என்பது பிராமணர்களுக்குச் சோறிடும் ஒரு கூடம் என்றார். அங்குச் சோறு அடுவதை சேர மன்னன் நிறுத்திவிட்டான். சோழ மன்னன் ராஜராஜன் அதில் தலையிட்டுக் காந்தளூர்ச் சோற்றுச் சாலையில் உணவு வழங்க வேண்டியதை முறைப்படுத்தினர் என்னும் புதிய கருத்தை வெளியிட்டார். ஆனால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

செங்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ‘நடுகல்’லில் ‘சாலைய் மறுத்து அங்குள்ள மலைஆளர் தலை அறுத்து’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காந்தளூர்ச் சாலைப் போரில் தன்னை எதிர்த்த மலையாளர்களின் தலையை அறுத்தான் எனபதை அறிய முடிகிறது.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலே காந்தளூர்ச் சாலைப் போர் என நடன. காசிநாதன் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் மேற்கொள் காட்டப்படவில்லை.

ஆதாரங்கள் : 1.இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் – சி. இளங்கோ, அலைகள் வெளியீடு 2.இரஜராஜேச்சரன் – குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் வெளியீடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x