Published : 05 May 2017 11:58 AM
Last Updated : 05 May 2017 11:58 AM
உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டுப் போரோ ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினால் இரின் (IRIN)அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேருதவியாக இருக்கும். உலகின் மூலை முடுக்குகளில் நடைபெற்றுவரும் மோதல்களையும் அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது.
உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும் சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடகச் செய்திகளால் இந்தப் போர்கள் தொடர்பான செய்தியும் அவற்றின் பாதிப்புகளும் உலகின் பார்வைக்குத் தெரியவருகின்றன. ஆனால், மீடியாவின் கவனத்திலிருந்து விலகிய நிலையில் உலகின் பல பகுதிகளில் உள்நாட்டுப் போர்களும் ஆயுத மோதல்களும் நடைபெற்றுக்கொண்டிருகின்றன என்பது வேதனையான நிஜம்.
இவற்றில் பெரும்பாலான மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன என்பது இந்த வேதனையை இன்னும் தீவிரமாக்கக் கூடியது. இப்படி உலகம் மறந்த மோதல்களையும் இந்த வரைபடம் அடையாளம் காட்டுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதநேய நோக்கிலான உதவிகளை வழங்கிவரும் சேவை அமைப்பான இரின், உலகம் மறந்துவிட்ட மோதல்கள் குறித்துக் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது. ஆழமான தகவல்களைக் கொண்டுள்ள இந்தத் தொடர் வரிசையில் தற்போது உலகை உலுக்கும் மோதல்களைச் சுட்டிக்காட்டும் இணைய வரைபடத்தை இரின் அமைப்பு உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் மோதல் அல்லது போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிவப்புப் புள்ளியால் கவனத்தை ஈர்க்கின்றன. மோதல் நடைபெறும் இடத்தை இந்தச் சிவப்புப் புள்ளி குறிக்கிறது. மோதல் எவ்வளவு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புள்ளியின் அளவு குறிக்கிறது. சில இடங்களில் சிவப்புப் புள்ளி சற்றுப் பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஆண்டுக்கணக்கில் மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு புள்ளியையும் கிளிக் செய்வதவுடன் மோதல் தொடர்பான மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மோதலுக்கான காரணம், எவ்வளவு காலமாக நடைபெறுகிறது, மோதலின் தற்போதைய நிலை ஆகியவை தனியே பெட்டிச் செய்தியாகத் தோன்றுகின்றன.
தெற்கு சூடானின் எல்லைப் பகுதியில் புளு நைல் எனும் மோதல் கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போர் மூன்றாவது சூடான் உள்நாட்டுப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. தெற்கு சூடான் தனி நாடாக உருவாக வழிவகுத்த இந்தப் போர் முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதலால் மக்கள் கடும் நெருக்கடிக்கு இலக்காகிவருவதாகவும், பசி பட்டினி என அவதிப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரே சிவப்பு வட்டங்களாகக் காட்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் மோதல்கள் நிகழ்கின்றன. மேற்காசியா, ஆசியா, பசுபிக் பிராந்திய பகுதிகளிலும் அதிக மோதல்களைக் காண முடிகிறது. இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திவரும் மோதலும் காஷ்மீர் பிரச்சினையும் இந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வட கொரியா, தென் கொரியா இடையிலான மோதல், யுக்ரைன் பிரச்சினை என இந்த மோதல்கள் விரிகின்றன.
இந்த வரைபடம் மூலம் உலக மோதல்களை ஒரு பறவைப் பார்வையாக அறிந்துகொள்ளலாம். ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மறக்கப்பட்ட மோதல்கள் பிரிவில் உள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம். இந்தக் கட்டுரைகள் உலகம் மறந்த மோதல்கள் தொடர்பான விரிவான தகவல்களை அளிக்கின்றன. பல்வேறு சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ், தெற்கு தாய்லாந்து , மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரிக்கும் தனிக் கட்டுரைகளும் இருக்கின்றன.
உலக மோதல்கள் பற்றி அறிய: >http://www.irinnews.org/in-depth/forgotten-conflicts
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT