Last Updated : 26 Aug, 2016 01:19 PM

 

Published : 26 Aug 2016 01:19 PM
Last Updated : 26 Aug 2016 01:19 PM

சென்னை 377: "டங்காமாரி பசங்க இல்ல நாங்க!"

‘எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி’ இப்படியொரு சினிமா எப்போ வந்தது என நீங்கள் கேட்கலாம். ஆனால் ‘சங்கிமங்கி சங்கிமங்கியா... நாங்க எப்போதுமே அழுக்கு லுங்கியா’ன்னு சொன்னதும், ‘அட செம்ம ஹிட் கானாவாச்சே’ எனப் புருவம் உயருகிறதல்லவா! வட சென்னையின் இதயமான வியாசர்பாடியில்தான் அந்தப் பாடலின் உண்மையான ஹீரோக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ‘சென்னை வார’த்தையொட்டி இவர்களைச் சந்தித்தோம்.

ட்யூனுக்கு கானா...

கவிதையும் பாடலும் அருவி மாதிரி கொட்ட, ரம்மியமான சூழலும், அமைதியான மனநிலையும் கட்டாயம் தேவை என்பவர்கள் வட சென்னை வியாசர்பாடி கானா குணாநிதியையும் கானா முத்துவையும் சந்திக்க வேண்டும். எடுத்த எடுப்பில் மளமளவென பாட்டுக்கட்டுகிறார்கள் இந்த ‘கானா குயில்கள்’. ஒரு முறை இசையமைப்பாளரின் டியூனைக் கேட்டுவிட்டு அப்படியே பாட்டுக் கட்டும் திறம் படைத்தவர்கள் இவர்கள் என வியாசர்பாடி மக்கள் மெச்சுகின்றனர். நம்மிடம் பேசும்போதே, “சேரியில சுத்திக்கிட்டிருந்த கானா சினிமாவுக்குப் போயிரிச்சு தானா” என்று கணீர் குரலில் பாட்டுக்கட்டுகிறார் குணா. அடுத்து, “இந்து பேப்பரு” என கலக்குகிறார் துறுதுறு இளைஞரான குணா.

‘காஞ்சனா-2’ படத்தில் ‘சில்லட்டா பில்லட்டா’ என்கிற செம்ம அதிரடி கானா, ‘பிச்சைக்காரன்’ படத்தில் ‘பாழாப்போன உலகத்துல’ எனத் தத்துவ கானா இப்படி இதுவரை 15 தமிழ்த் திரைப்படங்களில் கானா பாடல்களைப் பாடி கலக்கியிருக்கிறார் குணா. நாமும் எஃப்.எம்., திரையிசையை வரிசை கட்டி வழங்கும் டிவி சேனல்களில் மானாவாரியாக இந்தப் பாடல்களைப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் கானா பாலா, மரண கானா விஜி இப்படி யாரோ தெரிந்த கானா பாடகர்தான் பாடியிருப்பார் எனக் கடந்துவிடுகிறோம்.

இழிவல்ல கானா

“நாங்களும் பாடுவோம்ல...” என எஸ்.கே.சபேஷ் சாலமோன் இசையமைப்பில் முத்து பாண்டியனும் குணாநிதியும் பாடிய ஆல்பம் கானா வட்டாரத்தில் சூப்பர் ஹிட். பொதுவாக கானா பாடல் என்றாலே இரங்கல் பாடல்கள் அல்லது பெண்களைக் கேலி செய்யும் பாடல்கள் என்கிற அபிப்பிராயம்தான் நிலவுகிறது. ஆனால் பெண்மையை, தாய்மையைப் போற்றும் பாடல்கள், விழிப்புணர்வுப் பாடல்கள், காதல் பாடல்கள், பக்திப் பாடல்கள் என விதவிதமான கானா பாடல்களை இந்த ஆல்பத்தில் கேட்டு ரசிக்க முடிகிறது. ‘மியூசிக் டார்ச்சர்’ என புஷ்பவனம் குப்புசாமி, ஆண்டனி தாஸ் ஆகியோரோடு இவர்கள் இணைந்து பாடிய கானா பாடல்களும் அசத்தல்.

வட சென்னை வியாசர்பாடி பகுதியில் பிறந்து வளர்ந்தவர் கானா புலிக்குட்டி குணாநிதி. “சாவு வீடுகள்ல 16வது நாள் காரியத்துல அப்பா பாடும்போதெல்லாம் சின்னதுல இருந்தே நானும் கூடவே போவேன். அப்படியே கேட்டுக் கேட்டு தானா கானா பாட ஆரம்பிச்சுட்டேன்” என்கிறார் குணா. சென்னை மாநகராட்சிப் பள்ளியில் 9-வதுவரை படித்த குணாவுக்குச் சாப்பிடும்போது, விளையாடும்போது, ஏன் தூங்கும்போதுகூட கானாதான்! அதனால் படிப்பு நின்றுபோனது. “பாதியிலேயே படிப்பை விட்டாலும் திருட்டு, அடாவடின்னு தப்பான வழியில போகாம இன்னைக்கு நாங்க கானா பாடகரா ஆகியிருக்கோம்னா கானா லோகநாதன் அண்ணாதான் காரணம்” எனப் பூரிக்கிறார் இவர். “ஆமா… நாங்க ‘டங்காமாரி’ பசங்க இல்ல. அதே நேரத்துல இந்தத் தொழிலுல ஆபத்தும் இருக்குங்க. ஏரியா ரவுடிங்க பாட வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போயிருவாங்க. அவங்க கேட்டதெல்லாம் பாடலைன்னா கழுத்துக்கே கத்திதான்” என்கிறார் கானா முத்து என்கிற முத்து பாண்டியன்.

பீ- பாய் வேலு, பீ- பாய் கலை

காசு தராத கானா

முத்துவின் தாத்தா, அப்பா, அத்தைகள் எனக் குடும்பத்தில் எல்லோரும் கானா பாடகர்கள். சிறு வயதில் பள்ளி அளவில் கால்பந்து வீரராகவும் கிறிஸ்தவப் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் கோரஸ் பாடகராகவும் ஜொலித்திருக்கிறார் முத்து. ஆனால் குடும்பச் சூழலால் படிப்பைத் தொடர முடியாமல் இப்போது கானா பாட்டுக்கட்டுகிறார். அதே நேரத்தில் சிதம்பரம், பெங்களூரு எனப் பல ஊர்களில் இவர்களுடைய கானா கச்சேரி மேடையேறுகிறது.

‘அனேகன்’ பட அதிரடி பாடல் ‘டங்கா மாரி ஊதாரி’ எழுதிய ரோகேஷ் இவர்களுடைய செட்தான். சொல்லப்போனால் அந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பு இவர்களுக்குக் கை நழுவி... இல்லை, வாய் நழுவிப் போனது. அதேபோல பல திரைப்படப் பாடல்களில் இவர்கள் இணைந்து பணிபுரிந்தாலும் உரிய அங்கீகாரமோ பணமோ கிடைக்காத நிலையில் வாடுகிறார்கள்.

குப்பத்து ஹிப்ஹாப்

“இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்... கூல்” என ஹிப்ஹாப் ஆடியபடியே நம்மிடம் வந்தார்கள் பீ-பாய் வேலுவும் கலையும். தலை நுனி மட்டும் தரையைத் தொட காற்றில் இவர்களது உடல் சிறகடித்து நடனமாடுகிறது. கண் இமைப்பதற் குள் மாயாஜாலம் செய்யும் வேலுவும் கலையும் வியாசர்பாடி ஹிப்ஹாப் பாய்ஸ். அதுவும் கலை மாற்றுத் திறனாளி என்பது அவர் நடனத்தை நிறுத்திவிட்டுப் பூமியில் கால் பதித்து நடக்கும்போதுதான் தெரிகிறது.

சொல்லப் போனால் ‘கத்தி’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தொடரி’ எனப் பல படங்களில் இவர்கள் திரையில் ஹிப்ஹாப் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மின்னல்போல சில நொடிகளில் திரையில் வந்து மறைந்துபோவதால் இவர்களுடைய முகம் நம் மனதில் பதியவில்லை.

15 வயதிலிருந்து பாரி முனை பூக்கடையில் லாரியில் மூட்டை ஏற்றும் வேலையை இரவு முழுக்கப் பார்த்துவந்த வேலு என்கிற வடிவேலனுக்கு டிவியில் நடன நிகழ்ச்சிகள் பார்த்து ஹிப்ஹாப் ஆசை தொற்றிக் கொண்டது. அப்படியே வேலை முடிந்தவுடன் விடியற்காலை நடந்தே மெரினா கடற்கரைக்குச் சென்று மாட்டான் குப்பம் சந்துரு என்பவரிடம் முதன் முதலில் ஹிப்ஹாப் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அப்படி வெறித்தனமாக நடனமாடத் தொடங்கியவர் இப்போது பல போட்டிகளில் பரிசுகள் பெறுவது, சினிமாவில் நடனமாடுவது என அடுத்தடுத்த கட்டமாக இப்போது அதே மெரினா கடற்கரையில் பால்ய நண்பர் கலையுடன் சேர்ந்து ‘ஆல் ஒன் பி பாய்’ என்கிற பெயரில் ஹிப்ஹாப் நடன வகுப்புகள் எடுக்கிறார்கள்.

அதிலும் கலை என்கிற கலைவாணன் தனக்கு இருக்கும் உடல்ரீதியான சவாலை மன உறுதியால் எதிர்கொள்கிறார். வழக்கமான நடன பாணிகளைவிட ‘ரிஸ்க்’ கூடுதலாக நிறைந்த ஹிப்ஹாப் நடனத்தை அவர் தேர்ந்தெடுக்கத் தன்னுடைய உடல்ரீதியிலான குறைபாடே காரணம் என்கிறார்.

இன்று நடனத்தை மட்டுமே உயிர் மூச்சாக சுவாசிக்கும் இவர்களுடைய கனவு, எப்படியாவது தமிழ் சினிமாவில் கோடம்பாக்கம் நடனக் கலைஞர் சங்கத்தின் உறுப்பினராகி ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆக வேண்டும் என்பதுதான்.

குணா, முத்து, வேலு, கலை மட்டுமல்லாமல் கால்பந்து விளையாட்டு வீரர்கள், கேரம்போர்டு சாம்பியன் எனப் பல திறமைசாலிகள் இந்த வியாசர்பாடியில் ‘எங்க ஊரு மெட்ராஸு இதுக்கு நாங்க தானே அட்ரஸு’ எனக் கம்பீரமாகக் குரல் எழுப்புகிறார்கள்.

படங்கள்: எல். சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x