Last Updated : 23 Sep, 2016 11:10 AM

 

Published : 23 Sep 2016 11:10 AM
Last Updated : 23 Sep 2016 11:10 AM

அலையோடு விளையாடு! 02 - லிம்கா சாதனையும் பக்கிங்ஹாம் வேதனையும்

வெறும் ஐந்து-ஆறு அடி தண்ணீர் ஓடிய தஞ்சை புது ஆறு என்னைக் கொஞ்சம் தத்தளிக்க வைத்தது. ஆழமே காண முடியாத கடலோ என்னைத் தட்டிக்கொடுத்து வரவேற்றது. அந்தத் தட்டிக்கொடுத்தலின் உற்சாகத்தில்தான், தேசிய அளவில் பேட்லிங்கில் புதிய சாதனையைப் படைத்தேன்.

கடலில் பேட்லிங் பயிற்சி எடுக்க ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஒரு கி.மீ., இரண்டு கி.மீ என்று பேட்லிங் பயணத்தின் தொலைவை அதிகப்படுத்திக்கொண்டே பயிற்சி எடுத்துவந்தேன்.

தேசியச் சாதனை

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நானும் நண்பர் செல்வமும், கடலில் அதிகத் தொலைவுக்கு பேட்லிங் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டோம். முதல் 30 நிமிடங்களிலேயே மூன்று கிலோமீட்டர் பயணித்ததை, எங்களுடைய ஜி.பி.எஸ். இடம்சுட்டி கருவி காட்டியது. ம்... குறுகிய காலத்தில் இது நல்ல முன்னேற்றம்தான் என்று பேட்லிங் துடுப்பைத் தொடர்ந்து வலித்தோம்... 50 நிமிடங்களில் ஐந்து கிலோமீட்டரைத் தொட்டிருந்தோம். வேகம் குறையவில்லை. அடுத்ததாக 90 நிமிடங்களில் ஏழு கிலோமீட்டரைக் கடந்தோம். நேரம் செல்லச் செல்ல, அதிக வேகத்தைத் தொடர்வது சாத்தியமில்லை.

அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற மீனவர்கள், ‘இதற்கு மேலே போகாதீங்க. காற்றின் திசை மாறும் நேரம் இது' என்று எச்சரித்தார்கள். அந்தச் சொல்லை மீறி நாங்கள் போனால், கரை திரும்புவது கடினமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்கள். கடலைப் படித்தவர்களின் அறிவுரையைப் புறக்கணிக்க முடியுமா? பேட்லிங் பலகையைக் கரையை நோக்கித் திருப்பினோம்.

பேட்லிங்கில் நாங்கள் அன்றைக்குச் சென்ற தொலைவு என்பது, கடலில் எங்களுடைய அதிகபட்சத் தொலைவு. எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கே அதுதான் அதிகம் என்று லிம்கா சாதனைப் புத்தகம் சொன்னது. கடலில் 90 நிமிடங்களில் 7 கி.மீ. தொலைவுக்குப் பேட்லிங் செய்தது, தேசிய அளவில் அதிகபட்ச தொலைவு சாதனையாக மாறியது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்தும், எளிதில் தரையைத் தொட்டுவிட முடியாத ஆழமும், விடை காண முடியாத பல ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் பொதிந்து வைத்திருக்கும் கடலன்னையின் மடியில், உயிருக்குப் பெரும்பாலும் ஆபத்து விளைவிக்காத ஒரு விளையாட்டு பேட்லிங் என்பது இந்தச் சாதனைக்குப் பிறகு புரிந்தது.

விழி திறந்த பக்கிங்ஹாம்

கடல் என்பது ஓர் கனவுலகம். தட்பவெப்ப நிலை, காற்றின் வீச்சு - திசை வேகம், காலநிலை ஆகிய மூன்று காரணிகளால் கடல் நீரோட்டத்தின் திசையும் வேகமும் மாறிக்கொண்டே இருக்கும். அலையும் அதற்குத் தகுந்ததுபோல் தாளமிடும். இதனால் தூண்டப்படும் பயத்தால், கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் (Surfing) பேட்லிங்குக்கும் மனிதர்களிடையே வரவேற்பு குறையும். ஆனால், உள்நாட்டு நீர்நிலைகளை மேற்கண்ட அம்சங்கள் பெரிதாகப் பாதிக்காது. முறையான பேட்லிங் பயிற்சிகள் மூலம், பயத்தையும் விரட்டி அடித்துவிடலாம்.

கடலைப் போலவே பக்கிங்ஹாம் கால்வாயில், நண்பர் செல்வத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீண்ட நேரத்துக்குப் பேட்லிங் செய்தேன். ஒவ்வொரு புள்ளியிலும் பயண நேரத்தைப் பதிவு செய்துகொண்டும், ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டும் எங்களுடைய பேடில் மிதந்து முன்னேறிக்கொண்டிருந்தது. கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் தாவரங்கள் அடர்ந்திருந்தன. கூழைக்கடா, நாரை, கொக்கு, மீன்கொத்தி வகை அரிய பறவைகள், இனப்பெருக்கத்துக்காக அந்தத் தாவரங்களில் தஞ்சம் புகுந்திருந்தன.

திடீரென அமைதியைக் குலைத்தது, ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம். அதிர்ந்து போய்த் திரும்பினால், ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று ஒருவர் பறவைகளை வீழ்த்திக்கொண்டிருந்தார். உடனடியாக அதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லாமல் இருந்தது. சரியான இடத்தில் கரையைத் தொட நேரம் பிடிக்கலாம் என்பது மட்டுமில்லாமல், எங்களிடம் தற்காப்புக்கு எந்த ஆயுதமும் இல்லை. வேறு வழியின்றிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இன்னொரு பக்கம் கால்வாயில் சாக்கடைத் தண்ணீர் பாய்ந்து வந்து கலப்பதையும் மலை போல் கொட்டப்பட்டிருந்த குப்பையையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தோம்.

சீரமைக்க முடியாதா?

காலம்காலமாக நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் தண்ணீரையும் உயிரினங்களையும் இப்படி அப்பட்டமாகச் சீரழிக்கிறோமே என்று ரொம்ப வேதனையாக இருந்தது. அறிவிலும் வேலைத்திறன்களிலும் உலகை வியக்க வைக்கும் இன்றைய இளைய தலைமுறையால், இதையெல்லாம் சீரமைக்க முடியாதா? நம்முடைய நீராதாரங்கள் இவ்வளவு மோசமாகச் சீர்கெட்டிருப்பதை நேரடியாகப் பார்த்தால்தான், உண்மை நிலைமை அவர்களுக்குப் புரியும். நீர்நிலைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டுமென்றால், இவற்றை அவர்கள் நேரடியாகப் பயன்படுத்தும் நிலைமை வர வேண்டும். நீர்நிலைகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. இதில் எனக்குத் தெரிந்த வழி பேட்லிங்.

சாக்கடையும் குப்பையுமாகச் சீர்கெட்டுக் கிடக்கும் நீர்நிலையில் பேட்லிங் செய்வது எளிதல்ல. அதேநேரம், இந்த நீர்நிலைகள் இனிமேலாவது தூய்மைப்படுத்தப்படவும், மாசுபடுத்தப்படாமல் எஞ்சியுள்ள நீர்நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்து பாதுகாக்கவும் பேட்லிங் உதவும். அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளைப் பேட்லிங் மாசுபடுத்தப் போவதில்லை. பேட்லிங் செய்பவர் விழிப்புடனும் அக்கறையுடனும் இருக்கும்வரை, சின்னதாகக்கூட நீர்நிலை கெடாது. எனவே, பேட்லிங்கை தாராளமாகப் பரவலாக்கலாம்.

அதற்குச் செய்ய வேண்டிய முதல் வேலை, சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகளையும் நீர்நிலைகளையும் கண்டறிய வேண்டும். ஆகவேதான் ஒவ்வொரு வார இறுதியிலும் புதுப்புது நீர்நிலைகளைத் தேட ஆரம்பித்தேன்.

(அடுத்த வாரம்: கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கும் விளையாட்டு)

தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x