Published : 10 Feb 2017 11:47 AM
Last Updated : 10 Feb 2017 11:47 AM

காதல் வழிச் சாலை 21: இது கத்தியில் நடந்திடும் பருவம்

இதுவும் ஒரு பள்ளி மாணவியின் பிரச்சினைதான். உடன் படிக்கும் மாணவனைத் தீவிரமாகக் காதலிக்கிறாராம். அந்தப் பையன் ஏழ்மையான குடும்பம். மாணவியின் அப்பா நன்றாகச் சம்பாதிக்கும் தொழிலதிபர்.

“சார்… அவனுக்காக நான் நிறைய செலவு செய்யறேன். படிப்புச் செலவு மட்டுமில்லாம மொபைல், விலையுயர்ந்த கேமரா இப்படி நிறைய வாங்கிக் கொடுத்தேன். என்னைப் பணத்துக்காக மட்டும்தான் அவன் காதலிக்கிறானோ என்று சந்தேகமாக இருக்கு. எனக்கென்று அவன் எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை என்பது வலிக்கிறது. காஸ்ட்லியான பரிசு என்று இல்லை… நினைவு தெரிந்து சாதாரண கிஃப்ட்கூட அவன் எனக்குத் தந்ததில்லை. ஒரு கட்டத்தில் என் அப்பாவுக்குச் சந்தேகம் வந்து, எனக்குப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

எங்கள் பழக்கமும் அவருக்குத் தெரிந்து எங்கள் இருவரையுமே கடுமையாக எச்சரித்தார். கொஞ்ச நாள் பேசாம இருந்தான். பிறகு எப்படியோ சோஷியல் நெட்வொர்க் மூலமா பேச ஆரம்பித்துவிட்டோம். இது ஒரு அடிமைத்தனமா டாக்டர்? இவ்வளவுக்குப் பிறகும் ‘எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணு’ என்று சொல்கிறான். அப்படிச் சொல்லும்போதுதான் அவன் மீது உள்ள நம்பிக்கையே போய்விடுகிறது. இதை விட்டு நான் வெளியே வர வேண்டும். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு. படிப்பில் சுத்தமாய்க் கவனம் செலுத்த முடியவில்லை” என்று எழுதியிருந்தார் அந்த மாணவி.

காதலின் பெயரால் சுரண்டல்

காலம் மாறிவிட்டது பாருங்கள். பையன்கள்தான் அங்கே இங்கே என்று கடன் வாங்கித் தன் தோழிகளுக்குச் செலவு செய்வார்கள். அவர்களை அசத்துவதற்காகத் தங்கள் சக்திக்கு மீறிய பரிசுகளைக் கொடுப்பார்கள். சரி, இங்கே அந்த மாணவனால் செலவு செய்ய முடியாத சூழல். அதனால் அந்த மாணவி செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குச் செலவு செய்யலாம். பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மொபைலும் முப்பதாயிரம் ரூபாய்க்கு கேமராவும் எதற்கு அந்த மாணவனுக்கு? அத்தியாவசியம் வேறு, ஆடம்பரம் வேறு. காதல் என்ற போர்வையில் அந்த மாணவியைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறதே.

தன்னால் பணம் புரட்ட முடியவில்லை என்று சொல்லியும் முயற்சி செய் என்று அவர் சொல்கிறாரே… என்ன அர்த்தம் இதற்கு? எப்போது அந்த மாணவிக்குக் காதலின் மீதே சந்தேகம் வந்ததோ அதற்குப் பிறகாவது அந்த மாணவன் தன் போக்கை மாற்றிக்கொண்டிருக்கலாம் அல்லவா? காதலிக்கப்படுவது ஒரு மேன்மையான விஷயம். ஒரு பெண்ணின் களங்கமற்ற காதலைவிட விலை மதிப்பான ஒரு பொருள் எதுவும் இல்லை. உண்மைக் காதல் ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை. இப்படி ஆதாயத்துக்காகக் காதலைப் பயன்படுத்துவதால்தான் தான் ஏழை என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறான் அந்த மாணவன்.

பொருள் இல்லாத நிலையிலும் மனதளவில் செல்வந்தனாக உணரச் செய்வது காதல். ஆனால் இங்கே இவர்களின் காதல் சந்தேகத்துக் குரியதாகிவிட்டது. பரஸ்பரம் உதவிக் கொள்வது காதலர் களிடம் சகஜம்தான். ஆனால் ஒருவரையே பயன்படுத்திக் கொள்வது என்பது வேறு.

நானும் ரவுடிதான்

அதீதக் கவர்ச்சியின் அடிப்படையில் எழும் இது காதல் அல்ல. அப்படித்தான் என்று வாதிட்டாலும் இது காதலின் மிக மிக ஆரம்பக்கட்டம். இது கொஞ்ச காலம் மட்டுமே நீடிக்கும். அதன் பின் அது வளர்ந்து, காயாகி, கனியாகி அவர்கள் முதிர்ந்த காதலர்களாக மாறுவதற்கு ஆண்டுகள் பல ஆகும். அதுவரை இவர்கள் இருவரும் தாக்குப் பிடிப்பார்களா என்பது காதலுக்கே வெளிச்சம்.

நடிகர் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் ‘நானும் ரவுடிதான்’ என்று சொல்வதைப் போலவே பள்ளி மாணவர்கள் பலரும் ‘நானும் லவ் பண்றேன்’ என்று சொல்லித் திரிகிறார்கள். ‘தோழமை அழுத்தம்’ (peer pressure) என்பது இரண்டு இடங்களில் தவறாமல் செயல்படும். ஒன்று மதுப்பழக்கம், மற்றொன்று காதல். “அனிதாவை சரவணன் லவ் பண்றான்; ராஜேஷை சாக்‌ஷி லவ் பண்றா; உன் ஆள் யாருடீன்னு தினமும் தொந்தரவு செய்கிறார்கள் தோழிகள். இவர்களுக்காகவாவது என்னிடம் ஜொள்ளு விடும் அபிஷேக்கை நான் லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்று ஒரு பள்ளி மாணவி என்னிடம் சொல்லியிருக்கிறார். நமக்கு ஒரு ஆள் என்பது கட்டாயமான ஒரு விஷயமாகிவிட்டது என்பது அத்தனை நல்ல விஷயமல்ல.

பூவாகிக் காயாகி

முடிவைப் பற்றி யோசிக்காத காதல் உணர்வு சரியானதல்ல. தற்காலிகச் சுகத்துக்காகவும் போலி சமூக அங்கீகாரத்துக்காகவும் பலவந்தமாக ஒரு துணையைத் தேடுவது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலத்தான். காதல் தானாக மலர வேண்டும். கட்டாயத் துக்காக மலரக் கூடாது.

இப்படிப் பள்ளிப் பருவத்தில் காதலிக்கும் இருவரில் ஒருவர் சற்று இளகிய மனம் கொண்டவராக இருந்து உணர்வுகளை உயிராக மதிப்பவராக இருந்தால் அவர் நிலைமை என்ன ஆவது? அதிலும் அவர் குடும்பத்தில் உளவியல் கோளாறுகள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மனநோய்களுக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்பது மருத்துவ உண்மை. பதின்ம வயதில் ஏற்படும் ஆகச் சிறந்த உணர்வு, காதல் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அந்தக் காதல் தோல்வியில் முடிந்துவிட்டால் அதைவிட ஒரு கொடூரமான வலி தரக்கூடிய விஷயம் அந்த வயதில் வேறெதுவும் இருக்க முடியாது.

ஏதேனும் ஒரு எதிர்மறைச் சம்பவத்துக்காக ஆழ்மனம் காத்துக்கொண்டிருக்கும். அப்படி நடந்துவிட்டால் முழு அளவிலான மனநோய்க்கு ஆளாகிவிட நேரிடும். ஆக நம் மன வலிமை, முதிர்ச்சித்தன்மை இரண்டையும் பொறுத்தே காதல் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்பதுதான் செய்தி. “இதையெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியும்?” என்று நீங்கள் கேட்டால் என் பதில் ‘ஆம்’ என்பதுதான்.

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டுக் காதலித்திருந்தால் கேரளத்தில் கோட்டயம் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அந்தச் சம்பவம் நடந்திருக்காது. காதலிக்க மறுத்த மாணவியைப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறந்துவிட்டான் ஒரு இளைஞன். ஒரு தலைக்காதலுக்குக் காதல் வரலாற்றில் மேலும் இரண்டு பொன்னான உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. இப்போதெல்லாம் இது போன்ற கொடூரச் சம்பவங்களை அடிக்கடி நாம் எல்லோருமே கேள்விப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோமா? மனம் திறந்து உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் பேசிப் பாருங்கள்.

காதலிக்கவில்லை என்பதற்காகப் போகிற போக்கில் கொலை செய்துவிட்டுப்போகிற சம்பவங்களெல்லாம் எத்தனை கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்று. சமீப ஆண்டுகளாகத்தான் காதலுக்கு அதிகம் ரத்தகாவு தேவைப்படுகிறது. இயந்திர நாகரிகம்தான் வளர்கிறதே தவிர மனித நாகரிகம் எங்கே போகிறது என்று விளங்கவில்லை. காதலைப் பற்றிச் சொல்லவும் பேசவும் பகிரவும் இதுதான் சந்தர்ப்பம். காதலைப் பற்றிய புரிதலும் அறிதலும் இன்றைய காலத்தின் கட்டாயங்களில் அவசியமான ஒன்றுதான்.

மனதைப் பார்க்காத காதலும் மனிதம் மறந்த காதலும் காதலே இல்லை நண்பர்களே.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x