Published : 13 Jan 2017 11:19 AM
Last Updated : 13 Jan 2017 11:19 AM

வேலையற்றவனின் டைரி 11 - சட்னி ‘ஜீன்..!’

எனது பள்ளிப் பருவத்தில், ஒரு விடுமுறையின்போது ஜெயங்கொண்டம் தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தேன். காலையில், தாத்தா குளித்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டையுடன் வந்து சாப்பிடும் இடத்தில் அமர்ந்தார். அக்காலத்து குடும்பத் தலைவர்கள், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், வீட்டில் நினைத்ததைச் சாதிக்கும் மகாசக்தியைப் பெற்றவர்கள். எனவே அவர் சமையலறையை நோக்கி ஒரு பார்வை பார்த்தார். மின்னல் வேகத்தில் அவர் முன்னால் தட்டு வந்து அமர்ந்தது. தொண்டையைக் கனைத்தார். தட்டில் இரண்டு இட்லிகள் உதித்தன. லேசாக இருமினார். அம்மியிலிருந்து கெட்டிச்சட்னி நேரடியாகத் தாத்தாவின் தட்டுக்கு இடம் பெயர்ந்தது.

அந்தத் தேங்காய்ச் சட்னி உருண்டை, கிட்டத்தட்ட திருப்பதி லட்டு சைஸ்க்கு இருந்தது. இரும்புக் கரண்டியில் தாளித்த எண்ணெயோடு வந்த என் அத்தை, கரண்டியின் பின்பகுதியால் சட்னியின் தலையில் ஒரு சிறு குழியை உருவாக்கி, அதன் மேல் தாளித்ததைக் கொட்டினார். தாத்தா இட்லித் துண்டை லேசாக தட்டையாக்கி, அப்படியே சட்னி மீது போட்டார். பிறகு டைனோஸர் மனிதர்களை கவ்வித் தூக்குவது போல், இட்லியோடு சேர்த்து சட்னியை அள்ளினார். வாயில் இட்லியைப் போட்டவர், கண்களை மூடி ரசித்துச் சாப்பிட்டார். இரண்டே நிமிடத்தில், வெறும் இரண்டு இட்லிக்கு, அத்தனைச் சட்னியும் காலியாகியிருந்தது.

அந்தச் சட்னியில் மூன்று குடும்பங்கள், மூன்று வேளை தாராளமாகச் சாப்பிடலாம். நான் எனக்கும் கெட்டிச் சட்னி வேண்டும் என்று அடம் பிடிக்க, எனக்கு திருப்பதி லட்டு சைஸுக்குக் கிடைக்காவிடடாலும், சாதா லட்டு சைஸுக்குக் கிடைத்தது. என் தாத்தா போலவே, இரண்டு இட்லிக்கு ஏராளமான சட்னியைக் கலந்து அடிக்க, அதன் அற்புதமான ருசியில் கிறங்கிப்போனேன்.

விடுமுறை முடிந்து அரியலூர் வந்தால், எங்கள் வீட்டில் தேங்காய்ச் சட்னிக்குப் பங்கு போட என் அப்பாவும் இரண்டு தம்பிகளும் இருந்தார்கள். என் அப்பாவெல்லாம் சட்னியின் மீது ஒரு மாபெரும் யுத்தமே நிகழ்த்தி, எதிரே கிண்ணத்திலிருக்கும் மொத்தச் சட்னியையும், வயிற்றுக்குள் தள்ளிவிட்டுத்தான் ஓய்வார். அவர் தோசை மீது சட்னியை, தோசையே கண்ணுக்குத் தெரியாதவாறு ஊற்றுவார், பிறகு கொழுக்கட்டை மாவில் பூர்ணத்தை வைத்து மடிப்பது போல், தோசையைச் சட்னியோடு மடித்து, நீங்கள் ‘ஆஹா...’ என்று சொல்லி முடிக்கும் நேரத்திற்குள் உள்ளே தள்ளிவிடுவார். நான் அவருக்கு நேர்மாறாக, தட்டின் ஓரத்திலிருக்கும் தேங்காய்ச் சட்னி மீது தோசையைப் போட்டு மூடி, அப்படியே ஒரு அள்ளு அள்ளி விடுவேன். என் தம்பிகள் இந்த இரண்டு டெக்னிக்கையும் பயன்படுத்தி, சட்னியைக் காலி செய்வார்கள். சில சமயங்களில் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சட்னி குறைவாக இருந்தால், இட்லியைக் குறைத்துக்கொள்வோமே தவிர, சட்னியைக் குறைத்துக்கொள்ளும் வழக்கம் எங்கள் பரம்பரையிலேயே கிடையாது.

இவ்வாறு நான்கு ஆண்களும் சட்னி மேல் பாயும்போதும், என் அம்மா எப்படியோ கொஞ்சம் சட்னியை மிச்சம் பிடித்து வைத்திருப்பார். பள்ளியிலிருந்து நாங்கள் மதியச் சாப்பாடுக்கு வீட்டுக்கு வரும்போது, என் சின்னத்தம்பி முரளி, அந்தச் சட்னியை வைத்து இரண்டு இட்லி சாப்பிடுவான். பிறகு ஒரு சொம்பு டீ குடிப்பான். பின்னர் அரை மணி நேரம் கேப் விட்டு, மதியச் சாப்பாடை சாப்பிட்டுவிட்டு அரை வயிற்றுடன்(?) அவன் மீண்டும் பள்ளிக்குச் செல்வதை, என் அம்மா துயரத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்.

நான் ஒன்பதாவது படிக்கும்போது, என்னை அன்னமங்கலம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி ஹாஸ்டலில் சேர்த்தார்கள். காலையில் டிஃபன் சாப்பிட A மெஸ் ஹாலுக்குள் (A மெஸ் என்பது, கட்டணம் கூடுதலான, சிறப்பான உணவுகள் கொண்ட மெஸ்) நுழைந்தேன். வரிசையாக நின்று, ஆளுக்கு இரண்டு தோசைகள் வாங்கிக்கொண்டுச் சென்றார்கள். அது ஹோட்டல் ஸ்பெஷல் தோசை போல் பெரிதாக இருந்தது. தோசையை வாங்கிக்கொண்டு, “சட்னி?” என்று கேட்டேன். பரிமாறுபவர், “அந்த டேபிள்ல இருக்கு. உனக்கு வேணுங்கிறத ஊத்திக்கப்பா…” என்று கூறியவுடன், நான் அதிபயங்கர பரவசத்தின் அதிஉச்சநிலையை அடைந்தேன்.

தனியாக ஒரு மேஜையில், தேவதை போல அமர்ந்திருந்த தேங்காய்ச் சட்னி வாளியைப் பார்த்தவுடன், நெஞ்சிற்குள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் வயலின்கள் இசைத்தன. மனதிற்குள் கடல் அலைகள் போல, சட்னி அலைகள் கரையில் அடிக்க, நான் ‘கடலோரக் கவிதைகள்’ சத்யராஜ் போல மகிழ்ச்சியில் திளைத்தேன்.

ஹாஸ்டலில் இரவும் டிபன்தான். சட்னிதான். என் வாழ்க்கையின் அட்டகாசமான சட்னி நாட்கள் அவை. ஹாஸ்டலில் நன்கு சாப்பிட்டு, பத்து கிலோ எடை ஏறி, காலாண்டு விடுமுறைக்கு தளதளவென்று நான் வீட்டில் சென்று இறங்கியபோது வீட்டில் அசந்துவிட்டார்கள்.

படித்து முடித்து, நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், மந்தைவெளியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். சென்னையில் எனக்கு மிகப்பெரிய சட்னி அதிர்ச்சிகள் காத்திருந்தன. என் அறைத்தோழன் நாராயணனுடன் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல, அவர்கள் ஸ்பூனில் சட்னியை லேசாகத் தெளிக்க, எனக்குக் கொலை வெறியாகிவிட்டது. “டேய்… நம்ம ஊருல ஊறுகாயதாண்டா ஸ்பூன்ல போடுவாங்க…” என்ற நான் அதன் பிறகு அந்த ஹோட்டலுக்குச் செல்லவில்லை.

அப்போது மயிலாப்பூர் சங்கீதா ஹோட்டல் மாடியில், ஒரு ரூஃப் கார்டன் ரெஸ்டாரென்ட் நடத்தி வந்தார்கள். அங்கு நான்கு வித சட்னிகளை, நான்கு பெரிய கிண்ணங்களில் மேஜையிலேயே வைத்திருந்ததால் அங்கு தொடர்ச்சியாகச் செல்ல ஆரம்பித்தோம்.

ஒரு முறை சென்னை வந்த என் தம்பிகளும் நானும் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம். அடுத்த முறை நானும் நாராயணனும் அங்கு சென்றபோது, ”ரூஃப் கார்டன் ரெஸ்ட்டாரண்ட்ட மூடிட்டாங்க” என்று கூற, நாங்கள் அதிர்ந்தோம். நாராயணன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தபடி, “அண்ணன் தம்பி மூணு பேரும் இங்க வந்தீங்கன்னு சொன்னப்பவே நினைச்சேன்” என்றவன், இன்று வரையிலும் அந்த ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்ட் மூடப்பட்டதற்கு எங்கள் குடும்பம்தான் காரணம் என்கிறான்.

எனது சட்னிப் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்க, ஒரு நாள் நாராயணன் என்னை மாமி மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு வாளியில் தனியாக வைத்திருந்த தேங்காய்ச் சட்னியைக் காண்பித்து, “இங்க… உங்க ‘ஏ’ மெஸ் மாதிரி சட்னியை வச்சிருப்பாங்க. எவ்வளவு வேணும்னாலும் ஊத்திக்கலாம்” என்று கூற, நான் ‘தளபதி’ மம்முட்டி, ரஜினியைப் பார்ப்பது போல் நாராயணனைப் பிரியத்துடன் பார்த்தேன். எனது பரவசத்தைப் பார்த்து பயந்துபோன நாராயணன், “டேய்... பல வருஷமா நடந்துட்டிருக்கிற மெஸ்டா. இதையும் மூடிடாதடா…” என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். மாமி மெஸ் இன்று வரையிலும் அதே சட்னி சிஸ்டத்துடன், நன்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.

எனக்குத் திருமணமாகி, சென்னையில் புதுக்குடித்தனம் வைத்தபோது, நாராயணன் என் மனைவியிடம், “இவனுக்கு தினமும் கிரைண்டர்ல சட்னி அரைச்சுப் போட்டீன்னா போதும். உன் வாழ்க்கைல ஒரு பிரச்சனையும் வராது” என்று கூற, “கிரைண்டர்ல சட்னியா?” என்று என் மனைவி மிரண்டு போய்விட்டார்.

காலம் ஓடியது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மாமி மெஸ்ஸிலிருந்து என் மகனுக்கு பஜ்ஜி வாங்கிக்கொண்டு வந்தேன். அதற்கு ஏராளமாய் கெட்டிச் சட்னி வைத்திருந்தார்கள். எனது மகன் பஜ்ஜிகளைச் சாப்பிட்டு முடித்த பிறகு, நிறைய சட்னி மிச்சம் இருந்தது. நான், ‘இவ்ளோ சட்னி வீணாகுதே…’ என்று மனதிற்குள் குமைந்தபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. என் மகன் இலையிலிருந்த வெறும் சட்னியை சில வினாடிகள் பார்த்தான். பிறகு அவன் அந்த வெறும் சட்னியை எடுத்து அப்படியே சாப்பிட, என் கண்ணோரம் துளிர்த்ததற்கு பெயர்தான் ஆனந்தக் கண்ணீரா?

இவ்வாறு என் தாத்தாவிலிருந்து, நான்கு தலைமுறைகளாக பயணித்துக்கொண்டிருக்கும் இந்த சட்னி ஜீனை என்ன செய்யலாம்?

- தொடரும்
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x