Published : 04 Nov 2016 10:27 AM
Last Updated : 04 Nov 2016 10:27 AM

காதல் வழிச் சாலை 07: மனிதர் உணர்ந்துகொள்ள முடியாததா?

சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிற, நம்மை யாரென்றே தெரியாத ஒருவர் மீது ஏற்படுகிற காதல் அசாதாரணமானது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்துக்கொள்வது மட்டுமல்ல, ஆதாரத்துடன் எவ்வளவு விளக்கம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த எண்ண மாயையை ‘Unshakable Belief’ என்று சொல்வோம். அதீத உளவியல் கோளாறுகளின் அறிகுறிகளில் ஒன்று இந்த ‘டெலுஷன்’ (Delusion). அப்படிப்பட்ட மருட்சிக்கோளாறுகளில் (Delusional Disorder) ஒன்றுதான் ‘எரடொமேனியா’ (Erotomania).

ரகசிய மொழி

ஆண் பெண் இருபாலரும் எரடொமேனியாவால் பாதிக்கப்பட்டாலும் பெண்கள் பாதிக்கப்பட்ட கதைகள் சற்றே அதிகம். சமூகத்தில் பிரபலமானவராக இருக்கும் ஒருவரை டார்கெட் செய்து கொள்வார்கள். ‘என்னை அவர் காதலிக்கிறார். எனக்காகத்தான் அந்த ரகசிய சைகை. அது என்னைத் தவிர வேறு யாருக்கும் புரியாது. நீங்கள் கேட்டால் அவர் மறுக்கத்தான் செய்வார். அதுவும் எங்கள் ரகசியக் காதலின் ஒரு மொழியே’ என்ற ரீதியில் இந்தக் காதல் கதை செல்லும். அப்செஷன் காதலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அங்கே நாம் காதலிப்பவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பார்.

நம்மைக் காதலித்தவராகவும் இருப்பார். அவர் பின்னால் வெறிபிடித்தவர் மாதிரி சுற்றிக்கொண்டிருப்போம். ஆனால் எரடொமேனியாவில் காதலிக்கப்படும் நபருக்கும் நமக்கும் சம்பந்தமே இருக்காது. பெரும்பாலும் சமூக அந்தஸ்தில் நம்மைவிட மிக உயர்ந்தவராகவும் பிரபலமானவராகவும் இருப்பார். கனவிலேயே அந்தப் பிரபலத்தை மணந்துகொண்டு குழந்தைகூட பெற்றுவிடுவார்கள்!

ஒரு பெண்ணை எத்தனை நாள் பின்தொடர முடியும் என்று நினைக்கிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்? இல்லை, நம் கற்பனையை விஞ்சிவிடுகிற அளவுக்குக் கிட்டத்தட்ட முப்பது, முப்பத்தேழு ஆண்டுகள்கூட ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த வரலாறுகளும் உண்டு.

கவனம் ஈர்த்தல் தகுமா?

அமெரிக்க அதிபராக ரொனால்டு ரீகன் பதவி வகித்த காலம் அது. 1981-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி, ஒரு மாநாட்டில் உரை நிகழ்த்திவிட்டுத் தன் பரிவாரங்களுடன் காரில் ஏற வந்தார். கடும் பாதுகாப்பு இருந்த போதும் ஜான் ஹின்க்லே (John Hinckley) என்பவர் உள்ளே புகுந்துவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரீகனைச் சுட்டார். நிலை குலைந்து சரிந்த ரீகன், பயங்கரக் காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார். ‘எதற்காகச் சுட்டாய்?’ என்று ஜானிடம் கேட்டதற்கு, ‘இவரைக் கவர வேண்டும் என்பதற்காக’ என்று ஒருவரைக் கைநீட்டினார். அந்த ஒருவர் அப்போது அமெரிக்காவையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த நடிகை ஜோடீ ஃபாஸ்டெர். “அவரை நான் தீவிரமாகக் காதலிக்கிறேன். ஆனால் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

அவரின் கவனத்தைக் கவரப் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும். என்பதற்காகப் பெரிய மனிதரான அதிபரைக் குறிவைத்தேன்” என்று சொல்லியிருக்கிறார் சலனமில்லாமல். மனநிலை பாதிப்புள்ளவர் என்று தெரிய வந்ததால் சட்டமும் அவரைப் பெரிதாகத் தண்டிக்கவில்லை. தன் வாழ்நாளில் பல ஆண்டுகளை மனநலக் காப்பகத்தில் கழித்த அந்த நபர் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். இதையும் எரடொமேனியா என்றுதான் பார்க்கிறது உளவியல்.

தனித் தீவில் காதல் உலா?

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையைச் சுற்றி ஆளில்லாத தீவிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அது எரடொமேனியா விவகாரம் எனத் தெரியவந்தது. அரண்மனை ராணியைக் குறிவைத்த அந்த உளநோயாளி அரண்மனையைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்காகவோ என்னவோ ஆளே இல்லாத அந்த தீவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இல்லாத காதலை இருப்பது போலக் கற்பனை செய்துகொண்ட இவர்கள் கண்டிப்பாக அசாதரணமானவர்கள்தான்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் ஒருசிலரை நாம் பெரும்பான்மை மனப்பாங்குக்கான உதாரணமாகக் கொள்ளவும் முடியாது; சொல்லவும் கூடாது. ஆனால் எப்படியெல்லாமோ பயணிக்கிற இந்தக் காலத்து காதலைப் பார்க்கும் போது, இளைஞர்களுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. தெளிவாக இருப்பவர்கள்கூட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும்போதுதான் நம் கவலை அதிகரிக்கிறது. அவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளுடன் காதல் விவகாரங்களும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வெண்டாம். எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது போதை மனசு!



“நான் கல்லூரி இறுதியாண்டு மாணவி. உங்கள் கட்டுரையில் சொன்ன அப்செஷன் எனக்கும் நிறைய இருக்கிறது. என்னுடன் பழகிய ஒருவர் திடீரென்று உறவை முறித்துக்கொண்டார். ‘பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்களை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது’ என்கிறார். அவர் பிரிந்ததில் இருந்து மிகவும் டென்ஷனாக இருக்கிறேன். அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார், அவர் பெற்றோர் எப்படி இருக்கின்றனர் என்று அவர் நண்பர்களை விசாரிப்பது, அவர் வீட்டுப் பக்கம் போவது, ஆன்லைன் ஸ்டேட்டஸ்களை செக் செய்வது என்று நகர்கின்றன என் நாட்கள். நான் நார்மலாகத்தான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த அப்செஷனை விட்டு நான் எப்படி வெளியில் வருவது?”

“ஒரு பிரிவைத் தொடர்ந்து இப்படியொரு மனநிலை இயல்பானதே. பெற்றோர் எதிர்ப்பார்கள் என்று உங்கள் முன்னாள் காதலருக்குத் தெரியாதா? கணிசமான காலம் பழகிவிட்டுப் பெற்றோர் மீது பழியைப் போடுவது, அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. எத்தனை பெற்றோர் எடுத்த எடுப்பிலேயே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்? கொஞ்சம் போராடித்தான் வெற்றிபெற வேண்டும். நான் அடிக்கடி சொல்வேன், காதல் தோற்றுப் போவது பெரும்பாலும் காதலர்களால் மட்டும்தான் என்று.

போராடும் மனப்பாங்கு இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்க இருந்தீர்கள். அவருக்கு அந்தப் பக்கம் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். காதலிப்பதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்; ஆண்களும் இருக்கிறார்கள். முடிவு எப்படி இருக்கும், நம்மால் போராட முடியுமா என்பதை யோசித்துத்தான் காதலில் இறங்க வேண்டும். அப்போதைக்கு எழும் உணர்வுகளுக்கு மட்டும் வடிகாலாகக் காதலைப் பயன்படுத்திக் கொள்பவர்களால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

மெல்ல உங்கள் நினைவுகளை வேறு விஷயங்களில் திருப்புங்கள். உற்ற தோழிகளுடன் இருங்கள். மனதிலுள்ள சுயபச்சாதாபத்தை அகற்றிவிட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். காலத்தால் ஆற்ற முடியாத காயம் எதுவுமில்லை. இன்று உலகமே இருண்டுவிட்டதாகத் தோன்றும் ஒரு விஷயம், சில பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சாதாரணமானதாகத் தோன்றும்.

இதற்காகத்தான் அன்று அப்படி ஏங்கினோமா என்று நம்மை வெட்கப்படவைக்கும். ஆழமின்றிப் பிறந்து பாதி வழியிலேயே விபத்துக்குள்ளான அரைகுறை காதல்களும் இப்படித்தான். உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், காதல் இருகை ஓசை. எதற்கும் கலங்காதீர்கள். ஒரு கதவு மூடுவதே இன்னொரு கதவு திறப்பதற்காகத்தான்!”

இன்னொரு கதவு நிச்சயம் திறக்கும்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x