Last Updated : 19 Aug, 2016 01:18 PM

 

Published : 19 Aug 2016 01:18 PM
Last Updated : 19 Aug 2016 01:18 PM

ஒலிம்பிக் டைரி: இந்தியா இழந்த ராம்

இந்தியா இழந்த ராம்!

இந்த ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ராஜீவ் ராம் ஜோடியிடம் தோல்வியடைந்தது இந்தியாவின் சானியா மிர்ஸா, ரோஹன் போபண்ணா ஜோடி. இந்திய ஜோடி தோல்வியடைந்தது பெரிய விஷயமல்ல. ஆனால் ராஜீவ் ராம் இந்தியாவுக்காக விளையாடாததுதான் பேரிழப்பு! பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராம். இவரின் பெற்றோர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். அங்குதான் ராம் பிறந்தார். டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த அவர் இந்தியாவுக்காக விளையாட நினைத்தார். ஆனால் பாஸ்போர்ட் தொடர்பாக இந்திய அதிகாரிகள் செய்த பிரச்சினைகளால், அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை. இரண்டு முறை தனிநபர் பட்டங்கள், ஒன்பது முறை இரட்டையர் பட்டங்கள் பெற்ற இவரின் தற்போதைய தனிநபர் தரவரிசை 114. இரட்டையர் தரவரிசையில் 24வது இடம் வகிக்கும் இவர், இதுவரை 'கிராண்ட் ஸ்லாம்' பட்டங்கள் எதையும் வெல்லவில்லை. கூடிய விரைவில் வெல்ல வாழ்த்துகள்!

ராம்

'ஷேம்' ரியோ

ஒலிம்பிக் போட்டிகள் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், அது தொடர்பான சர்ச்சைகளும் எழுவது வாடிக்கை. 1972-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ம்யூனிக் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் இஸ்ரேல் நாட்டு வீரர்கள் பலர் மடிந்தனர். ஒலிம்பிக் வரலாற்றின் கருப்புப் பக்கம் அது. ஆனால் காலம் செல்லச் செல்ல அந்தக் காயத்தை நாம் மறந்துவருகிறோம். இப்படியான தீவிரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், தங்கள் நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில், அந்த நாட்டு மக்களே நடந்துகொள்வதுதான் வேதனையிலும் வேதனை!

நீச்சலில் தங்கம் வென்ற ரயான் லோஷ்ட் உள்ளிட்ட அமெரிக்க நீச்சல் வீரர்களிடம் நடந்த‌ கொள்ளை, ஒலிம்பிக் போட்டிகளை 'கவர்' செய்ய வந்திருந்த பத்திரிகையாளர்கள் சென்ற வாகனத்தைத் தாக்கியது என இந்த முறை விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது ரியோ. இதையெல்லாம் விட, ஒலிம்பிக் பார்க்க வந்த வெளிநாட்டினரிடம் உள்ளூர் சிறுவர்கள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை ‘பிக்பாக்கெட்' போன்ற சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. அதையெல்லாம் பார்த்த பிறகு சொல்லத் தோன்றியது இதுதான்: ‘வெர்கோன்ய ரியோ!' அதாவது, போர்த்துகீசிய மொழியில் ‘வெட்கப்படுகிறேன் ரியோ!' என்று பொருள்.

வளைவதற்கு வயது வேண்டாம்!

தீபா கர்மகார், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இறுதி வரை சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். பதக்கம் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதுவே பெரும் சாதனைதான். இவருக்கும் நமக்கும் சேர்த்து ஒரு உற்சாக ‘டானிக்' தகவல்... இவர் பங்கேற்ற அதே பிரிவில் 7-வது இடத்தைப் பிடித்தவர் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒக்ஸானா சுஸோவிடினா. இவரது வயது 41. 1956-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் 35 வயதான ஏக்னஸ் கெலெட்டி என்ற ஹங்கேரி வீராங்கனை 4 தங்கப் பதக்கங்களை வென்றார். இன்று வரையிலும் ‘ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்ற அதிக வயது கொண்ட ஒரு பெண்' என்ற பெருமையை இவர்தான் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆக, இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், தீபா இனி வரும் காலங்களில் ஒன்றுக்கு நான்காகப் பதக்கம் வெல்வார் என்று நம்பலாம். ஏனென்றால் அவருக்கு இப்போது 23 வயதுதான்!

தீபா கர்மாகர்

பெல்ப்ஸ்... ஸ்கூலிங்... பின்னே 'பட்டர்ஃப்ளை!'

வசிஷ்டர் கையால் குட்டுப் பெறுவது நல்ல விஷயம். ஆனால் ஏகலைவனே துரோனாச்சார்யாவைத் தோற்கடிப்பது பெருமைக்குரிய விஷயம் என்பதில் சந்தேகம் என்ன? அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸுக்கு நடந்ததும் அப்படி ஒரு விஷயமே. ரியோவில் நடந்த 100மீட்டர் 'பட்டர்ஃப்ளை' நீச்சல் போட்டிப் பிரிவில், தன்னிடம் சில நுணுக்கங்களைக் கற்ற ஜோசப் ஸ்கூலிங் எனும் 21 வயது வீரரிடம் தங்கப் பதக்கத்தை இழந்தார் பெல்ப்ஸ். அந்த ஸ்கூலிங் சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர். ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் இவர். நிற்க... இந்த 'பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக்'கை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்களே அமெரிக்கர்கள்தான். 1952ம் ஆண்டு தனிப் போட்டிப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டு, 1956ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

பெல்ப்ஸ்

மைதானத்தில் முளைத்த காதல்!

கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும், ஒலிம்பிக் மைதானங்கள், சில காதல் ஜோடிகளின் மண மேடையாகவும் ஜொலித்திருக்கின்றன. அநேகமாக 1956ம் ஆண்டு மெல்பர்ன் நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் காதல் ஜோடிகள் கைகோர்த்திருக்க வேண்டும். சுத்தியல் எறிதல் வீரர் ஹால் கொன்னாலி மற்றும் வட்டு எறிதல் வீராங்கனை ஓல்கா ஃபிகோடோவா ஆகியோர்தான் அந்த முதல் ஜோடி. அவர்களுக்குப் பிறகு பல காதல் ஜோடிகள் வந்துவிட்டனர். இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், தங்கள் காதலை வெளிப்படுத்தி கரம்கோர்த்த முதல் ஜோடி பிரேசிலைச் சேர்ந்த இஸ்டோரா செருல்லோ...மர்ஜோரி என்யா ஆகியோர்தான் அந்த ஜோடி. இவர்கள் இருவருமே ‘ரக்பி' விளையாட்டு வீரர்கள். இரண்டாவது ஜோடி... குவின் கய்...ஹீ சைய் ஜோடி. சீனாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ‘டைவிங்' வீரர்கள். இருவருமே இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்கள். தன் காதலி வெள்ளிப் பதக்கம் பெற்றவுடன் குவின் கய் அந்த மேடையிலேயே தன் காதலை வெளிப்படுத்திய விதம்... ‘ஷோ ஸ்டீலிங்!'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x