Published : 05 Aug 2016 12:18 PM
Last Updated : 05 Aug 2016 12:18 PM
ஒலிம்பிக்ஸ்! ‘ஒரு விளையாட்டு வீரன் உடலில் காயங்கள் ஏற்படாதவரை அவர் முழுமை பெறுவதில்லை' என்று சொல்லப்படுவதுண்டு. அது 90 சதவீதம் உண்மை என்றால், ‘ஒரு விளையாட்டு வீரர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்காத வரை அவர் முழுமை பெறுவதில்லை‘ எனும் கருத்து 100 சதவீதம் உண்மை!
ஹாக்கி, குத்துச்சண்டை, பேட்மின்டன் என ஒவ்வொரு விளையாட்டுகளுக்கும் உலகக் கோப்பை, உலக சாம்பியன் பட்டங்கள் என உச்சபட்ச ‘டார்கெட்' உண்டு. ஆனால், ஒலிம்பிக்ஸ்தான் ஒரு விளையாட்டு வீரரின் ‘கரீர் கிராஃபு'க்கு அற்புதமான ‘ஃபினிஷிங்' கொடுக்கும்.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதை விடுங்கள். அந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளவதே மிகப்பெரிய பரிசுதான். ஆனால், அதில் கலந்துகொள்வதற்கு ஒரு விளையாட்டு வீரர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவ்வளவு சுலபமானதில்லை.
திறமை, ஃபிட்னஸ், டயட், தான் விளையாடும் விளையாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதிகள் குறித்த அப்டேட், தன்னுடன் போட்டிபோடும் இதர நாட்டு வீரர்களின் டெக்னிக், தரவரிசை... என இவை எல்லாம் இருந்தும், அரசியல் மற்றும் அதிகார சதித்திட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்குத் தகுதி பெறுவது ஒரு வாழ்நாளுக்கான போராட்டம் என்று சொன்னால் அது மிகையில்லை. அதுவும் இந்தியாவில்!
இவ்வாறு பல தடைகளைத் தாண்டி முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் 50 பேரின் அனுபவங்களைத் தாங்கி வந்திருக்கிறது ‘மை ஒலிம்பிக் ஜர்னி' எனும் புத்தகம். சி.என்.என். ஐ.பி.என். (தற்போது சி.என்.என். நியூஸ் 18) தொலைக்காட்சியில் ‘ஸ்போர்ட்ஸ் பீட்' பார்த்து வரும் திக்விஜய் சிங் தியோ இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பீஜிங், லண்டன் என ஒலிம்பிக் போட்டிகளைத் தனித்துவத்துடன் ரிப்போர்டிங் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்த அமித் போஸ் என்பவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் திக்விஜய். பெங்குவின் பதிப்பக வெளியீடான இது, சமீபத்தில் வெளியானது.
நவீன கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் என்பது 1896-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இதில் இந்தியாவின் பங்கேற்பு சுதந்திரமடைவதற்கு முன்பாக, அதாவது 1900-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 1952-ம் ஆண்டு, சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் முக்கியமான தருணம். மல்யுத்த வீரர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ் என்பவரால், ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) கிடைக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அதுவரை தனிநபர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் அதுதான். அதன் பிறகு 1996-ம் ஆண்டு சுமார் 44 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்றார்.
ஆனால் இந்தத் தனிநபர் சாதனைகள் எல்லாம், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நோக்கி இந்தியர்களை ஈர்க்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த நாடே, 1928-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் மயங்கிக் கிடந்தது. அது ஹாக்கி! இந்த இடைப்பட்ட காலங்களில் இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்கள் உட்பட, 11 பதக்கங்களைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தது. ‘இந்தியாவின் தேசிய விளையாட்டாக' ஹாக்கி எப்படி உருவானது என்பதற்கு இங்கே விடை கிடைக்கிறது.
பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட தடகள வீரர்கள் மில்கா சிங், பி.டி.உஷா முதல் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் வரை வயதில் மூத்தவர்கள், அனுபவத்தில் மூத்தவர்கள், முதல் முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்றவர்கள் என இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் 50 பேர்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதை இருக்கிறது. காயங்கள் இருக்கின்றன. கற்ற பாடங்கள் தெறிக்கின்றன.
‘பதக்கம் என்றால் அது தங்கப் பதக்கம் மட்டும்தான்!' என்று சொன்ன விளையாட்டு வீரர் தொடர்ந்து சரிவுகளைச் சந்திக்கிறார். முதல் முறை நீளம் தாண்டும் போட்டிகளில் உலக சாம்பியன்களைப் பின்னுக்குத் தள்ளிய ஒரு வீராங்கனை அந்த ஒரு போட்டியில் மட்டும் சுமார் 16 முறை ஊக்க மருந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். நூலிழையில் பதக்க வாய்ப்புகளைத் தவறவிட்டவர்களுக்கு, சில காலம் கழித்து ‘பதக்கம் வென்றவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கிறார்கள்' எனும் தகவல் கிடைக்கிறது.
விளையாட்டு விதிகள் குறித்து சரியான அப்டேட் இல்லாததால் ஒருவருக்குத் தங்கப் பதக்க வாய்ப்பு பறிபோகிறது. தன்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலக, வெண்கலப் பதக்கம் கிடைக்கிறது ஒரு வீராங்கனைக்கு. ஆனால், அதை அவர் கொண்டாடாமல் அமைதி காத்து இந்தியாவின் மாண்பைக் காப்பாற்றினார். 1976-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், பதக்கம் வெல்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருந்தபட்சத்தில், மல்யுத்த அணி அந்தப் போட்டிகளுக்கு இந்திய அரசால் அனுப்பப்படவில்லை. அதனால் விளையாடாமலேயே பதக்க வாய்ப்புகள் பறிபோனது இன்னொரு வீரருக்கு.
இப்படி ஒவ்வொரு வீரரின் பின்னுள்ள சரிவுகளைப் பதிவு செய்யும் அதே நேரத்தில், நீளம் தாண்டுதலில் பாப் பீமன் செய்த சாதனை, உயரம் தாண்டுதலில் டிக் ஃப்ளாஸ்பரி அறிமுகப்படுத்திய ‘ஃப்ளாஸ்பரி ஃப்ளாப்' எனும் புதிய நுட்பம், குத்துச்சண்டைப் போட்டிகளில் .01 அளவு உடலில் எடை கூடினால் கூட போட்டியிடுவதற்குத் தகுதியில்லாமல் போகும் நிலை போன்ற ஒலிம்பிக் சார்ந்த இதர வரலாற்றுச் செய்திகளை இதர விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையினூடே சொல்லிச் செல்வதில் இந்தப் புத்தகம் தனித்து நிற்கிறது.
இன்றெல்லாம், ஹாக்கி அணி பதக்கம் வெல்லாமல் போனால் ஏகப்பட்ட சர்ச்சைகள் வருகின்றன. ஆனால் 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றபோது, அந்தப் போட்டியில் வெறும் மூன்றே அணிகள் மட்டும்தான் இடம்பெற்றிருந்தன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம், கடந்த 40 ஆண்டுகளாக ‘ஆஸ்ட்ரோ டர்ஃப்' மைதானத்தில்தான் விளையாடப்படுகின்றன. ஆனால், இன்றும் இந்தியாவில் ஹாக்கி விளையாட ஆரம்பிப்பவர்கள், புல்தரையில்தான் விளையாடப் பழகுகிறார்கள். பல ஹாக்கி வீரர்களை உருவாக்கிய கேரள மாநிலத்திலேயே 2015-ம் ஆண்டுதான் ‘ஆஸ்ட்ரோ டர்ஃப்' மைதானம் அமைக்கப்பட்டது என்றால் இந்திய விளையாட்டுத் துறையின் நிலைமையை என்னவென்று சொல்ல?
ஹாக்கி என்றல்ல. எல்லா விளையாட்டுக்களிலும், ஃபிட்னஸ் அல்லது சரியான டயட் போன்றவை தவிர்த்து, பெரும்பாலும் அரசியல் சூழ்ச்சிகளால்தான் பதக்க வாய்ப்புகள் பறிபோகின்றன என்பதை வலியுடன் பதிவு செய்கிறார்கள் நூலாசிரியர்கள்.
ஒருவர், விளையாட்டைத் தனக்கான வாழ்க்கையாகக் கொள்ளும்போது, அந்த வீரர் மட்டுமே அந்த விளையாட்டுடன் பயணிப்பதில்லை. மாறாக, அவரின் குடும்பமும் கூடவே பயணிக்கிறது என்பார்கள். அப்படி, ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குப் பின்னால், அவர்களின் குடும்பங்கள் அடைந்த கஷ்டங்கள், தான் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், தன்னுடைய நாட்டைச் சேர்ந்த இன்னொருவர், வேறொரு விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றால், தானே அந்தப் பதக்கத்தை வென்றது போன்ற மகிழ்ச்சிக்கு உள்ளாவது, ஒலிம்பிக் கிராமங்களின் ‘அட்மாஸ்ஃபியர்' என விளையாட்டு வீரர்களின் இதர ‘பர்சனல்' பக்கங்களையும் இந்தப் புத்தகம் தொட்டிருப்பது ‘ஹைலைட்!'
புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படிச் சொல்லப்படுகிறது: ஒலிம்பிக் கிராமத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒரே மாதிரிதான் நடத்தப்படுகிறார்கள். அங்கு வீரர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை. அதுதான் ஒலிம்பிக்ஸ் போட்டியின் வழிகாட்டும் தத்துவமாக இன்றுவரை இருக்கிறது!
அந்தச் சமத்துவம் இந்தப் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படும் வீரர்களிடமும் காட்டப்பட வேண்டும் என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ளுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT