Published : 28 Apr 2017 10:08 AM
Last Updated : 28 Apr 2017 10:08 AM
கல்லூரிப் படிப்பை முடித்த இரண்டு இளைஞர்கள் சந்தித்துக்கொண்டால் வெட்டியாகப் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள் என்ற பொதுவான நினைப்பை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள் நரேஷ், ஹரி பாபு இருவரும். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவிலான யூடியூப் வீடியோக்களால் தங்களைக் கவனிக்கச் செய்கிறார்கள். இவர்கள், உருவாக்கியிருக்கிற வீடியோக்களைப் பார்த்துச் சிரிக்கலாம்; விரும்பினால் கொஞ்சம் சிந்திக்கவும் செய்யலாம்.
தமிழகத்தின் தற்போதைய நிலையை மையமாக வைத்து சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ, வைரல் ரகம். தங்கள் யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருப்பதோடு, அவர்களைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் இவர்களின் சாதனையே. ஹால் டிக்கெட்டில் தொடங்கியது இவர்களது பயணம். பிறகு ஜல்லிக்கட்டு, ஆண்கள்-பெண்கள், அம்மா-மகள், மீம் கிரியேட்டர்கள், குறும்படத் தயாரிப்பு என்று சகல பாதைகளிலும் பயணித்து தற்போது மக்கள் பிரச்சினைகள் பக்கம் திரும்பியிருக்கிறது.
“எந்தத் திட்டமும் இல்லாமல் ரொம்ப இயல்பா ஆரம்பிச்சதுதான் இந்த யூடியூப் சேனல். நானும் பாஸ்கரும் லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சோம். ரெண்டு பேருக்குமே சினிமாதான் கனவு. அதுக்கான வாய்ப்பு கிடைச்சு ஆளுக்கு ஒரு படத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். நடுவுல கிடைச்ச நேரத்துல ஏதாவது பண்ணலாமேன்னு பேசிக்கிட்டு இருந்தப்போ உதிச்ச ஐடியாதான் இது. ஒருத்தன் எக்ஸாம் ஹால் டிக்கெட் வாங்குறதுக்குள்ள நடக்குற விஷயத்தையே முதல் வீடியோவா பண்ண நினைச்சோம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதுமே இன்னொரு வீடியோவையும் ரிலீஸ் பண்ணோம். அதுக்குப் பிறகு, ‘ஜம்ப்கட்ஸ்’ (JUMPCUTS) வீடியோ சானலைத் தொடங்கினோம்” என்று சொல்கிறார் நரேஷ். ஃபேஸ்புக், யூடியூப் இரண்டிலும் இவர்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீடியோவையும் சில நிமிடங்களுக்குள் முடித்துவிடுவது தங்கள் வெற்றிக்குக் காரணம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
“நாங்க முதல்ல எடுத்த வீடியோவை எடிட் செய்யும்போதுதான் இது தேவையில்லை, இதைப் பார்க்க மாட்டாங்க, இது நீளமா இருக்கு அப்படின்னு நிறைய காட்சிகளை எடுத்துட்டோம். இன்னும் நுணுக்கமா எடிட் பண்ணா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. ஒரு வீடியோ ரொம்ப நேரம் ஓடினாலும் நிறைய பேர் ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடுவாங்க. அதனால அதிகபட்சம் ரெண்டு நிமிஷத்துக்குள்ள விஷயத்தைச் சொல்லிடணும் நினைச்சோம்” என்று சொல்கிறார் நரேஷ்.
வீடியோ முழுக்க ஹரி பாஸ்கர் மட்டுமே வருகிறார், வெவ்வேறு தோற்றங்களில். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ற வகையில் கச்சிதமாக நடிக்கிறார்.
“நான் திருச்சி பையன். ஒளிப்பதிவுதான் என் சாய்ஸ். நான் ப்ளஸ்டூ முடிச்சதுமே இன்ஜினீயரிங் படின்னு வீட்ல சொன்னாங்க. நாம எந்த அளவுக்குப் படிப்போம்னு நமக்குத் தெரியாதா? அதனால சினிமாதான் என் கனவுன்னு அப்பவே எங்க வீட்ல தெளிவா எடுத்துச் சொல்லிட்டேன். சித்தார்த் நடிக்கிற ஒரு படத்துல நான் உதவி ஒளிப்பதிவாளரா இருக்கேன். படப்பிடிப்பு நேரத்துலதான் நடிப்பு மேல ஆர்வமும் ஈடுபாடும் வந்தன. தவிர காலேஜ் படிக்கும்போது குரூப் புராஜெக்ட்டுக்காக நடிச்சிருக்கேன். அந்த அனுபவமும் எனக்குக் கைகொடுக்குது” என்று சொல்லும் ஹரி பாஸ்கர், ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளுத்துவாங்குகிறார். முக பாவம், வசன உச்சரிப்பு எல்லாமே கச்சிதம். பெண்களைப் போல நடிக்கும்போது மட்டும் கொஞ்சம் மிகைப்படுத்துவது போலத் தெரிகிறது. கேட்டால் சிரித்தபடியே விளக்கம் தருகிறார்.
“உண்மைதான். ‘இருபது வருஷத்துக்கு முன்னால டீன் ஏஜ்ல இருந்தவங்கதான் இப்படி எல்லாம் செய்வாங்க. இப்போ பொண்ணுங்க டிரெண்டே வேற’ன்னு சிலர் கமெண்ட் சொன்னாங்க. சிலர், ‘ரொம்ப நல்லாருக்கு. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுப்பா’ன்னும் சொல்றாங்க. தப்பை ஏத்துக்கிட்டாதானே திருத்திக்க முடியும்?” என்று அடக்கத்துடன் சொல்கிற ஹரி பாஸ்கரை நரேஷ் வழிமொழிகிறார்.
“இன்னைக்கு யாருக்கும் கருத்து சொல்றதே பிடிக்கறதில்லை. சீரியஸான விஷயத்தைக்கூட சிரிக்கிற மாதிரி சொன்னா அதுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கு. ஆரம்பத்துல ரொம்ப ஜாலியான வீடியோக்களை மட்டும்தான் எடுத்தோம். சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி நிறைய வீடியோ எடுக்கச்சொல்லி எங்களோட பார்வையாளர்கள் பலர் கேட்கறாங்க. இனி அந்த மாதிரியும் நிறைய எடுக்கணும்” என்று சொல்லும் நரேஷ், ஜல்லிக்கட்டு வீடியோ தங்களுக்கு மனநிறைவைத் தந்தது என்று சொல்கிறார்.
“மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கறதுக்கு அஞ்சு நாள் முன்னாடி நாங்க ஒரு வீடியோ தயாரிச்சோம். ஊரே வீவாண்ட் ஜல்லிக்கட்டுன்னு சொன்னப்போ நாங்க ‘வீடூ ஜல்லிக்கட்டு’ன்னு (#wedojallikattu) சொன்னோம். நிறைய பேர் எங்க வீடியோவை ஷேர் பண்ணியிருந்தாங்க” என்று சொல்கிறார் நரேஷ்.
இவர்கள் ஒவ்வொரு வீடியோவையும் நாள் கணக்காகத் திட்டமிட்டு எடுப்பதில்லை. சிலவற்றைப் போகிற போக்கில் முடித்திருக்கிறார்கள்.
“அப்பா-மகன் வீடியோ அப்படி உருவானதுதான். நானும் நரேஷும் சும்மா பேசிக்கிட்டு இருந்தோம். உடனே அதையே கான்செப்டா வச்சி ஷூட் பண்ணிட்டோம். அவுட்புட் ரொம்ப நல்லா வந்தது” என்கிறார் ஹரி பாஸ்கர்.
“எடிட்டிங்ல ஒரு ஷாட் முடிஞ்சதும் அதற்குத் தொடர்பில்லாத இன்னொரு ஷாட் வைப்பதை ‘ஜம்ப் கட்ஸ்’னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட எங்க வீடியோ எடிட்டிங்கும் அப்படித்தான். அதனால அந்தப் பெயரையே சானலுக்கும் சூட்டி மகிழ்ந்தோம்” என்று ஹரி பாஸ்கர் நடித்துக்காட்ட, “ஷாட் ஓகே” என்று கட்டை விரலை உயர்த்துகிறார் நரேஷ்.
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனல்: >https://www.youtube.com/channel/UCpPOf9BQPwa4K11Zjxu1ZPw
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT