Published : 24 Oct 2014 03:11 PM
Last Updated : 24 Oct 2014 03:11 PM
இருசக்கர வாகனத் தயாரிப்பில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் யமஹா இந்தியா. இதன் தயாரிப்பான யமஹா பைக்குகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த வாகனம். யமஹா ஆர்எக்ஸ் 100 அறிமுகமான புதிதில், அதன் ஆக்சிலேட்டரைத் திருகுவதில் இளைஞர்களின் வாலிப முறுக்கு வெளிப்பட்டது. இப்போது சந்தைகளில் அநேக வாகனங்கள் வந்துவிட்ட நிலையில் யமஹா அவற்றுடன் போட்டியிட்டுத் தன்னை நிரூபிக்கப் போராடிவருகிறது.
இந்த ஆண்டில் ஆர் 15 ஆல்பா மற்றும் எஃப்இஸட் ஆகிய மாடல்களில் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ள யமஹா நிறுவனம். இந்த வரிசையில் தற்போது அந்நிறுவனம் யமஹா எஸ்இஸட்- ஆர்ஆர் என்னும் 2.0 வெர்ஷனை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த வாகனத்தில் புளு கோர் தொழில்நுட்பம் பயன்பட்டுள்ளது. 149 சிசி இன்ஜினில் கார்பரேட்டர் பொருத்தப்பட்ட இவ்வாகனத்தின் திறன் 12 பிஎச் பவராக இருக்கிறது, இந்த பைக் 12.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
புளுகோர் தொழில்நுட்பத்தின் உதவியால் அதிக எரிபொருள் சிக்கனம் கைகூடும் என்றும், பைக் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும் என்றும் யமஹா நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முந்தைய மாடல் பைக்கைவிட 11 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்துக்கு இந்த பைக் வழிவகுக்கும் என்றும் யமஹா நிறுவனம் கூறுகிறது. பைக்கின் ஹேண்டில்பாரில் இடம்பெற்றுள்ள எஸ்இஸட் லோகோ வசீரகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐவரி வொயிட், கிரீன் ஆர்ரோ, ரெட் டேஷ் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாகனத்தை யமஹா நிறுவனம் பெருமையுடன் அறிமுகப்படுத்துவதாகவும், நகரத்தின் போக்குவரத்துக்கு உதவும் வகையில் இது அமைந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த வாகனம் பெறும் என்றும் அதன் முக்கிய அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். எல்லாம் சரி வாகனத்தின் விலை என்ன என்கிறீர்களா, ஷோ ரூம் விலை ரூ. 65,300.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT