Published : 08 Feb 2014 12:38 PM
Last Updated : 08 Feb 2014 12:38 PM
இது தேர்தல் காலம். அடிமைத்தனத்திலிருந்து மீள ஒவ்வொரு நாடும் பல விசயங்களை இழந்துள்ளது. ஆனால், சுதந்திரத்தை ருசிக்க எங்கேயும் அறியாத பல சுவாரசியங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அதிலொன்று, பிரான்சின் வசமிருந்த புதுச்சேரியை மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்திதான் இந்தியாவில் இணைந்தனர்.
இந்தியா, சுத்திரம் அடைந்த பிறகும் புதுச்சேரி பிராந்தியங்கள் மட்டும் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது மக்கள் மத்தியில் புதுச்சேரியில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்கள் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்தனர்.
பிரெஞ்சு அரசு ஒப்புதல்
1954இல் ஆசியா கண்டத்தில் புதுவை மட்டுமே பிரெஞ்சு வசம் இருந்தன. அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ள பிரெஞ்சுப் பகுதிகளில் ராணுவத்தை இறக்கத் தொடங்கியது பிரெஞ்சு அரசு. இந்திய ஆதரவாளர்களின் பாதுகாப்புக்காக இந்தியாவும் படையை அனுப்பியது.
இருதரப்பிலும் நிலைமை விபரீதமாகத் தொடங்கியதால், இந்தியாவுடன் புதுவையை இணைக்க 1954ம் ஆண்டு பிரெஞ்சு அரசு ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், இந்தியாவுடன் புதுச்சேரி இணைய வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக 1948இல் பிரெஞ்சுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இதனால் 1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பு குறித்த சுற்றறிக்கையைப் பிரெஞ்சு அரசின் மக்கள் பிரதிநிதிகளுக்குப் அந்த அரசின் நிர்வாகம் அனுப்பியது. 1950ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கத் தகுதியானவர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1950ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 192பேர் வென்றிருந்தனர். மரணமடைந்த 14 பேரைத் தவிர்த்து மீதமிருந்த 178 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர்.
மக்கள் பிரதிநிதிகளான 178 பேரின் வாக்கே, புதுவையை இந்தியாவில் இணைக்க முடியுமா என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது.
அக்காலத்தில், இத்தேர்தலின் போது, “தாயக பூமியில் இணைவோம்” என்ற பிரசாரமும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. தேர்தலை எங்கு நடத்துவது என்ற கேள்வி அப்போது இந்தியத் தரப்பில் எழுந்தது. கடலோரப் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா விரும்பவில்லை. அதனால், இந்திய எல்லைப் பகுதியில் இருந்து 200 மீ தொலைவில் உள்ள கீழூர்ப் பகுதி தேர்வானது. அங்கு கொட்டகை அமைத்து வாக்கு மையம் அமைக்கப்பட்டது.
இணைந்தது புதுவை
பலத்த பாதுகாப்புக்கு இடையே 178 மக்கள் பிரதிநிதிகளும் வாக்களித்தனர்.
இந்தியாவுடன் பிரெஞ்சிய பகுதிகள் இணைய வேண்டுமா என்பதே வாக்கெடுப்பில் கேட்கப்பட்ட ஒற்றை கேள்வி. அதில் 170 பேர் ஆம் என்ற பதிலை அளித்ததால் இந்தியாவில் புதுச்சேரி இணைந்தது. இதில் 8 பேர் மட்டும் இல்லை என்று பதில் தந்திருந்தனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாகத் தேர்தல் அதிகாரி பாலசுப்ரமணியன் அறிவித்தார்.
புதுச்சேரியை இந்தியாவுக்கு இணைக்க வாக்களித்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும், வாக்கெடுப்பு நினைவு ஸ்தூபியும் கீழூரில் உள்ளது. அங்கு வாக்கெடுப்பு நடந்த மையமும் உள்ளது. அதில் அரிய புகைப்படங்கள் பார்வைக்கு உள்ளன. கீழூர் என்னும் இந்தக் கிராமம் , இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புடன் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment