Last Updated : 19 May, 2017 10:57 AM

 

Published : 19 May 2017 10:57 AM
Last Updated : 19 May 2017 10:57 AM

காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 07: காமெடியாக்கப்பட்ட காமெடி சூப்பர் ஸ்டார்

கவுண்டமணியார்: ஏம்பா, தமிழ் காமிக்ஸ் உலக சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

செந்திலார்: என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க? காமிக்ஸ் படிக்காதவங்களுக்குக்கூட தெரியுமேண்ணே, இரும்புக் கை மாயாவிதான் தமிழ் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார்னு. பத்திரிகையாளர் காமராஜுலு மொழிபெயர்க்க, முல்லை தங்கராசனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1972-ம் ஆண்டு சௌந்தரபாண்டியன் தொடங்கிய முத்து காமிக்ஸ் ஹீரோவா அவர் அறிமுகமானார்.

கவுண்டமணியார்: சரியாச் சொன்ன. ஆனால், அந்த இரும்புக் கை மாயாவி கதையிலேயே தில்லாலங்கடி வேலை நடந்துருக்கு. தெரியுமா?

செந்திலார்: அடி, ஆத்தாடி. கடைசீல இரும்புக் கை மாயாவி கிட்டயே கள்ளாட்டமா? சொன்னாத்தானே தெரியும். விவரமா சொல்லுங்கண்ணே.

கவுண்டமணியார்: முத்து காமிக்ஸ்ல ‘சைத்தான் சிறுவர்கள்’னு ஒரு தீபாவளி மலர் வந்துச்சே, ஞாபகம் இருக்கா?

செந்திலார்: ஆமாண்ணே. பாக்கெட் சைஸ்ல, கைக்கு அடக்கமா வந்துச்சே. செம கதைண்ணே அது.

கவுண்டமணியார்: ஆங், அதுதான் மேட்டரே. அந்தக் கதையின் ஆரம்பப் பக்கங்கள் பல காமிக்ஸ் கதைகள்ல இருந்து கொத்துக்கறி போட்டு எடுக்கப்பட்டது.

செந்திலார்: என்னண்ணே சொல்றீங்க? இரும்புக் கை மாயாவியோட கதை, ஆங்கில காமிக்ஸ்ல இருந்து மொழிபெயர்த்துத்தானே வரும்? வேற காமிக்ஸ்னா எப்புடி? விவரமா சொல்லுங்கண்ணே.

கவுண்டமணியார்: அதாவது, தீபாவளி மலர்னு போட்டு விளம்பரம் வந்துச்சு. ஆனா, ‘ஒரிஜினல்’ கதையின் ஆரம்பப் பக்கங்கள் சிவகாசி கம்பெனியோட கைக்கு கிடைக்கலை. அதனால, சிவகாசி கம்பெனி என்ன செஞ்சிச்சு தெரியுமா? உடனே கையில் கிடைச்ச காமிக்ஸ் புக்குல இருந்து எல்லாம் ஓவியங்களை எடுத்து வெட்டி ஒட்டி, ஒரு புதுக் கதையை ரெடி பண்ணி, இதுதான் ‘இரும்புக் கை மாயாவி’யோட காமிக்ஸ்னு வெளியிட்டுட்டாங்க.

செந்திலார்: அம்மாடியோவ்? அந்த கொத்துக்கறி காமிக்ஸ் செய்ய எத்தனை புக்கு தேவைப்பட்டுச்சுண்ணே?

கவுண்டமணியார்: லண்டனில் இருந்து வந்த சாம்பியன், கிரென்ச், ஸ்கிரீம் என்று ஒன்பது காமிக்ஸ் இதழ்களிலிருந்து அனுமதி பெறாத ஓவியங்களை வெட்டி ஒட்டி ‘ஒரிஜினல்’ இரும்புக் கை மாயாவியோட காமிக்ஸ் வந்திடுச்சு.

செந்திலார்: அண்ணே, ஒரிஜினல் பக்கங்கள் கிடைக்கலைன்னுதானே அப்படி செஞ்சாங்க? அது எப்படிண்ணே தப்பாகும்?

கவுண்டமணியார்: அடேய், ‘கபாலி’ படத்தோட ஃபுட்டேஜ் கெடைக்கலைன்னா, அஜித், விஜய், சூர்யா படங்கள்ல இருந்து கொஞ்சம், கொஞ்சம் எடுத்து, இதுதான் ‘கபாலி’ படம்னு சொன்னா நியாயமாகுமா? அந்த ஷோவை கேன்சல் பண்ணிட்டு, எப்போ சரியான, முழுமையான காட்சி கெடைக்குதோ, அப்போதானே போடுவாங்க?

செந்திலார்: அப்போ, அந்தக் கம்பெனி செஞ்சது தப்பாண்ணே?

கவுண்டமணியார்: தப்பில்லைப்பா, காபிரைட் சட்டப்படி குற்றம். தவிர்க்க இயலாத காரணங்களால, இந்த கதை வரலைன்னு வேற ஏதாவது கதையைப் போட்டு இருக்கலாமே? இதுல காமெடியான விஷயம் என்ன தெரியுமா?

செந்திலார்: அப்போ, நீங்க இதுவரைக்கும் சொன்னது காமெடி இல்லையா?

கவுண்டமணியார்: இல்லை, ராஜா. பல காமிக்ஸ் கதையிலருந்து எடுத்து, இரும்புக் கை மாயாவியோட கதைன்னு போட்டாங்க, இல்லையா? அந்த கதைகள் எல்லாமே அந்தக் கம்பெனியே தமிழ்ல வெளியிட்ட கதைகள்தான்.

செந்திலார்: என்னண்ணே சொல்றீங்க?

கவுண்டமணியார்: ஆமாம்பா, தமிழ்ல திகில் காமிக்ஸ் இதழ் #3 (படையெடுப்பு), முத்து காமிக்ஸ் இதழ் #179 (பச்சை வானம் மர்மம்), முத்து காமிக்ஸ் இதழ் #138 (களிமண் மனிதர்கள்), முத்து காமிக்ஸ் இதழ் #172 (ஜெஸ் லாங் – மரண நகரம்) இப்படின்னு பல கதைகள்லருந்து ஒவ்வொரு ஓவியமா வெட்டி எடுத்திருக்காங்க. இது எல்லாமே லண்டன்ல இருந்து வர்ற ஐ.பி.சி. மீடியா / ஃபிளீட்வே பப்ளிகேஷன்ஸ் நிறுவன இதழ்கள். அது மட்டுமில்லாமல், ஐ.பி.சி. நிறுவனத்துக்குப் போட்டி கம்பெனியான கிரென்ச் என்ற இதழிலிருந்தும் பல ஓவியங்களை கடன் வாங்கி இருக்காங்க.

செந்திலார்: என்னண்ணே, இது? கலவை சாம்பார் மாதிரி, கலவை காமிக்ஸா?

கவுண்டமணியார்: ஆமாம்பா. இதுல காமெடி என்னன்னா..

செந்திலார்: அண்ணே, இன்னுமா?

கவுண்டமணியார்: அட, ஆமாம்பா. கனடாவைச் சேர்ந்த ஒரு காமிக்ஸ் வாசகர் இதைக் கண்டுபுடிச்சு, விவரமா எழுத, உடனே ‘அந்த’ ஒரிஜினல் பக்கங்களையெல்லம் வச்சு, மறுபடியும் இதே கதையை இன்னொரு காமிக்ஸ் புத்தகமா வெளியிட்டுட்டாங்க, தெரியுமா?

செந்திலார்: அண்ணே, தலை சுத்துதுண்ணே. ஏற்கெனவே தமிழ்ல வந்த காமிக்ஸ் பக்கங்களில் இருந்து ஒட்டி, வெட்டி ஒரு காமிக்ஸ். அதை ஒருத்தர் கண்டுபுடிச்ச உடனே, மறுபடியும் ‘ஒரிஜினல்’ கதைய வச்சு இன்னொரு காமிக்ஸ்.

கவுண்டமணியார்: அட, இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்புடி? நடுவுல, இதே கதைய இலவச இணைப்பா. . .

செந்திலார்: அண்ணே, இன்னைக்கு இது போதும்ணே. வாசகர்களை நெனைச்சா பாவம் பாவமா வருது. ஆனால், இதையெல்லாம் கேட்டா, எனக்கு மயக்கம் மயக்கமா வருது, மிச்சம் இருக்குறதை இன்னொரு நாள் சொல்லுங்கண்ணே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x