Last Updated : 16 Sep, 2016 01:07 PM

 

Published : 16 Sep 2016 01:07 PM
Last Updated : 16 Sep 2016 01:07 PM

அலையோடு விளையாடு! 01 - கொஞ்சம் பயம், மிச்சமெல்லாம் சாகசம்

கடலை ஒட்டி அமைந்த என் கல்லூரி (சென்னை மாநிலக் கல்லூரி) வாழ்க்கையின்போது கடலையும், வரிசை மாறாமல் காற்றைக் கிழித்துச் செல்லும் பறவைகளையும் நேரத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ரசித்து லயித்துப் போயிருக்கிறேன். சென்னையைச் சுற்றி உள்ள குன்றுகளின் உச்சிக்குச் சென்று ஊரை நோட்டம் விடுவது, தமிழகத்தின் மற்ற ஊர் மலைகளைத் தேடிச் செல்வது, அடர்ந்த காடுகளில் வசிக்கும் நம் பூர்வகுடிகளை நட்பாக்கிக்கொண்டு காட்டுயிர்களையும் இயற்கையையும் அவை பிறந்த இடத்திலேயே ரசிப்பது, புல்லட்டைத் தட்டிவிட்டு மலை மலையாக ஏறுவது என இயற்கையில் புரண்டு எழுவது என்பது இனம் புரியாத, எளிதில் திருப்தியடைந்து விடாத அளவில்லா மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவது. இதில் மூழ்கித் திளைப்பது தனிச் சுகம்.

என் அலுவலகம் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டபோது வடஇந்தியாவில் உள்ள ஆறுகள், மலைகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். காலம்காலமாக நம் மண்ணின் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்வதையே ஒரே வேலையாக வைத்திருக்கும் கங்கை, கோதாவரி போன்ற பேராறுகளின் பிரம்மாண்டத்தைப் பார்த்து விலகி நிற்காமல் துணிச்சலுடன் காலை வைக்கும்போது, அந்த நதிகள் நம்மை ஏந்தித் தாலாட்டுவது அலாதி அனுபவம். இப்படி என்னுடைய பல தேடல்கள், சொல்லில் முழுதாக வடிக்க முடியாத ஆச்சரிய அனுபவங்களைத் தந்துள்ளன. அவற்றில் சில என்னைப் போலவே, உங்களையும் சேர்த்து ஆச்சரியப்படுத்தக் கூடியவை.

பிடித்து இழுத்த இயற்கை

என் சிறு வயதில் இருந்தே சாகச விளையாட்டுகள் என்னை ஆச்சரியப்படுத்தி வந்துள்ளன. காடுகள், மலைகள், ஆறுகள் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தன் புது ரகசியம் ஒன்றை எனக்குச் சொன்னபோதும், அவற்றின் மீதான ஈர்ப்பு என் மனதில் பெரிதாக வளர்ந்துகொண்டே வந்தது. ஒரு நிலையில், அது தண்ணீரை மையமிட்டுச் சுழல ஆரம்பித்தது.

உள்நாட்டில் நீர்நிலைகள், ஆறுகள், உலகின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றைக் கொண்ட நம் நாட்டில் இன்றைக்கு 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நீச்சல் தெரியும் என்ற சேதியை நிச்சயம் நம்ப முடியாது. ஆனால், அதுதான் உண்மை. அதிலும் வெறும் 2 சதவீதம் பேருக்கே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் நீந்தத் தெரியும். இது நிச்சயமாகப் பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல.

நான், நீச்சல் தெரியாத இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லையென்றாலும், நீச்சலைவிடவும் என்னைப் பிடித்து இழுத்தது அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டுதான். அலைச்சறுக்கு விளையாட்டின் மீது ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும், எல்லை தெரியாமல் பூமியைச் சூழ்ந்து கிடக்கும் ஆழி, என் மனதில் சற்றே அச்சத்தையும் ஏற்படுத்தியது.

கண்டேன் ‘பேட்லிங்’கை

அலைச்சறுக்கு விளையாட்டை முறைப்படி கற்பதற்கு, 2014-ம் ஆண்டில் 'Bay of Life' என்ற அமைப்பில் சேர்ந்தேன். பயிற்சியின்போது ஒரு நாள். கடல் சற்று அதிகமாகவே சீற்றம் காட்டியது. அலைச்சறுக்குப் பயிற்சியாளரும் நண்பருமான சௌகத் ஜமால், அப்போது வேறொரு வழியைக் கண்டார். புதிதாக அலைச்சறுக்கு கற்றுக்கொள்பவர்களை, சீறிக்கொண்டிருக்கும் கடலில் இறக்கிவிட்டு என்ன செய்வது? அருகில் இருந்த அலையே இல்லாத நீர்நிலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டார். புதிய அலைச்சறுக்குப் பாணியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அது SUP எனப்படும் Stand up paddling அல்லது Paddle Boarding. இதைச் சுருக்கமாக 'பேட்லிங்' என்று வைத்துக்கொள்வோம். சௌகத் ஜமால் அறிமுகப்படுத்திய பேட்லிங், என் மனதில் மிகப் பெரிய ரசவாதத்தை நிகழ்த்தியது. அதன் பிறகு நீர்வழிப் பாதைகளின் வழியாக, ஒரு நாய்க்குட்டியைப் போல பேட்லிங் என்னை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. பேட்லிங் பயிற்சியில் தீவிரமாக இறங்கினேன். தண்ணீரின் மேலே மிதந்து செல்லும்போது கிடைத்த அனுபவம், பயத்தைத் தூக்கி கடாசிப் புதிய உலகத்துக்குள் என்னை அழைத்துப் போனது. அதன் பிறகு, அலையடிக்கும் கடலிலும் பேட்லிங் பயின்றேன்.

இழுத்துச் சென்ற ஆறு

என்னதான் சென்னையில் வளர்ந்தாலும், பெத்த மண்ணை மறந்திட முடியுமா? பெரிய கோயில் கம்பீரமாக நிற்கும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஒரு முறை போயிருந்தேன், பேட்லிங் பலகையுடன்தான். அந்த மண்ணைக் கொழிக்கச் செய்த காவிரியின் கிளை ஆறான புது ஆற்றின் (கல்லணைக் கால்வாய்) கரைப்பகுதி கான்கிரீட் போடப்பட்டு, ஐந்து-ஆறு அடி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

ஓடும் ஆற்று நீரில் இறங்கி, பேட்லிங் செய்ய ஆரம்பித்தேன். ஆற்று மேலடுக்கு நீரோட்டம் குறைவாக இருந்ததால், துடுப்பு போட்டேன். சுற்றிலும் மக்கள் வியப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். புதிய இடம், புதிய அனுபவம்... மனதை ஒருமுகப்படுத்திப் பேடிலை செலுத்தினேன்.

பிறகு என் மகன், ஐந்து உறவினர்கள் ஒவ்வொருவராக பேட்லிங் பலகையில் ஏற்றி, அவர்களுக்கும் பேட்லிங் பயிற்சி கொடுத்தேன். பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்று நீரில் இறங்கினேன். இறங்கும்போது, பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. மீண்டும் பலகையில் ஏறும்போதுதான் சிக்கல் முளைத்தது. எவ்வளவு முயன்றும் பேட்லிங் பலகையின் மீது என்னால் ஏற முடியவில்லை. ஆற்று நீரின் கீழடுக்கு நீரோட்டம் என்னை வேகமாக, அதன் போக்கில் பிடித்து இழுத்துக்கொண்டு போனது. வெறும் ஐந்து-ஆறு அடி தண்ணியே இவ்வளவு வேகமாக ஒரு ஆளை இழுத்துச் சென்றுவிட முடியும் என்பது அப்போதுதான் புரிந்தது.

நிலைமையைப் புரிந்துகொண்டாலும், யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. நம்பிக்கையைச் சற்றும் கைவிடாமல் மீண்டும் மீண்டும் பலகையில் ஏற நான் முயற்சிக்க, ஆறு என்னைப் பிடித்து இழுக்க - இந்த 'நீர்க் கபடி விளையாட்டு' 300 மீட்டர் தொலைவுக்கு என்னை இழுத்துச் சென்றது, உடல் சோர்ந்து களைத்தது. ஒரு வழியாக ஒரு புதர் என் கைக்கு அருகே வர, அதை இறுகப் பிடித்துக் கரையைத் தொட்டுவிட்டேன்.

எடுத்துக்கொண்ட உறுதி

கரையேறிய அடுத்த நிமிடம், என் மனதுக்குள் இந்தப் பயணத்தின் காட்சிகள் 'பிளாஷ் பேக்'காக வேகமாக ஓடி மறைந்தன. இனிமேல் பேட்லிங் போகும்போது, தண்ணீரில் இறங்கித் துடுப்பு போட ஆரம்பிப்பதற்கு முன்பாக மிதவையங்கியை (Life Jacket) கட்டாயம் அணிந்துகொண்டாக வேண்டும். அது மட்டுமில்லாமல் பேட்லிங் பலகையையும் காலையும் இணைக்கும் இணைப்புக் கயிற்றை (Leash) அணிய மறக்கக் கூடாது என்று எனக்கே நானே ஒரு உத்தரவைப் போட்டுக்கொண்டேன். அன்று முதல் எந்தக் காலத்திலும் இந்த உத்தரவை நான் மீறுவதில்லை, என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடமும் இந்த விதிமுறையைப் பின்பற்றாமல் இருப்பதில்லை.

இந்த விதிமுறைகள் எந்த சாகச விளையாட்டுக்கும் அத்தியாவசியம். உரிய விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கும்போதுதான், சாகசத்தின் மூலம் பெறக்கூடிய பரவச உணர்வு உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பரவிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இயற்கையை நேசித்து, அதோடு ஒட்டிவாழ்ந்தால், எந்த ஒரு செயலில் சிக்கல் வந்தாலும், நிச்சயம் அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற தரிசனம் அன்றுதான் கிடைத்தது. தஞ்சை புது ஆறு அனுபவம் மட்டுமல்ல, உலகின் வேறு பல மூலைகளிலும் இதே தரிசனத்தை நான் பெற்றிருக்கிறேன்.

(அடுத்த வாரம்: லிம்கா சாதனைப் புத்தகத்தில்)

தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

கட்டுரையாளர் குமரன், தொழில்முறை நிலவியலாளர் (geologist). அதேநேரம் பேட்லிங் (paddling) அலைச்சறுக்கு விளையாட்டில் தேசியச் சாதனைகள் நிகழ்த்தியவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் பேட்லிங் செய்திருக்கிறார். நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபாடு காட்டி வரும் இவர், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் திறந்தவெளி சாகச விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x