Published : 03 Feb 2017 09:40 AM
Last Updated : 03 Feb 2017 09:40 AM
தொலைதூரப் பயணம் என்பது சாமானியர்களுக்குச் சோதனையாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேதனையாகவும் சில நேரங்களில் அமைந்து விடுகிறது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றுத் திறனாளிகளைச் சற்றே ஆசுவாசம் கொள்ளச் செய்தாலும் விலை காரணமாக, அது ஏழைகளுக்கு எட்டாத விஷயமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் கால் இழந்தவர்களுக்குச் செயற்கைக் கால் பொருத்தும் முகாமை ஈரோடு அருகில் மயிலம்பாடியில் 100 பேருக்கு ‘கெவின் கேர்’ நிறுவனத்தின் உதவியுடன் நடத்தியிருக்கிறது சென்னையின் ‘ஃப்ரீடம் டிரஸ்ட்’. தொடர்ச்சியாகச் செயற்கைக் கால் பொருத்தும் முகாமைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருவதாகக் கூறுகிறார், டிரஸ்டின் நிறுவனரும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மருத்துவருமான சுந்தர்.
இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து…
“நாட்டில் லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் ‘கேலிபர்’ போன்ற கருவிகளைப் பெறுவதற்கு வசதியில்லாமல் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருக்கின்றனர். ஒருமுறை, ஒரு சின்ன கிராமத்துல கேலிபர் பொருத்தலாம்னு அளவெடுக்கும் முகாம் செய்யத் திட்டமிட்டமிட்டோம். அப்போதான் அந்த ஒரு கிராமத்திலேயே 200, 300 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தாங்க. இது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துச்சு. அதன் பிறகு எல்லா கிராமங்களில் இருக்கக் கூடிய ஏழைகள் எவ்வளவு பேர் இருப்பாங்கன்னு தோன்றியது.
அதைத் தொடர்ந்து, எங்கள் அமைப்பின் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ‘வாக் இந்தியா’ திட்டத்தைத் தொடங்கினோம்” என்பவர் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘யூசர் ஃப்ரெண்ட்லி’ விஷயங்களை இளைஞர்கள் நிறைய உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
கடந்த மாதம் 5-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கியவுடன் நடத்தப்பட்ட முதல் முகாமிலேயே, 100 செயற்கைக் கால்களைப் பொருத்தியுள்ளது இந்த அமைப்பு.
“இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஒரு மொபைல் வேன் வடிவமைத்திருக்கிறோம். இந்த வேனில் ஒரு பிசியோதெரபிஸ்ட், சமூக ஆர்வலர், தேவையான உபகரணங்கள் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும், மாற்றுத் திறனாளிகளின் கால் அளவெடுத்தல், சரிசெய்தல், கேலிபரைப் பொருத்துவதற்கும் இந்த வேன் பயன்படும். இந்த மாதம் விழுப்புரத்துல இந்த முகாமை நடத்துறோம். இன்னும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்கக்கூடிய 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளையும் எங்களின் சேவை சென்று சேரணும். அதுதான் எங்களோட முக்கியப் பணி” என்பவர் சமூக சேவைக்கான ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நடக்கட்டும்’ இந்தப் பணி சீராக…!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT