Published : 31 Oct 2014 02:17 PM
Last Updated : 31 Oct 2014 02:17 PM
கடந்த வாரம் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெர்க்ளீ இசைக் கல்லூரி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது. அந்த மேடையில் ரஹ்மானின் பல பாடல்களை இசைத்து அவரால் மனமாரப் பாராட்டப்பட்டுள்ளார் இளம் தமிழ் பெண் ஒருவர்.
அவர் தற்போது பெர்க்ளீ இசைக் கல்லூரியில் படித்துவரும் சென்னையைச் சேர்ந்த ஹரிணி எஸ்.ராகவன். ரஹ்மானின் பாராட்டு மழை தந்த குஷியில் வானுக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருப்பவரோடு ஒரு விறுவிறுப்பான அரட்டை.
ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை அமெரிக்காவில் சந்தித்தபோது எப்படியிருந்தது?
நான் சென்னையில் இருக்கும்போதே ரஹ்மான் இசையில் ஒரு விளம்பரப் படத்திற்கு ஜிங்கிள்ஸ் பாடியிருக்கிறேன். அவருடைய எளிமையான குணத்தையும், நண்பனைப் போல் பழகும் விதத்தையும் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால் அமெரிக்காவில் மேற்கத்திய இசைக் கலைஞர்களோடு இணைந்து அவரைச் சந்தித்தது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். எங்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் நுழைந்த அந்தத் தருணத்தில் நான் மிகவும் பரவசமடைந்தேன்.
அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானைக் கவுரவிக்கும் விழாவில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
ரஹ்மான் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான். சில மாதங்களாகவே ரஹ்மானைச் சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்தோம். என்னுடன் படித்துவரும் சர்வதேச இசைக் கலைஞர்களுக்கு ரஹ்மான் பாடல்களின் தமிழ் உச்சரிப்பு, இந்திய இசைக்கே உண்டான நுணுக்கங்கள், பாடலின் பின்னணி மற்றும் அர்த்தம் போன்றவற்றை விளக்கிச் சொன்னேன். நிகழ்ச்சியில் நானும் வயலின் இசைத்து, பாடினேன்.
மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபோது, நான் அவர் அருகிலேயே நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிமிடங்களை மறக்கவே முடியாது.
ரஹ்மானிடம் நேரடியாக உரையாடினீர்களா?
இசை நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும்போது சிரித்த முகத்துடன் எங்களோடு வந்து அமர்ந்தார் ரஹ்மான். அவரையும் பாட அழைத்தேன், “நீங்கள் என் பாடல்களுக்குப் பல வண்ணங்கள் தந்து புது விதமாகப் பாடுவதை நான் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்கள் விருப்பம் போலப் பாடுங்கள். நான் இங்கு அமர்ந்தபடியே கேட்டு ரசிக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் ரஹ்மான்.
சென்னையில் கார்பரேட் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்த நீங்கள் இசை உலகில் எப்படி நுழைந்தீர்கள்?
4 வருடங்கள் சாஃப்ட்வேர் டெவலப்பராக வேலைபார்த்தேன். சிறு வயது முதலே கர்நாடக இசையில் வாய்ப்பாட்டும், வயலின் இசைக்கவும் கற்று வந்தேன். கல்லூரி நாட்களில் சென்னையில் உள்ள பல்வேறு இசை குழுக்களில் பாடவும், வயலின் இசைக்கவும் தொடங்கினேன். தொலைக்காட்சி இசைப் போட்டியில் பங்கேற்றேன். அதன் இறுதிப் போட்டி கோலாகலமாக துபாயில் நடத்தப்பட்டது. அதில் நான் வயலின் இசைத்ததை பாடகர் ஹரிஹரன் பெரிதும் பாராட்டினார். அதைத் தொடர்ந்து ஜிங்கிள்ஸ் மற்றும் குறும்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன.
உங்களது முக்கிய இசை அனுபவங்கள்?
இயக்குநர் அட்லீ இயக்கிய ‘முகப்புத்தகம்’ குறும்படத்திற்கு இசை அமைத்த அனுபவம், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் டேயோடா இடியோஸ் லைவா விளம்பரப் படத்திற்காகப் பின்னணி பாடியது ஆகியவற்றைச் சொல்லலாம்.
அமெரிக்க இசைக் கல்லூரியில் எப்படிச் சேர்ந்தீர்கள்?
அதற்கு மூல காரணம் ரஹ்மான் சார்தான். அவரோடு இணைந்து இசையில் ஈடுபட்ட நாட்களில், “உனக்குள் இருப்பது ஒரு இசைக் கலைஞர்தான்” என்றார். நானும் ஒரு கட்டத்தில் இசை உலகில் முழுவதுமாக இறங்கலாம் என முடிவெடுத்தபோதுதான், இசைக் கல்வி அளிப்பதில் உலகப் புகழ் வாய்ந்த பெர்க்ளீ கல்லூரி பற்றித் தெரிந்துகொண்டேன். என் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா சென்று பெர்க்ளீயில் சேர்ந்தேன்.
இசை உலகில் ஒலிக் கலவை, ஒலி வடிவமைப்பு போன்றவற்றில் ரஹ்மான் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தியவர். அதில் பெரிதும் ஈர்க்கப்பட்ட நான் பெர்க்ளீயில் எலக்ட்ரானிக் புரொடக் ஷன் மற்றும் டிசைன் படித்துக்கொண்டிருக்கிறேன்.
கர்நாடக இசையின் கலை அம்சங்களை மேற்கத்திய இசையோடு கலந்து இரண்டு சுதந்திர இசைக் குழுக்களை நடத்திவருகிறேன். விரைவில் வீடியோ கேம்ஸ், ஜிங்கிள்ஸ் மற்றும் திரைப்படங் களுக்கு ஒலி வடிவமைப்பு செய்து, இசை அமைப்பேன்.
உயிரே படத்தின் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலை ரஹ்மான்
இசை நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ
இதுவரை ஐந்தரை லட்சம் இணைய வாசிகள் இதை கண்டுகளித்திருக்கிறார்கள்.அதில் வயலின் இசைத்தும், பாடியும் அசத்துகிறார் ஹரிணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT