Last Updated : 12 Aug, 2016 12:20 PM

 

Published : 12 Aug 2016 12:20 PM
Last Updated : 12 Aug 2016 12:20 PM

வாசகர்களை மகிழ்விப்பவரே சிறந்த எழுத்தாளர்!

எழுத்தாளர் அஸ்வின் சங்கி ‘பாரத்’ தொடர் நாவல்களால் பிரபலமானவர். ‘இந்தியாவின் டேன் பிரவுன்’ என்று அழைக்கப்படும் இவரது நாவல்கள் ‘புராணத் தொடர்’ நாவல்களை விரும்பிப் படிக்கும் இளைஞர்களின் பிடித்தமான தேர்வாக இருக்கின்றன. இந்த ‘பாரத்’ தொடர் நாவல்களில் நான்காவது நாவலான ‘தி சியால்கோட் சாகா’வின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை ‘ஸ்டார்மார்க்’ புத்தக அங்காடியில் நடைபெற்றது.

அஸ்வின் சங்கியின் ‘தி ரோஸபல் லைன்’ (The Rozabal Line), ‘சானக்யாஸ் சான்ட்’ (Chanakya's Chant), ‘தி கிருஷ்ணா கீ’ (The Krishna Key) போன்ற நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் இந்நாவல் ஒரு ‘பிசினஸ் த்ரில்லர்’. “பாரத் தொடரில் நான் எழுதியிருக்கும் ஒவ்வொரு நாவலும் ஒரு புதுமையான களத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கும் த்ரில்லர் என்று சொல்லலாம். என் முதல் நாவலான ‘தி ரோஸபல் லைன்’ ஒரு ஸ்பிரிட்சுவல் த்ரில்லர். இரண்டாவது நாவல், ‘சானக்யாஸ் சான்ட்’ ஓர் அரசியல் த்ரில்லர். மூன்றாவது நாவலான ‘தி கிருஷ்ணா கீ’ ஒரு புராண த்ரில்லர். அந்த வரிசையில், ‘தி சியால்கோட் சாகா’வை ‘பிசினஸ் த்ரில்லராக’ எழுதியிருக்கிறேன்” என்கிறார் அஸ்வின்.

‘தி சியால்கோட் சாகா’நாவல், 1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது சியால்கோட்டில் இருந்து தொடங்குகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அரவிந்த் பகாதியா, பாம்பேவைச் சேர்ந்த அர்பாஸ் ஷேக் என்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையைச் சுற்றி சுழல்கிறது. இந்தியாவின் சமகால வரலாற்றைக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இந்நாவல் பின்தொடர்கிறது. அந்த வகையில், அஸ்வின் கற்பனை கதாபாத்திரங்களுடன் நிஜ கதாபாத்திரங்களையும் இந்நாவலில் உலவ விட்டிருக்கிறார்.

“இதுவரை வெளிவந்த என்னுடைய நாவல்கள் பெரும்பாலும் பண்டைய வரலாற்றைப் பின்னணியாக வைத்துத்தான் எழுதியிருந்தேன். இந்த நாவலைத்தான் முதன்முறையாகச் சமகால வரலாற்றுப் பின்னணியில் எழுதியிருக்கிறேன். சுதந்திர இந்தியாவில் வணிகம் எப்படி வளர்ச்சியடைந்தது, வணிகர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை ‘தி சியால்கோட் சாகா’வில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அதற்காகத்தான் மும்பை, கொல்கத்தா என இந்தியாவின் இரண்டு முக்கியமான தொழில் நகரங்களை என் கதைக்களத்துக்குத் தேர்ந்தெடுத்தேன். அரவிந்த், அர்பாஸ் என இருவரையும் 1950-60களிலிருந்த வணிகர்களோடு எளிமையாகத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். வணிக உலகில் எந்த மாதிரியான விளையாட்டுக்களை மனிதர்கள் விளையாடுகிறார்கள் என்பதை இந்நாவலில் பேசியிருக்கிறேன்” என்று சொல்கிறார் இவர்.

அஸ்வின் சங்கி எழுத்தாளராவதற்கு முன்னர் தொழிலதிபராக இருந்திருக்கிறார். அவர் எழுத்தாளராக வேண்டும் என்று தீர்மானித்துத் தன் முதல் நாவலை 2005-ல் எழுதியிருக்கிறார். அந்த நாவலைக் கிட்டத்தட்ட நாற்பத்தியெழு பதிப்பகங்கள் நிராகரித்திருக்கின்றன. ஒரு கட்டத்தில், தன் பெயரில் இருந்தே ஷான் ஹாகின்ஸ் (Shawn Hagins) என்ற ‘அனகிரம்’(ஒரு பெயரைக் கலைத்துப் போட்டு, அதிலிருந்து வேறு பெயர் உருவாக்குவது) உருவாக்கி சுயப்பதிப்பாகத் தன் முதல் நாவல் ‘தி ரோஸபல் லைன்’ நாவலை வெளியிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு, ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பகம் இவரது நாவலை வாங்கிப் பதிப்பித்திருக்கிறது. “எழுத்தாளராக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கும், நிராகரிப்புகளுக்கும் பயந்து எழுதுவதைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய அனுபவம். நான் பல அருமையான கையெழுத்துப் பிரதிகளைப் படித்திருக்கிறேன். அவையெல்லாமே எழுத்தாளர்கள் நம்பிக்கையிழந்து எழுதாமல் பாதியில் விட்டவை. அதனால், எழுத்தாளராக வேண்டுமென்று முடிவுசெய்த பிறகு, அதிலிருக்கும் தடைகளை மீறி கடைசிவரை அந்தக் கனவில் உறுதியாக இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இவருடைய நாவல்கள் மூலம் சமூகத்துக்கு ஏதாவது சொல்லவருகிறாரா என்று கேட்டதற்கு, “ஓர் எழுத்தாளரின் முதன்மையான வேலை, அவனுடைய வாசகர்களை மகிழ்விப்பதாக இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். கற்பித்தலும், தெளிவடைய வைப்பதும் அதற்கு அடுத்தபடியாகத்தான் இருக்க வேண்டும். என் நாவல்களில் தொண்ணூறு சதவீதம் வாசகர்களை மகிழ்விக்கவே செய்கின்றேன். அதனால், நாவல்களில் சமூகத்துக்கான செய்தியைத் தேடுவதில் எனக்கு உடன்பாடில்லை” என்கிறார் அஸ்வின் சங்கி.

“ஓர் எழுத்தாளனின் முதன்மையான வேலை, அவனுடைய வாசகர்களை மகிழ்விப்பதாக இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். கற்பித்தலும், தெளிவடைய வைப்பதும் அதற்கு அடுத்தபடியாகத்தான் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x