Published : 17 Oct 2014 03:13 PM
Last Updated : 17 Oct 2014 03:13 PM
நவநாகரிகப் பெண்களின் சரணாலயம் என்று மதுரை லேடி டோக் கல்லூரியைச் சொல்லலாம். புத்தம் புதிய ஆடை, அணிகலன்கள் எல்லாம் கடைக்கு வரும் முன்பே இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்று பிற கல்லூரி மாணவிகளை ஏங்க வைப்பார்கள்.
திடீரென ஒருநாள் மதுரை அரசு மருத்துவ மனையின் பிரசவ வார்டு முதல் அவசர சிகிச்சைப் பிரிவு வரையில் இந்த மாணவிகளே ஆக்கிரமித்து நின்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? அமைதியாக அதே நேரத்தில் தீர்க்கமான பார்வையோடு, மருத்துவமனையை வலம் வந்த அந்த மாணவிகளிடம் பேசினோம்.
பள்ளிகளில் மாரல் கிளாஸ் இருப்பது போல, இவர்கள் கல்லூரியில் மனித உரிமைகளைப் பற்றி ஒரு பாடம் இருக்கிறது. “சமூக செயல்பாட்டாளர் ஆனந்தராஜ் சமீபத்தில் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார். சுகாதார உரிமைகள் குறித்துப் பேச ஆரம்பித்ததுமே, ‘உங்களில் எத்தனை பேர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். வகுப்பில் இருந்த 60 மாணவிகளில் வெறும் 4 பேர் மட்டுமே கையைத் தூக்கினார்கள். அந்தக் கேள்வியும், பதிலும் எங்களை உறுத்தியது. உடனே, எங்கள் பேராசிரியை உமா மகேஸ்வரியுடன் ஜி.எச்.சுக்குக் கிளம்பி வந்துவிட்டோம்” என்கிறார் மாணவி அழகேஸ்வரி.
அரசு மருத்துவ மனையில் இருக்கும் வசதிகளைப் பற்றிப் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இல்லாத வசதிகள்கூட இங்கே இருக்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட நவீன பரிசோதனைகளுக்கான கட்டணங்களும் மிகக் குறைவாக இருக்கின்றன. ஆனால், நோயாளிகளுக்குத் தான் அதைப் பற்றித் தெரியவில்லை. இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தப்போகிறோம் என்கின்றனர் இந்த மாணவிகள்.
இந்த மருத்துவ மனையைப் பார்வையிடுவதில் 60 மாணவிகள் பங்கேற்றார்கள். மாணவி ஐஸ்வர்யா, “மருத்துவக் கல்லூரியின் ஒருநாள் முதல்வராக இருந்தால், என்ன செய்வாய்? என்று எங்களை நாங்களே கேட்டுக்கொண்டு அரசு மருத்துவமனையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் யோசித்திருக் கிறோம்” என்கிறார்.
சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நோயாளிகளாக வருபவர்களை, மேலும் நோயாளியாக்குகிற கழிவறைகளை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். காத்திருப்பவர்களுக்குப் போதிய இருக்கைகளும், குடிநீர் வசதியும் தேவை. பணியாளர்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில் கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகப் படித்தவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் இங்கே வரவழைக்க வேண்டும். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் அரசு மருத்துவமனைகளை முழுமையாக மாற்ற முடியாது என்பது போன்ற அழுத்தமான தீர்வுகளை முன்வைக்கின்றனர் இந்த மாணவிகள்.
அடுத்ததாகக் காவல் நிலையம், குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம், நீதிமன்றம் போன்ற இடங்களுக்கும் செல்ல இருக்கிறார்களாம். பயணம் தொடரட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT