Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM
பாரிஸ் பெரு நகர மையத்தினுள் அமைந்திருக்கும் ஒரு மண்டம். அதன் முற்றத்தில் அழகான வண்ணக் கோலங்கள். கோலப் பின்னணியில் ஒரு விறகடுப்பு. மட்பானையில் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் ஆங்காங்கே பட்டு வேட்டி சட்டை, பட்டுப்புடவை கட்டிய யுவன், யுவதிகள். குழுமியிருந்த கலைஞர்கள் பறையடித்து முழங்க ஆடல் பாடல் களைகட்டியது. பாரீஸ் பெருநகர மையத்தில் முதற்தடவையாக நடந்த புலம்பெயர் தமிழர் திருநாள் நிகழ்வு. இதை பிரான்ஸ் சிலம்புச் சங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
பிரெஞ்சுக் கலைஞர்களுடன் லண்டனிலிருந்து வருகை தந்திருந்த சந்தோஷ் குழுவினரும் பறை இசைத்தனர். இவர்களுடன் முன்னால் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நுண்கலைக் கல்லூரி முதல்வர் பாலசுகுமாரும் இணைந்து, பறை வாத்திய இசையின் தொன்மை யையும் விவரித்துப் பறை இசைத்தது சிறப்பாக இருந்தது. இவர்களுடன் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஆடிப் பாட, பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர்களும் இணைந்துகொண்டனர். ஆட்டம்பாட்டத்தில் வெளியரங்கம் குதூகலித்தது. குவாதூப் வழி வந்த 160 ஆண்டுப் புலம்பெயர் நீட்சியின் தலைமுறைப் பெண் கலைஞர்களும் பொய்க்கால் குதிரையாட்டத்தில் ஈடுபட்டு விழாவுக்குச் சிறப்பு சேர்த்தனர்.
விழா நடைபெற்ற உள்ளரங்கில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையிலான இசைக் கருவிகள், நூல்கள், பாவனைப் பொருட்கள், உணவு வகைகள் என எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தொடர்பான புரிதலைப் பரிசோதிக்கும் வகையில் பி. எச். அப்துல் ஹமீத் திடீரென நிகழ்த்திய போட்டியில் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட்னர்.
தமிழ்த் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நடனம், பாடல்கள் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டன. சிறப்பு விருந்தினர் உரையில், அப்துல் ஹமீது அவர்கள், “ஒரு பிள்ளையின் தாய் மொழி அப்பிள்ளை தாயின் கருவறையில் தனது 13ஆம் வாரத்திலிருந்து கேட்கத் தொடங்கும். இது எம் சந்ததியினருக்கு அந்தந்த நாட்டு மொழியாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் பத்து வயதிற்குள் பத்து வகை மொழிகளைக் கற்கும் திறனுடையதென அறிஞர்களது ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அந்த வகையில் நம் சந்ததியினர் தமிழைக் கற்று அதன் வழி சிறக்க வேண்டும்” எனக் கரவொலியுடன் கூறினார்.
புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் மூலத்தொடர்பின் தகவமைப்பு தொடரோட்டமாக அடுத்த தலைமுறையிருக்குக் கையளிக்கும் மக்கள் நிகழ்வரங்காக இந்நிகழ்வை அமைத்திருந்தது சிலம்புச் சங்கம் என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT