Published : 24 Jun 2016 12:32 PM
Last Updated : 24 Jun 2016 12:32 PM
நான் ஏழையா பணக்காரனா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க.
ஒவ்வொரு பாடத்திலும், பிரத்யேகமாகச் சில சொற்கள் இருக்கும். அவை அந்தப் பாடத்துக்கு அழகு தருவன. பொருளாதாரத்திலும் இப்படிச் சில சொற்கள் உள்ளன. அவற்றின் பொருள் என்னவென்று நமக்குத் தெரியும். அதைக் கொஞ்சம் ஆழமாகத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் ‘வறுமைக் கோடு’. இது ஒரு கற்பனைக் கோடு. உத்தேசமாகக் கணக்கிடப்பட்ட ஓர் அளவீடு. தவறாகப் புரிந்துகொண்டுவிட வேண்டாம். ‘கோடு’தான் கற்பனை; உத்தேசம். மற்றபடி, வறுமை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. குறைந்தபட்சம் இவ்வளவு வருமானம் இருந்தால்தான், ஒருவன் மானத்துடன் உயிர் வாழவே முடியும் என்ற அளவைக் குறிக்கிறது வறுமைக் கோடு. கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் ‘வசதியானவர்கள்’.
கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் ஏழைகள்; வறியவர்கள்; அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்கள்.
இந்தக் ‘கோடு’ வரையப் படுவதில்லை; வரையறுக்கப்படுகிறது. அவ்வப்போது ஒரு குழு அமைக்கப் படுகிறது. அந்தக் குழுவின் ‘கண்டுபிடிப்பு’, இந்தக் கோட்டை நிர்ணயிக்கிறது.
உலக அளவில், தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் வறுமை பற்றிய ‘ஆய்வுகள்’ மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் முடிவுகள், ‘அதிர்ச்சி தரத்தக்க’ தாக்கம் எதையும் ஏற்படுத்திவிடுவதில்லை. நோக்கமும் அதுவல்ல.
வறுமை ஒழிப்பு
ஆண்டாண்டு காலமாக, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள்தாம் வறுமையில் உழன்றுவருகின்றன.
வறுமைக்கு எதிரான ‘போர்’, தொடர்ந்து மும்முரமாக நடைபெற்றும் வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் சுமார் நூறு கோடி மக்கள், வறுமைக்குக் கோட்டுக்குக் கீழேதான் வாழ்க்கையை ‘அனுபவித்துக்கொண்டு’ இருக்கிறார்கள்.
அதனால் என்ன...? ‘போர் ஆயத்த’ நடவடிக்கை என்கிற பெயரில், அணுகுண்டுகள், ஏவுகணைகள், அதி நவீன ராக்கெட்கள், போர் விமானங்கள் என்று விற்பனை கனஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரகசியம் ஒன்றும் இல்லை. உலகில் ஆயுத வர்த்தகத்தில் புழங்கும் பணத்தில் ஒரு பகுதியை வறுமை ஒழிப்புக்குச் செலவழிக்க முடிந்தால்...? ஓரிரு ஆண்டுகளில் ஏழ்மை போய்விடும்.
இந்தக் கணக்கை ஒருமுறை பாருங்களேன். 2012-ம் ஆண்டு மட்டும், ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக, உலக நாடுகள் செய்த செலவு ஒரு கோடி கோடிக்கும் மேல். என்னது...? ‘கோடி’ தவறாக இரண்டு முறை வந்துவிட்டதா? ஊஹூம். சரியாகத்தான் இருக்கிறது.
முழுத் தொகையுமே பார்த்துவிடுவோமே... 117.78 லட்சம் கோடி ரூபாய்!
நினைவு இருக்கட்டும். ஒரே ஓர் ஆண்டுக்கு மட்டும் இவ்வளவு.
உலக மக்கள்தொகை 700 கோடி. என்ன கணக்கு ஆகிறது...?
உலகில் உள்ள ஒவ்வொருவரும், ஆண்டுக்கு சுமார் 12,000 ரூபாய், மாதம் ஆயிரம் ரூபாய், ‘சண்டையில் ஜெயிப்பதற்காக’ (யாரோடு..?) தண்டம் செய்துகொண்டு இருக்கிறோம்.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில், மாதம் 5,000 ரூபாய்!
கொஞ்சம் பொறுங்கள். ஆயுதங்களுக்காக ஆகும் செலவுடன், மத நடவடிக்கைகளில் தொகையையும் சேர்த்துப் பாருங்கள்....! மடங்கள், நிறுவனங்கள், அரசுகள், தனி நபர்கள் மதத்தின் பெயரால் செய்யும் செலவு, கணக்குக்கும், கற்பனைக்கும் எட்டாத தொகை. ஊம்..! மனது வைத்தால், ஒரே ஆண்டில், வறுமையை முற்றிலுமாக ஒழித்துவிடலாம்.
வறுமைக் கணக்கெடுப்பு
இந்தியாவுக்கு வருவோம். வறுமைக் கணக்கெடுப்பில் இரண்டு குழுக்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
1. டெண்டுல்கர் கமிட்டி. 2005-ல் அமைக்கப்பட்டது; 2009-ல் அறிக்கை தாக்கல் செய்தது.
2. ரங்கராஜன் கமிட்டி. 2012-ல் அமைக்கப்பட்டது. 2014-ல் அறிக்கை தாக்கல்.
இவ்விரு அறிக்கைகளின் சாராம்சத்தை மட்டும் பார்ப்போம்.
முதல் கமிட்டி சொன்ன வறுமைக்கோட்டின் அளவு - ஒரு நாளைக்கு, நகரங்களில் 33 ரூ. கிராமங்களில் - 27 ரூ. இரண்டாவது கமிட்டி சொன்னது - நகரங்களில் 37 ரூ. கிராமங்களில் - 32 ரூ.
இந்த அளவுகோலின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள்
முந்தைய அறிக்கையின்படி (2009) - 27 கோடிப் பேர்; இரண்டாவது அறிக்கையின்படி (2014) - 37 கோடிப் பேர்!
ஐந்தாண்டுகளில் பத்து கோடிப் பேர் அதிகரித்திருக்கிறார்களா? இல்லை.
ஆய்வுக்குக் கையாண்ட வழிமுறைகள் மாற்றி அமைக்கப் பட்டன. உணவு, உடை, கல்வி, சுகாதாரம் ஆகிய மதிப்பீடுகளுடன், இரண்டாவது கமிட்டி, போக்குவரத்து, வாடகை, ஊட்டச் சத்து ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டது. அதனால் எண்ணிக்கை உயர்ந்தது.
சரி. உண்மையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு, பயன் தருகின்றன...?
இது குறித்து, உலக வங்கி என்ன சொல்கிறது? ஏன் உலக வங்கியைக் குறிப்பிடுகிறோம்?
யாரும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், வறுமைக்கு எதிராகத் தீவிரமாகக் களத்தில் பணியாற்றும் நிறுவனங்களில், உலக வங்கிதான் முதன்மை இடத்தில் இருக்கிறது.
‘நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மேலும் மேலும் மக்கள், வறுமைக்கு எதிராகப் போராடி வென்று வருகிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு, முதன் முறையாக, கடந்த 10 ஆண்டுகளில், அக்டோபர் 2015-ல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போரின் தொகை, சுமார் 10% அளவுக்கு வந்துள்ளது’.
‘1981-ல் 191 கோடிப் பேர் இருந்தனர்; 2012-ல் 90 கோடிக்கும் குறைவு. சுமார் 30 ஆண்டுகளில், நூறு கோடிக்கும் அதிகமானோரை வறுமையிலிருந்து மீட்டு வந்துள்ளோம். நமது தீவிரம் குன்றாமல் பணியாற்றினால், 2030க்குள் வறுமை இல்லா உலகம் சாத்தியம்தான்’ என நம்பிக்கை தெரிவிக்கிறது உலக வங்கி.
ஒரே ஒரு சிக்கல். இந்த, ‘வறுமைச் சதவீதம்’ மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இயற்கைச் சீற்றங்கள் தொடங்கி, தனி நபர் பிரசினைகள் வரை, பல காரணங்களுக்காக, வறுமைக்குள் ‘புதிதாக’ வருகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘வறுமை ஒழிப்பு’தான், ஒரு தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகளில், முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும்.
சீரான சமமான சமுதாயம் (uniform, equitable society), ஒரு நாட்டின் பொருளாதாரத் திட்டங்கள், சட்டங்கள் மூலமாக மட்டுமே சாத்தியம். ஆனால் என்ன நிகழ்கிறது...? பல நாடுகளில், ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ நிலையில்தான், திட்டங்களின் பயன்கள், ஏழைகளைச் சென்று அடைகின்றன. பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாக, ஏழைகள், மேலும் ஏழைகளாக மாறவே, நவீனப் பொருளாதாரச் சிந்தனைகள் உதவுகின்றன என்கிற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் பரவலாகக் கேட்கிறது.
‘இடைவெளி’யைக் குறைப் பதற்கான வழிகளை விட்டுவிட்டு, அகலப்படுத்துவதற்கான திட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும், மனித குலத்துக்கு எதிரானவர்கள்தாம்.
‘வறுமை ஒழிப்பு’ குறித்து இளைஞர்கள், இன்னமும் ஆழமாகப் படித்துப் புரிந்து கொண்டால், போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும்; சமுதாய முன்னேற்றத்துக்குப் பணிபுரிய நல்ல தூண்டுகோலாகவும் அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT