Last Updated : 10 Feb, 2017 11:53 AM

 

Published : 10 Feb 2017 11:53 AM
Last Updated : 10 Feb 2017 11:53 AM

‘என் ஓட்டு உனக்கில்ல’ என உரக்கச் சொன்னோம்!

ஞாயிறு இரவு. உறவினர் வீட்டுப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடி, பாடிக்கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள். தமிழக அரசியல் நிலவரம் குறித்த செய்திகள் அவர்களுக்குள் இருக்கும் போராளியைத் தட்டி எழுப்பின. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரால் நியமிக்கப்பட்ட ஒருவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத வேறொருவர் திடீரென எப்படி தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்?” என்கிற விவாதம் அவர்களுக்கிடையில் எழுந்தது.

ஒரு வருடத்துக்கு முன்பே தேர்தலை முன்னிட்டு ஓட்டு அரசியலை விமர்சித்து அவர்கள் இயற்றிய ‘ராப்’ பாடலை சோஃபியா தேன்மொழி அஷ்ரஃப் முணுமுணுக்க ஆரம்பித்தார். சட்டென கிட்டாரை மீட்டத் தொடங்கினார் சுரேன் விகாஷ். உடனிருந்த தோழிகள் மூன்று பேர் களம் இறங்கினர். “நம் வீட்டில் பாடுவதைவிட ஏன் இரண்டே தெரு தள்ளி இருக்கும் போயஸ் தோட்டத்துக்கு முன்பே வலுவாக நம் எதிர்ப்பு குரலைப் பதிவு செய்யக் கூடாது?” எனத் தோன்றியது. ‘என் ஓட்டு உனக்கில்ல’ என்று அதிகார மையத்துக்கு முன்பே நேரடியாகச் சென்று பாடினார்கள். அதுவும் இரவு 11 மணிக்கு!

ஜனநாயகத்தின் மரணம்!

“இது எங்களைப் போன்ற சிலருடைய குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர்களின் குரல்” எனச் சீறுகிறார் சோஃபியா. அதே நேரத்தில் சட்ட நுணுக்கங்கள் குறித்த சரியான புரிதலோடும் நிதானமாகப் பேசுகிறார். “மக்கள் விரோதப் போக்கு அரசுகளிடம் சமீபகாலமாகத் தலைதூக்கியுள்ளது. அதை இளைஞர்கள் சமூக ஊடகங்களிலும் வெவ்வேறு தளங்களிலும் தட்டிக்கேட்கும்போது ‘தேசவிரோதம்’, ‘அவமதிப்பு வழக்கு’ போன்ற வார்த்தைகளைக் கொண்டு அடக்கி ஒடுக்க முயற்சிக்கிறார்கள்” என்கிறார்.

சமூக ஊடகங்களில் கலகக்குரல் எழுப்பி இளைஞர்களிடம் ஏகோபித்த வரவேற்பை ஏற்கெனவே பெற்றவர் சோஃபியா. ஆகையால் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ‘லைவ் ஸ்டிரீமிங்’ செய்யலாம் என முடிவெடுத்தார்கள். உடனிருந்த தோழிகளில் ஒருவர் வழக்கறிஞர் என்பதால் அவர் இது சட்ட விரோதம் அல்ல என்பதையும் உறுதி செய்தார். “பிரச்சினையைத் தேடி நாங்களே போகிறோம் என்பது நன்றாகத் தெரியும். ஆனாலும் நம்முடைய உரிமையை வென்றெடுக்க வேண்டிய நேரம் இது. மக்களாட்சி எனச் சொல்லப்பட்டாலும் அரசியல் நிதர்சனங்கள் ஜனநாயகம் மரித்துப்போனதையே காட்டுகின்றன. அதைச் சுட்டிக்காட்டவே சங்கை ஊதி ‘என் ஓட்டு உனக்கில்ல’ பாடலைப் பாடி முடித்தோம்” என்கிறார் சுரேன்.

யார் இவர்கள்?

ஏதோ போகிறபோக்கில், கூட்டத்தோடு கூட்டமாக எழுப்பிய குரல் அல்ல இவர்களுடையது. சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்ட இசையை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்தவர்கள் சோஃபியா, சுரேன். கோடைக்கானலை மாசுபடுத்தி அங்கு வாழும் ஏராளமான மக்களை உருக்குலைத்த பாதரசக் கழிவுகளை அகற்றச் சொன்ன ‘கோடைக்கானல் வோன்ட்’ பாடல் தொடங்கி ஏகப்பட்ட சமூகச் சிக்கல்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாடி வருகிறார்கள் இவர்கள். ‘மாசுக்குள்ளே நானே’, ‘யோசன பெருசு எங்க ஊரு சிறுசு’ இப்படிப் போராட்டப் பாடல்களுக்காகவே இவர்கள் தொடங்கிய இசைக்குழுதான் ‘ஜஸ்டீஸ் ராக்ஸ்’. அவற்றில் பாடல்களை இசையமைத்து வாசிப்பவர் சுரேன் விகாஷ். கொட்டும் அருவிபோல தங்குதடையின்றி ராப் வரிகளைத் தருபவர் சோஃபியா.

என்ன பாடல் இது?

அரசியல் மீது இளைஞர்களுக்கு வெறுப்பும் விரக்தியும் படர்ந்துள்ளது. தேர்தலில் ஓட்டுகளை அள்ள மக்களைத் தேடி வந்து இலவசங்களை அள்ளி வீசும் அரசியல்வாதிகள் புயல், வெள்ளம் போன்ற அசாதாரணச் சூழலில் மக்கள் சிக்கிக்கொள்ளும்போது இலவசங்களை விநியோகிப்பது இல்லை. ஆக, இந்தப் போலித் தனத்தைக் கண்டித்து, ‘தி நோட்டா சாங்க்’-ஐ 2016-ல் இயற்றினார் சுரேன். அரசியலில் நம்பிக்கை இழந்தவர்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்பதே அப்பாடலின் உயிர்நாடி!

சமூக ஊடகங்களில் போர் கொடி தூக்கும் இளைஞர்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவதில்லை என்கிற விமர்சனத்தைச் சமீபத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம் தகர்த்தது. அதிலும் சோஃபியா, சுரேன் போன்ற இளைஞர்கள் வேகத்தோடும் விவேகத்தோடும் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கியுள்ளார்கள்!

போயஸ் தோட்டத்தில் பாடியது