Last Updated : 28 Sep, 2013 03:36 PM

 

Published : 28 Sep 2013 03:36 PM
Last Updated : 28 Sep 2013 03:36 PM

இயல்பே அழகு

எப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது. கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் நடத்துவதை நாம் எல்லாரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவித்தே இருப்போம். நாம் குறையுடவர்கள், மேம்பட வேண்டியவர்கள் என்று நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தும் குற்றவுணர்வுமே இந்தப் பயிற்சியாளர்களை நாம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்குக் காரணம்.

ஒரு சந்தர்ப்பம் அல்லது ஒரு சூழ்நிலையைச் சொல்லி எல்லாரிடமும் அந்தப் பயிற்சியாளர்கள் கேள்வி கேட்பார்கள். எல்லாரும் சிறு குழந்தைகளைப் போல ஆர்வத்துடன் பதில்சொல்வோம். ஆனால் அத்தனை பேரும் சொன்னதற்கு மாறான ஒரு கருத்தைப் பயிற்சியாளர் சொல்வார். அப்போது நம்மிடம் ஏற்படும் தாழ்வுணர்ச்சிதான் இவர்களது முதலீடு.

நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் தன்னம்பிக்கையின்மை, நமக்கு நம்மைப் பற்றி இருக்கும் சுய நிச்சயமின்மைதான் ஆகியவைதாம் இதுபோன்ற ஆளுமைத் திறன் வகுப்புகள் பெருகுவதற்கான காரணம். இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். அவர்கள் நன்மையும் தீமையுமாக நாள்தோறும் சுய அனுபவம் மூலம் மேம்படுபவர்கள். பெரும் தவறுகளைச் செய்யவும், மாபெரும் நன்மைகளைச் செய்யவும் இந்தத் தனித்துவமே அவர்களுக்கு உதவியாக உள்ளது. அதனால் எந்த மனிதருமே- வெற்றிகரமான மனிதர்கள் உட்பட- நன்மை தீமைகளோடு உள்ளவர்கள்தாம்.

நேர்த்தியாகவும் சரியாகவும் நாகரிகமாகவும் மட்டுமே திகழ்கிற ஒரு மனிதனைக் கற்பனை செய்துபாருங்கள். அவன் சுற்றியுள்ளவர்களுக்கு அலுப்பை மட்டுமே தருவான். எல்லாச் சரி, தவறுகளுடனும் அன்றாட அனுபவங்கள் வாயிலாகவும், குடும்பம், நண்பர்கள், சமூக உறவுகள் மூலம் அவன் மாறிக்கொண்டே இருப்பவன்.

வேலைச் சூழலில் அதிகாரியிடமிருந்து வரும் எந்த உத்தரவையும் எதிர்கேள்வி கேட்காமல் அதை அப்படியே பின்பற்றுவது, சுயசிந்தனைக்குச் செவிகொடுக்காமல் வேலைசெய்வது போன்ற ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை ஒத்த போக்கே இந்த ஆளுமைத்திறன் பயிற்சிகளின் நோக்கமாக உள்ளது. உள்ளூரத் தாழ்வுமனப்பான்மையைக் காப்பாற்றுகிற பணியாட்களே பெரும்பான்மையான நிறுவனங்களின் தேவையாகவும் உள்ளது. இதுவே சுயமேம்பாடு மற்றும் ஊக்கநூல்களின் உள்ளடக்கமாக மாறியது. அந்த அடிப்படையில் இந்த நூல்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் 'போரிடுவதற்கே' தயார்ப்படுத்துகின்றன. சகமனிதனுடன் உறவுகொள்ளச் சொல்லித் தருவதை விட்டு அவனை மேலாண்மை செய்வது எப்படி என்று சொல்லித்தருகின்றன.

பத்து நாட்களில் பணக்காரர் ஆவது எப்படி? போன்ற பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகத்தைப் படித்து யாராவது பணக்காரர் ஆகியிருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஆசிரியர்கூடப் பணக்காரர் ஆகவில்லை. எப்படி வாழ்வது? என்பதை ஒரு புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமா?

இந்த உலகத்தில் வாழும் உயிர்களிலேயே மற்றவர்களுக்கு எப்படி வாழ்வது என்பதைச் சொல்லிக்கொடுப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியும். பெரும்பாலான தன்னம்பிக்கை மற்றும் சுயமேம்பாட்டு நூல்கள் மற்ற மனிதர்களைச் சந்தேகப்பட்டு அவர்களைக் கையாண்டு, பலன் பெறுவதை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. இந்த நூல்களைப் படிக்கும் வாசகரை, அது ஒரு பாதுகாப்பின்மை உணர்வுக்குள் தள்ளுகிறது. சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஏமாற்ற முயல்வதாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துகிறது. தனது நலன், தனது குறிக்கோள் என்ற ஒற்றைக் குறிக்கோளில் கவனம் செலுத்த மறைமுகமாக இந்நூல்கள் தூண்டுகின்றன.

ஒரு மனிதர் மேல் இன்னொரு மனிதர் நம்பிக்கை வைத்து அனுசரித்து வாழ்ந்த காலம் போய், அனைத்து மனிதர்களையும் சந்தேகப்பட்டு ஒரு மூடிய சமூகமாக நாம் வேகவேகமாக ஆகிவருகிறோம். அந்தச் செயல்முறையைத் தன்னம்பிக்கை நூல்களும், ஆளுமைத்திறன் பயிற்சிகளும் துரிதப்படுத்துகின்றன.

இன்று நடத்தப்படும் யோகா மற்றும் ஆளுமைத் திறன் வகுப்புகளில் முகங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அமைதியாகப் பதற்றமின்றி நேர்மறையாகப் பேச வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளர்கள் கூறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் கோபத்திற்கே இடமில்லை என்பது போல தோற்றம் அளிப்பார்கள். மேலாண்மைத் திறனையும், நிர்வாக ஆளுமைத்திறனையும் கடவுள் தன்மையாக அணுகுகின்றனர். ஒரு வாரப் பயிற்சியில் நீங்கள் யோகநிலையை அடைந்துவிடலாம். 15 நாள் பயிற்சியில் சிறந்த நிர்வாகி ஆகிவிடலாம்.

வாழ்க்கையை பாசிட்டிவ்வாக அணுகுவதற்கும், ஆளுமை மேம்பாட்டுக்குமான பயிற்சிகள் தேவையே இல்லையா என்று இதைப் படிப்பவர்களுக்கு கேள்வி வரலாம். நிச்சயம் தேவை. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற உப்புசப்பில்லாத ஆலோசனைகள் கொண்ட புத்தகங்களை விட்டு, சுயசரிதங்களைப் படியுங்கள். வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். நாடுகளின் வரலாற்றைப் படியுங்கள். என்னென்ன நெருக்கடிகள், எத்தனையோ வகையான இழப்புகளைச் சந்தித்தும் மனிதர்கள் மாமனிதர்களாக ஆவதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களைச் சுற்றி நடப்பதில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் வாழும் மனிதர்களின் சுக,துக்கங்களை பரிவுணர்வோடு பாருங்கள். நீங்கள் காரில் செல்பவராக இருந்தால், சைக்கிளில் செல்பவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை எந்த முன்தீர்மானமும் இன்றிக் கற்பனையில் வாழ்ந்து பாருங்கள்.

வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு வாழ்க்கைக்குள் தான் நீங்கள் மூழ்க வேண்டும். நீச்சல் குளத்தில் குதிக்காமல் நூறு புத்தகங்கள் படித்தாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.

நமது மனமும், நம்மைச் சுற்றியுள்ள வண்ணமயமான வாழ்க்கையும் எந்த நூலையும் விட, எந்த குளிர்சாதன அறை ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பையும் விட சக்திவாய்ந்தது. நாம் செயல்படத் தொடங்கும்போதே மேம்படுகிறோம். நாம் ஒருவரையொருவர் பரஸ்பரம் நம்பத் தொடங்கும்போதே நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்துகொள்கிறோம். கூட்டமாகச் செல்லும் பறவைகள்தாம் விரைவில் தனது இலக்கைச் சென்றடைகின்றன. தனிப்பறவைகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x