Published : 01 Jan 2016 01:00 PM
Last Updated : 01 Jan 2016 01:00 PM

"இதுவும் எங்களால் முடியும்!"

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. நேசக் கரம் நீட்டியவர்களின் நிவாரணக் கொடைகளால் உயிரைப் பிடித்துக்கொண்ட மக்களுக்கு, இடிந்து போன தங்கள் வாழ்க்கைக் கட்டுமானத்தை பழையபடி எங்கிருந்து கட்டி எழுப்புவது என்று தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் நிற்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொடுக்கப் புறப்பட்டுவிட்டது ‘குதாயீ கித்மத்கார் (கடவுளின் குழந்தைகள்)’ அமைப்பு.

இந்த அமைப்பு குறித்தும், இந்த அமைப்பைச் சேர்ந்த இனாமுல் ஹசன் என்ற இளைஞரைக் குறித்தும் சென்ற ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி 'இளமை புதுமை' இதழில் எழுதியிருந்தோம்.

இப்போது, அந்த அமைப்பைச் சேர்ந்த 47 பேர் இதன் தேசியச் செயலாளர் இனாமுல் ஹசன் தலைமையில் கடலூரில் வெள்ளப் பகுதிகளில் முகாமிட்டிருக்கிறார்கள், அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த மக்களின் பழைய வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதற்காக!

“நவம்பர் 10-ம் தேதி நானும் நண்பர்களும் கடலூர் பகுதி கிராமங்களுக்கு வந்தோம். ஒரு வார காலம் இந்தப் பகுதியில் வேலை செய்யலாம் என்பதுதான் அப்போதைய எங்களது செயல்திட்டம். ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகு மக்கள் இருந்த நிலைமை எங்களை நிலைகுலையச் செய்துவிட்டது. ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட்டம். ஆனால், இங்குள்ள மக்களுக்கு இரண்டு நாட்களாக சோறு தண்ணீர் இல்லை.

தாமதிக்காமல் களத்தில் இறங்கினோம். வடலூர் சன்மார்க்க சங்கத்திலுள்ள எனது நண்பர் ஒருவர் மூலமாக அன்று இரவுக்கு ஆயிரம் பேருக்கான உணவைத் தயார் செய்து கொடுத்தோம். கடலூர் மக்களின் பரிதாப நிலையைச் சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியா முழுவதுமுள்ள எங்களின் நண்பர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தினோம். அவர்கள் தந்த அவசர உதவிகளை வைத்து அடுத்தடுத்த நாளும் அந்த மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்தோம். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் எங்களுக்கு வந்து குவியத் தொடங்கின.

அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ சென்றிருக்காத கிராமங்களைத் தேடிப்பிடித்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினோம். கடந்த 33 நாட்களில் 112 கிராமங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் குடும்பங்களுக்கு சுமார் 200 டன் நிவாரணப் பொருட்களை கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன எங்களின் கரங்கள்" ஆத்ம திருப்தியுடன் சொல்கிறார் இனாமுல் ஹசன்.

இவர்கள் சேவையளித்துக் கொண்டிருக்கும் 112 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை தலித் மற்றும் பழங்குடியின மக்கள் கிராமங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு ஒரு தன்னார்வலர் என பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு முறைப்படி கவுன்சிலிங் கொடுத்து அவர்கள் மூலமாகவே நிவாரணப் பணிகளை சம்பந்தப்பட்ட மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது இனாமுல் ஹசன் குழு. மக்களுக்குத் தற்காலிக நிவாரணங்களை வழங்கிக் கொண்டே அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எழுதும் முயற்சியையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுளின் குழந்தைகள்.

"இந்த மக்கள் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை அடைய வேண்டும். அதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர்களுடனேயே தங்கி இருக்க முடிவெடுத்திருக்கிறோம். கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த தலித் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் 10 கிராமங்களை அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாங்கள் தத்தெடுக்கப் போகிறோம். அந்த கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அங்குள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இங்கிருக்கும் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவது எங்களின் முதல் பணி.

இங்குள்ள இளைஞர்கள் என்ன வேலை கிடைக்கிறதோ அந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல் அவர்களுக்கு முறையாக தொழிற்பயிற்சி கொடுத்து அவர்களைத் திறன்மிக்க‌ தொழிலாளர்களாக மாற்ற தொழில் பயிற்சிக் கூடங்களை உருவாக்குவது, மாவட்ட நிர்வாகத்துடன் பேசி பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குவதுடன் அரசின் மூலமாக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் முயற்சிகள் எடுப்பது ஆகியவை எங்களின் அடுத்த பணி.

இங்குள்ள பெண்கள் விவசாயத்தையும் வேலைக்கு உணவுத் திட்டத்தையும் தவிர பொருளீட்ட வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள். அப்படி இல்லாமல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் என ஒன்றைச் சார்ந்து ஒன்று என சுழற்சி முறையில் ஆண்டு முழுமைக்கும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்படி பயிற்சி அளிக்கப் போகிறோம்" என்கிறார் ஹசன்.

முதல்கட்டமாக வேலங்கிப்பட்டு என்ற கிராமத்தை ஹசன் குழு தத்தெடுத்திருக்கிறது. இங்குள்ள 86 குடிசைகளையும் படிப்படியாகத் தகரக் கூரையுடன் கொண்ட பக்கா கட்டிடங்களாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறார்கள். கட்டுமானப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அவற்றைக் கொண்டு அந்தப் பகுதி மக்களையே வீடுகளைக் கட்ட வைப்பதுதான் இவர்களின் திட்டம். இதன்மூலம் கட்டுமானக் கூலி உள்ளிட்டவைகள் குறையும் என்பதால் 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு வீட்டைக் கட்டிவிட முடியும் என்கிறார் ஹசன். தைப் பொங்கலன்று இங்கே வீடுகளைக் கட்டும் பணியைத் தொடங்குகிறார்கள்.

விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை. இதுமட்டுமல்ல, ‘மது அருந்த மாட்டோம்' என்று கைப்பட உறுதிமொழிப் படிவம் எழுதிக் கொடுத்தால்தான் வீடு என்று நிபந்தனையும் விதித்து சமுதாயப் புரட்சிக்கும் விதை போடுகிறார்கள். ‘இதையெல்லாம் சாதிக்கப் பணமும் படை பலமும் வேண்டுமே?’ என்றபோது, "நண்பர்கள் மூலம் நிதியைத் திரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களின் பணிகளைப் பார்த்துவிட்டு தொண்டு அமைப்புகள் சில, நாங்களும் சில வீடுகளைக் கட்டித் தருகிறோம் என சொல்லியிருக்கிறார்கள். சமூகப் பொறுப்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பணிகளை அந்தந்தப் பகுதி இளைஞர்களையே கொண்டு செய்துமுடிக்கத் திட்டமிடுகிறோம். அவர்களுக்கு உதவுவதற்காகப் பல்வேறு மாநிலங்களில் உள்ள எங்கள் அமைப்பினர், பணி விடுப்பு, கல்லூரி விடுப்பு நாட்களில் இங்கே சுழற்சி முறையில் வந்து போவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள் நினைத்ததைச் சாதித்துக் கொடுத்துவிட்டுத்தான் நான் இங்கிருந்து வெளியேறுவேன்" என்று நம்பிக்கை வார்க்கிறார் இனாமுல் ஹசன்.

வாழ்த்துகள் ஹசன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x