Published : 17 Oct 2014 03:24 PM
Last Updated : 17 Oct 2014 03:24 PM
இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிட்டது, ஜப்பானை மிஞ்சிவிட்டது, சீனாவை மிஞ்சிவிட்டது. இப்படியெல்லாம் நடக்கணும்னா சந்தேகமேயில்லாமல் ஒண்ணு அது கனவா இருக்கணும் அல்லது சினிமாவா இருக்கணும்னு நினைக்கிறீங்களா?
உங்களுக்குப் பயங்கரமான ஐக்யூங்க. சினிமாவில்தான் இந்த மூன்று நாடுகளையும் இந்தியா முந்தியுள்ளது. எந்த சினிமாவுலனு கேட்டுறாதீங்க. சினிமாங்கிறது சரிதான், ஆனால் இது சினிமாக் கதையல்ல, நிஜம். யாருங்க சொன்னது இதை? வேறு யாரு ஒரு புள்ளிவிவரம்தான். எதையாவது சொல்ல வேண்டியது, கேட்டால் உடனே புள்ளிவிவரம்னு சொல்லிட வேண்டியது, ‘அடப் போங்கப்பா போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கப்பா’ன்னு வசனம் பேசாமல் கொஞ்சம் பொறுமையாப் படிங்க.
சீனாவைவிட, அமெரிக்காவை விட, ஜப்பானைவிட அதுவும் சொல்லப்போனால் சீனா ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டுத் தொகையை விட அதிகமாக இந்தியாவில்தான் சினிமா தயாரிக்கப்படுகிறது என்கிறது அந்தப் புள்ளிவிவரம். இருக்காதா பின்ன! 2012-ம் ஆண்டில் அமெரிக்காவில் 476 படங்கள் தயாரிக்கப்பட்டன, சீனாவில் 745 படங்கள், ஜப்பானில் 554, இந்தியாவில் எவ்வளவு தெரியுமா? 1,602. இது மட்டும்தான் நமது பெருமை. எண்ணிக்கையில் அதிகம், ஆனால் தரத்தில் என்னன்னு கேட்கக் கூடாது. அது தப்பு.
தரத்தைப் பற்றி நமக்கென்ன கவலை. நிறையப் படம் வருதா ஜாலியா(?) பாத்தமா அதோட போயிரணும். அப்படியில்லாட்டி உனக்கு ஒரு போட்டோகூட எடுக்கத் தெரியாது, நீயெல்லாம் சினிமாவப் பத்தி பேசுறியான்னு பொங்கிருவாங்க. தீபாவளி சமயத்தில் எதுக்குப் பொங்கல ஞாபகப்படுத்தணும், விட்டுருவோம்.
2012-ம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட சினிமா டிக்கெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை, 264.1 கோடி டிக்கெட்டுகள். இதே ஆண்டில் அமெரிக்காவில் 135.8 கோடி டிக்கெட்டுகளும், சீனாவில் 47 கோடி டிக்கெட்டுகளும், 15.5 கோடி டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம், அதனால் சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்றீங்களா.
2013-ம் ஆண்டில் சராசரியாக ஒரு இந்தியர் 2.18 படம் பார்த்திருக்கார். அதென்ன 2.18, அஞ்சாம இரண்டு படம் பார்த்த ஆளு அடுத்த ஒரு படத்தில் துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஓடி வந்திருப்பாரோன்னு கேட்டுராதீங்க. சராசரிங்கிறத கவனமாகப் பார்த்துக்கோங்க.
அதிகமாகப் படம் தயாரிக்கப்படும், அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகும் நமது நாட்டுத் திரைப்படங்களில் வருமானமும் அதிகமாகத்தான இருக்கணும். ஆனால் அப்படியில்லங்க. வருமானத்தில் இந்தியப் படங்கள் சீன, அமெரிக்க, ஜப்பான் படங்களை விட ரொம்ப கீழ் மட்டத்துலயே இருக்கின்றன. தரத்தில் கீழ் மட்டத்துல இருந்தா வருமானத் துலயும் கீழ் மட்டத்துல தான இருக்கும்னு லாஜிக் பேசாதீங்க. அடிச்சுருவாங்க. காரணம் அது இல்லையாம்.
இந்தியாவில் டிக்கெட் விலை ரொம்ப கம்மியாம். இது வேறயான்னு அடிக்க வராதீங்க. இத நாங்க சொல்லல, புள்ளிவிவரம் சொல்லுது. 2012-ல் அமெரிக்கப் படங்கள் 10.8 மில்லியன் டாலர் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. சீனப் படங்கள் 2.74 பில்லியன் டாலரும், ஜப்பான் படங்கள் 2.45 பில்லியன் டாலரும் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. ஆனால் இந்தியப் படங்கள் வெறும் 1.59 பில்லியன் டாலரைத்தான் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. இதனால்தான் ‘உத்தம வில்லர்’ டிக்கெட் விலையைக் கூட்டுங்க கூட்டுங்கன்னு கரடியா கத்துறாரோ?
ஆனால் நூறு எரநூறுக்கு டிக்கெட் வாங்கிப் படம் பார்த்துட்டே படம் நல்லா இல்லன்னா டைரக்டர வெளியில தல காட்ட முடியாதபடி நம்ம நெட்டிஸன்கள் கழுவிக் கழுவி ஊத்துறாங்க. ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிப் படம் பார்த்து அது மொக்கையா இருந்தா, நினைச்சாலே சும்மா அதிருதுல்ல. சரி, இதெல்லாம் நமக்கெதுக்கு. புள்ளிவிவரத்த சொல்லியாச்சு அவ்வளவுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT