Published : 17 Oct 2014 03:15 PM
Last Updated : 17 Oct 2014 03:15 PM
பிரெட் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளான கோதுமை அறுவடை, ஐரோப்பாவில் அக்டோபர் தொடக்கம் முதலே மும்முரமாக நடைபெறுவது வழக்கம். அங்கு இதை அறுவடை திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
அதேவேளையில் ஆண்டுதோறும் அக். 8-ம் தேதியை ‘வேர்ல்டு பேக்கர்ஸ் டே’ ஆக உலகம் முழுவதும் பேக்கரி துறையில் உள்ளவர்கள் கொண்டாடி வருகின்றனர். கோதுமையை மூலப் பொருளாகக் கொண்டு, மைதா மாவில் தயாரிக்கப்படும் பேக்கரி வகை உணவு குறித்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 18 ஆண்டுகளாக திருச்சி ஜென்னீஸ் அகாடமி, கல்லூரியில் வித்தியாசமான வடிவங்களில் பிரெட் வகைகளை உருவாக்கிக் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த புதிய முயற்சிக்கு விரிவுரையாளர் அழகருடன், மாணவர்கள் ரமாதேவி, பவித்திரன், தயானந்த், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு கைகோக்க, (கோ- கிரீன்) ‘பசுமையைக் காப்போம்’ என்கிற பிரம்மாண்ட பிரெட் கண்காட்சியில் தங்கள் கற்பனைக்கு உருவம் கொடுத்துப் பல்வேறு படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.
கண்காட்சியில் அனைவரையும் கவரும் வண்ணம் பட்டர் கிரீம் மூலம் உருவாக்கப்பட்ட 6 அடி உயரம் கொண்ட பசுமை மலைக்குன்று, மழைநீர் சேகரிப்புடன் கூடிய வீடு மற்றும் அதனருகில் அழகிய வயல்வெளி, குழந்தைகள் விளையாடும் ராட்டினம், மலைக்குகையில் இருந்து வெளிவரும் ரயில், அடைகாக்கும் பறவை, தீயவை பேசாதே, பார்க்காதே, கேட்காதே என்று வலியுறுத்தும் குரங்குகள், தேனீ வளர்ப்புக் கூண்டு, பூமியைப் பாதுகாக்க வலியுறுத்தி கைகோத்து நிற்கும் குழந்தைகள், பசுமைக் காய்கறிகள் அடங்கிய கூடை, அறுவடை செய்த கோதுமை கதிர், நீர்வாழ் உயிரினங்களான மீன், ஆமை, இறால், நண்டு, பாம்பு உள்ளிட்ட வடிவங்கள் அனைத்தையும் மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட பிரெட்டினால் உருவாக்கி அசத்தியிருந்தனர்.
இதில் முக்கியமாகத் திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையின் முழுத் தோற்றத்தை 5 அடி உயரத்தில் ராயல் ஐஸ் கிரீம் மூலம் உருவாக்கியிருந்தது பார்க்கவே பிரமிப்பாகக் காட்சியளித்தது.
நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பேக்கரி துறை, மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு சார்ந்தது என்பதால் முடிந்தவரை சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காமல் இயற்கையோடு இணைந்திருப்பதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கண்காட்சியை வடிவமைத்ததாகத் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் கண்காட்சியைப் பார்வையிட வந்த பள்ளி மாணவர்களுக்கு கேக், பிரெட் தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கல்லூரிக்குப் படிக்கச் சென்றோம், படித்து முடித்துவிட்டு வந்தோம் என்றில்லாமல், படிப்பு சார்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் சமூக அக்கறையுடன் பங்களிப்பைச் செலுத்தக் கல்லூரிகளில் பயிலும் அனைத்துத் துறை மாணவர்களும் ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்றனர் நான்கு பேரும் ஒருமித்த குரலில்.
மாணவர்கள் (வலமிருந்து) ரமாதேவி, பவித்திரன், தயானந்த், பாஸ்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT