Last Updated : 05 Aug, 2016 12:21 PM

 

Published : 05 Aug 2016 12:21 PM
Last Updated : 05 Aug 2016 12:21 PM

சுவோட் எதிர்காலத்தை நோக்கிய ஓட்டம்!

வழக்கமாக, விளையாட்டுப் போட்டிகளில் பெறும் வெற்றிகளோ தோல்விகளோதான் செய்திகளாகும். பங்கேற்பு என்பது அரிதாகத்தான் செய்தியாகும். ஒலிம்பிக்கில் மாங்கர் மக்கூர் சுவோட்டின் பங்கேற்பும் அப்படித்தான்.

அப்படி என்ன சிறப்பு சுவோட்டின் ஒலிம்பிக் பங்கேற்பில்? இருக்கிறது! மிகச் சமீபத்தில் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டின் கொடியைத் தனது உடையில் பதித்துக்கொண்டு இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார் சுவோட். உள்நாட்டுப் போர்களாலும், உலக அரசியல் சூழ்ச்சிகளாலும் சிக்கிச் சின்னாபின்னமான சூடானிலிருந்து 2011-ல் சுதந்திரமடைந்த, ஆனால் இன்னும் சின்னாபின்னமாகவே இருக்கும், தெற்கு சூடானைச் சேர்ந்தவர் சுவோட். அவர் தெற்கு சூடானிலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் இதில் சிறப்பு. ஆஸ்திரேலியாவில் அகதியாக இருக்கும் அவர், ஒரு அகதியாகவே தனது நாட்டின் பெயரை முதுகில் ஏந்திக்கொண்டு ஒலிம்பிக்கில் ஓடப்போகிறார். தொடர்ந்து அகதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த உலகின் வஞ்சத்துக்கு எதிரான அடையாள ஓட்டமாக சுவோட்டின் ஓட்டம் கருதப்படும் என்பதுதான் அவருடைய ஒலிம்பிக் பங்கேற்பை அவ்வளவு சிறப்பானதாக ஆக்குகிறது.

சூடானில் பிறந்து ஆஸ்திரேலியா வழியாக ரியோவுக்குச் சென்றிருக்கும் சுவோட்டின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை என்று சொன்னால் அது ரொம்பவும் சாதாரணமாகத்தான் இருக்கும். நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாத இன்னல்களையெல்லாம் அனுபவித்தவர் சுவோட். தெற்கு சூடானின் விடுதலைக்காகப் போராடியவர்களுள் ஒருவர்தான் அவரது தந்தை மகுர் சுவோட். தெற்கு சூடான் விடுதலை பெறுவதற்கு முன்னரே போட்டி இயக்கங்களால் படுகொலை செய்யப்பட்டார் மகுர் சுவோட்.

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, சுவோட்டின் தாய் தனது ஏழு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் எத்தியோப்பியாவுக்குச் சென்றார். அங்கிருந்து பல நூறு மைல்கள் நடந்தே கென்யாவுக்குச் சென்றார். அங்கிருந்த காக்குமா அகதிகள் முகாமில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்தார்.

தனது தாயின் நெடும் பயணத்தைப் பற்றி சுவோட் இப்படிச் சொல்கிறார்: “அப்பா கொல்லப்பட்ட பிறகு எனது அம்மா ஒரு முடிவை எடுத்தாக வேண்டியிருந்தது. அந்த முடிவு எங்கள் எதிர்காலம்தான். எங்களுக்காக அம்மா பட்ட கஷ்டங்கள், கடந்துவந்த பாதைகள், அந்தப் பாதைகளில் குவியல் குவியலாக இறந்துகிடந்த மனிதர்கள்… என்று எல்லாவற்றையும் கதைகளைப் போல் அம்மா இப்போது சொல்வதுண்டு. அம்மா மட்டுமல்ல, ஏராளமான பெண்கள் இந்த முடிவை எடுத்தார்கள், அதாவது எங்களின் எதிர்காலத்துக்காகத் தங்களை தியாகம் செய்வது என்ற முடிவை.”

அந்த அகதிகள் முகாம் ஒன்றும் சொர்க்க பூமி அல்ல. ஆனாலும் தங்கள் தாய்நாட்டுடன் ஒப்பிடும்போது அவர்கள் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்சத் தேவைகள் அங்கே மிகக் குறைவாகவாவது கிடைத்தன. ஐ.நா-வின் உதவி மாதந்தோறும் சொற்ப அளவில் கிடைக்கும். ஒரு நாள் ஒருவர் சாப்பிடக்கூடிய உணவுதான் ஒரு மாத ரேஷனாக ஒருவருக்குக் கிடைக்கும். சூடானின் நிலைமையோ இதைவிட மோசம்.

அந்த அகதிகள் முகாம் ஒன்றும் சொர்க்க பூமி அல்ல. ஆனாலும் தங்கள் தாய்நாட்டுடன் ஒப்பிடும்போது அவர்கள் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்சத் தேவைகள் அங்கே மிகக் குறைவாகவாவது கிடைத்தன. ஐ.நா-வின் உதவி மாதந்தோறும் சொற்ப அளவில் கிடைக்கும். ஒரு நாள் ஒருவர் சாப்பிடக்கூடிய உணவுதான் ஒரு மாத ரேஷனாக ஒருவருக்குக் கிடைக்கும். சூடானின் நிலைமையோ இதைவிட மோசம்.

அந்த அகதிகள் முகாமிலேயே ஒரு சாப்பாட்டுக் கடை நடத்திச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துவந்தார் சுவோட்டின் தாய். எப்படியாவது தன் பிள்ளைகளை ஏதாவது ஒரு நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற கனவுக்காக எல்லாத் துயரங்களையும் அவர் அனுபவித்தார். 2005-ல் அகதிகள் மறுகுடியேற்றத்துக்காக ஐ.நா. ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் அதிர்ஷ்டவசமாக சுவோட்டின் குடும்பத்தினரும் தேர்ந்தெடுக்கப்பட, ஆஸ்திரேலியாவில் வேரூன்றுவதற்காகப் புறப்பட்டார்கள்.

தங்கள் நாடு, கலாச்சாரம், மொழி என்று எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு முற்றிலும் புதிய ஒரு நாட்டில் அவர்களின் புதிய வாழ்க்கைத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் எல்லாமே சிரமம்தான். எனினும், தங்கள் மண்ணில் அவர்கள் பட்ட துயரங்களுக்கு முன்னால் புதிய மண்ணின் சிரமங்கள் ஒன்றுமேயில்லை.

ஆஸ்திரேலியா வந்த கொஞ்ச காலத்துக்குள் மாங்கர் மக்குர் சுவோட்டின் கால்கள் ஓடப் பிறந்தவை என்பதைக் கண்டுகொண்டார் லிண்ட்சே பன் என்ற ஓட்டப் பந்தயப் பயிற்சியாளர்.

“ஆரம்பத்தில் அவ்வளவு தனித்துவம் இல்லாத ஒரு ஓட்டக்காரனாகத்தான் சுவோட் இருந்தான். ஆனால், பயிற்சி ஆரம்பித்த கொஞ்ச காலத்தில் அவனிடமிருக்கும் அசாத்திய திறமை வெடித்து வெளிப்பட்டது” என்கிறார் பன்.

2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் கனவுடன் இருந்த சுவோட்டுக்கு அவரது நாட்டுக்காரர்களாலேயே ஆபத்து வந்தது. ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு, பழைய பகையின் காரணமாக சூடானியர்களால் மூன்று முறை தாக்கப்பட்டார் சுவோட். காலையே குறிவைத்துக் கட்டையால் தாக்கினார்கள். அதற்குப் பிறகு தனது பயிற்சியாளர் பன்னின் உதவியுடன் மீண்டு வந்து இரண்டு மாதங்களில் ஒரு போட்டியில் ஓடினார் சுவோட். அந்தப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்தில் சரிந்து விழுந்தார். காலில் தாக்கப்பட்ட இடத்தில் அவருக்குத் தசைநார் கிழிந்துபோய்விட்டிருந்தது. சுவோட்டின் ஒலிம்பிக் கனவு (அந்த முறை) தகர்ந்துபோனது.

அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார் சுவோட். பயிற்சியாளர் பன்தான் சுவோட்டுக்குப் பெரும் பக்கபலம். சுவோட்டின் மனவுறுதியைப் பற்றிச் சொல்லும்போது, “சுவோட்டுக்கும் ஏமாற்றங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. அவற்றைச் சட்டென்று உதறித்தள்ளிவிட்டு முன்பைவிட வலிமையாகத் தன்னை ஆக்கிக்கொள்வான் சுவோட். இந்தப் பண்புதான் ஒருவரை மாபெரும் விளையாட்டு வீரராக ஆக்குகிறது” என்கிறார் லிண்ட்ஸே பன்.

அவர்களுக்கிடையிலான உறவு ஒரு விளையாட்டு வீரருக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான உறவே அல்ல. பல சமயங்களில் சுவோட்டுக்கு பன் சமைத்துப்போட்டிருக்கிறார். போதுமான நிதி வசதி இல்லாமல் இருவருமே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். பந்தயங்களுக்குக் கலந்துகொள்ளப் போகும்போது சமயங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் யாருடைய வீட்டிலாவது தங்கிக்கொண்டு, கட்டாந்தரையில் படுத்துறங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் ரயிலைப் பிடிக்கச் செல்வார்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஒரு முறை தேசிய அளவிலான போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 21.08 நொடிகளில் கடந்து சுவோட் பட்டத்தை வென்றார். “நீ எனக்குக் கொடுக்க வேண்டிய பயிற்சிக் கட்டணம் ஏறிக்கொண்டே போகிறது!” என்று அப்போது நக்கலாக சுவோட்டைக் கிள்ளியிருக்கிறார் பன்.

ஒலிம்பிக் போட்டிக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல் வேறொரு முக்கியமான பணியையும் சுவோட் செய்துவந்தார். பயிற்சியாளர் பன்னுடன் சேர்ந்து திறமைசாலிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டார். பழங்குடியினச் சிறுவர்களுக்கு இருவரும் பயிற்சி கொடுத்துவருகிறார்கள். தான் வெளிநாட்டிலிருந்து வந்த அகதி என்றால், பழங்குடியினரோ உள்நாட்டிலேயே அகதிகள். இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பவர் சுவோட் என்பது கூடுதல் தகவல்.

அந்தச் சிறுவர்களுடன் ஓடும்போதும் அவர்களில் யாராவது தன்னை முந்திவிடுவார்களோ என்ற அச்சம் தனக்கு உண்டு என்றும், அதனால் தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக்கொள்வேன் என்றும் கூறி சுவோட் மேலும் மேலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். “அந்தக் குழந்தைகளுக்கு நான் எனது நிலைமையையும் எனது வரலாற்றையும் பற்றி எடுத்துச் சொல்வேன். வழிகாட்டுவதற்கும் உதவிசெய்வதற்கும் ஆட்கள் இல்லாமல் நான் வளர்ந்ததை அவர்களுக்குச் சொல்வேன். என்னால் யாருக்காவது ஊக்கமூட்ட முடியும் என்றால் அவர்களிடம் போய் ‘நீங்கள் ஓட்டப் பந்தய வீரர்களாகத்தான் ஆக வேண்டும் என்றில்லை; நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்களோ அதுவாகவே ஆக முடியும்’ என்று சொல்வேன். அதுதான் எப்போதும் எங்கள் திட்டம்” என்கிறார் சுவோட்.

ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. அதில் நீங்கள் பார்க்கப்போகும் ஏராளமான போட்டியாளர்களுக்குப் பின்னாலும் இது போன்ற ஒரு கதை இருக்கலாம். அவர்கள் எல்லோருடைய பங்கேற்பிலும் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தி இருக்கும். அதுதான் நம்பிக்கை! உலகம் நம்பிக்கை வறட்சியுடன் காணப்படும் நேரத்தில் சுவோட் போன்ற மனிதர்கள் நமக்கு அளிக்கும் நம்பிக்கை எவ்வளவு மகத்தானது!

உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட் காத்திருக்கிறார், சுவோட்டுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்த. உசேன் போல்ட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் ஷூவை அணிந்துகொண்டு ஓடுவதற்குக் காத்திருக்கிறார் சுவோட். விடுதலை பெற்றும் மீட்சியில்லாத தன் தேசத்தை முதுகில் சுமந்துகொண்டு அவர் ஓடவிருப்பது ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, எதிர்காலத்தை நோக்கியும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x