Published : 24 Feb 2017 09:43 AM
Last Updated : 24 Feb 2017 09:43 AM
குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது கிடைக்கும் மன அமைதிக்கு இணை வேறு எதுவும் கிடையாது. எனவே நான் மனம் திறந்து, சில அதிர்ச்சிகரமான உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
எனது பள்ளிக்காலத்தில், என் நண்பன் குமாருக்குக் கடலை மிட்டாய் என்றால் உயிர். எவ்வளவு உயிரென்றால், கடலை மிட்டாயை வாங்கி, அதன் மீது வைத்த கண்ணை எடுக்காமல், மகாபிரியத்துடன் அதைப் பார்த்துக் கொண்டேதான் கடித்துக் கடித்துச் சாப்பிடுவான். கடைசித் துண்டும் தொண்டையில் நுழைந்து, வயிற்றில் சென்று அடங்கும் வரை அதைப் பார்க்கும் அபூர்வ ஆற்றலை அவன் பெற்றிருந்தான்.
ஒரு முறை மோகன் கஃபே எதிரில் கடலை மிட்டாய் தின்றுகொண்டிருந்தபோது, தனது சைக்கிளை அவன் கொடுத்துவிட்டான். அதுகூடத் தெரியாமல் கடலை மிட்டாய் சாப்பிடுவதில் கவனமாக இருந்ததிலிருந்தே கடலை மிட்டாயின் மேல் அவனுக்குள்ள மோகத்தைத் தெரிந்துகொள்ளலாம். இவ்வளவு கடலை மிட்டாய்களுக்கும் அவனுக்கு எங்கிருந்து காசு கிடைக்கிறது? ஒரு நாள் கேட்டுவிட்டேன்.
குமார், “வீட்டுல கடைத்தெருக்கு சாமான் வாங்க அனுப்புறாங்கள்ல... அதுல கமிஷன் அடிப்பேன்” என்றான்.
“கமிஷன்னா?”
“கமிஷன்னா... இப்ப தக்காளி கிலோ முக்காரூபான்னு வச்சுக்க. வீட்டுல ஒரு ரூபாய்னு சொல்லி, அந்தக் கால் ரூபாயை நம்ம வச்சுக்கணும்”.
நான் அதிர்ச்சியுடன், “இதெல்லாம் தப்பில்லையா?” என்றேன்.
“தப்புதான். அப்புறம் கல்ல மிட்டாய் எப்படி சாப்பிடுறது?” என்று அவன் கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. “நீயும் நாளைலருந்து ஆரம்பி...” என்றான்.
அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஏனெனில் அந்த 13, 14 வயதில் நான் மிகவும் தங்கமான பையனாக இருந்தேன். பள்ளியில் எதற்கோ பரிசாகக் கொடுத்த காந்தியின் ‘சத்திய சோதனை‘ படித்துவிட்டு, ‘பொய் சொல்லக் கூடாது’ ‘திருடக் கூடாது’ என்று அப்போது ஏகப்பட்ட ‘கூடாது’ விரதத்தில் இருந்தேன். 18 வயதுக்குப் பிறகுதான் ‘ஏ’ படம் பார்க்க வேண்டும் என்று கேம்ஸ் டீச்சர் சொன்ன ஒரே காரணத்தால், படம் மட்டுமல்ல, ‘ஏ’ படப் போஸ்டரைப் பார்த்தால்கூட முகத்தைத் திருப்பிக் கொள்வேன்.
இவ்வளவு நல்லவனாக இருந்ததால், கமிஷன் அடிக்கத் தயக்கமாக இருந்தது. கடவுள்களைவிட, சைத்தான்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் என்பதால், மறுநாள் முதல் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன்.
அம்மா இரண்டு ரூபாய் கொடுத்துக் காய்கறிகள் வாங்கி வரச் சொன்னார். சாமான்கள் வாங்கி முடித்தவுடன், சிற்றரசன் சலூன் வாசலிலிருந்து எனது மனக்கணக்கைப் போட ஆரம்பித்தேன். வெங்காயம் கால் கிலோ முப்பது காசு. வீட்டுல நாப்பது பைசான்னு சொன்னா, அதுல பத்து காசு கமிஷன். அப்புறம் தக்காளில பதினஞ்சு காசு கமிஷன். தேங்காய் ஒரு ரூபாய்... ஒண்ணே கால்னு வச்சுகிட்டா, அதுல ஒரு இருபத்தஞ்சு காசு. மொத்த கமிஷன் தொகை ஐம்பது பைசா. “ஆத்தாடியோவ்..” என்று ஆடிப்போய்விட்டேன். 80-களில் ஐம்பது பைசாவுக்கு ஹோட்டலில் ரவாதோசையே சாப்பிடலாம்.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது மிகவும் சுலபமான காரியம் போலத் தோன்றும். ஆனால் கமிஷன் அடிப்பதற்கு, முதலில் உங்களுக்குச் சிறந்த கணித அறிவு இருக்கவேண்டும். அதுவும் அத்தனையும் மனக்கணக்காகப் போட வேண்டும். கூடவே நல்ல ஞாபகசக்தியும் இருக்க வேண்டும். வீட்டில் சந்தேகம் வந்து, எத்தனை முறை மாற்றி மாற்றிக் கேட்டாலும் அனைத்துப் பொருட்களின் விலையையும் முதலில் சொன்னது போல மாறாமல் சொல்ல வேண்டும். இவ்வாறு கையில் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்தாலும் உடனே செலவாகிவிட்டது. என்ன செலவு? நீங்கள் நினைப்பது போல கடலை மிட்டாய் வாங்கித் தின்னவில்லை. வேறு ஒரு செலவு. அது என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.
தினந்தோறும் கமிஷன் அடித்தாலும், அது என் செலவுக்குக் கட்டுப்படியாகவில்லை. அதனால் ‘டபுள்’ கமிஷனில் இறங்கினேன். அதென்ன டபுள் கமிஷன்? சிங்கிள் கமிஷனில் பொருளின் விலையை ஏற்றிச் சொல்வேன். ஆனால் டபுள் கமிஷனில் விலையை ஏற்றுவதோடு, வாங்கும் பொருளின் எடையைக் குறைக்கவும் வேண்டும். புரியவில்லையா? அதாவது தக்காளி கிலோ முக்கால் ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு ரூபாய் என்று சொல்லி அதில் கால் ரூபாய் அடித்துவிடுவேன். அதே சமயத்தில் ஒரு கிலோ தக்காளி வாங்கி வரச்சொன்னால், முக்கால் கிலோ தக்காளிதான் வாங்குவேன். ஆனால் வீட்டில் ஒரு கிலோ வாங்கியதாக சொல்லி விடுவேன். ஸோ... அதில் ஒரு கால் ரூபாய் கிடைக்கும் (தேங்காய், முட்டை கைபேசிற எடையில்லாமல் வாங்கப்படும் பொருட்களில், இந்த டபுள் கமிஷனை அடிக்க முடியாதது குறித்து இன்று வரையிலும் எனக்கு வருத்தம் உண்டு).
இந்த டபுள் கமிஷன் விஷயத்தை குமாரிடம் சொன்னபோது அவன் என்னை பிரமிப்புடன் பார்த்தது, அதாவது பயங்கரக் கேடியைப் பார்ப்பது போலப் பார்த்தது, இன்னும் என் நினைவில் இருக்கிறது.
இந்த டபுள் கமிஷன் விஷயத்தை குமாரிடம் சொன்னபோது அவன் என்னை பிரமிப்புடன் பார்த்தது, அதாவது பயங்கரக் கேடியைப் பார்ப்பது போலப் பார்த்தது, இன்னும் என் நினைவில் இருக்கிறது.
உங்களுக்கு எளிதில் புரிவதற்காகத்தான் ஒரு ரூபாய், கால் ரூபாய் என்று சுலபமான தொகையில் கூறுகிறேன். சில பொருட்களின் விலை 90 பைசா, ஒரு ரூபாய் பத்து காசு என்றெல்லாம் இருக்கும். அதில் ஏழெட்டுப் பொருட்களுக்கு நீங்கள் விலையை ஏற்றி வரும் காசைக் கணக்குப் பார்த்து, எடையைக் குறைத்து கிடைக்கும் காசையும் கணக்குப் பார்த்து கமிஷன் அடிப்பதற்குள் மண்டை காய்ந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் அரசமரத்தடியில் அமர்ந்து, ஒரு பேப்பரில் தெள்ளத்தெளிவாகக் கணக்குப் போட்டு, என் கமிஷன் தொகையைப் பிரித்தெடுப்பேன்.
இவ்வாறு எனது கமிஷன் ஊழல், நான் படித்து முடித்து வேலை கிடைத்து, சென்னைக்கு வரும் வரையில் ஜோராகத் தொடர்ந்துகொண்டிருந்தது. சென்னையிலிருந்து ஒரு முறை அம்மாவுக்கு ஃகைபேசி செய்தபோது, “திருட்டு நாயே... அரிசில எத்தனை கிலோடா கமிஷன் அடிப்பே?” என்றார் அம்மா.
“அம்மா… திங்கிற சோத்துல போய் யாராச்சும் கமிஷன் அடிப்பாங்களா? அதெல்லாம் பெரிய பாவம்மா...”
“சீ… பொய் சொல்லாத. நீ அரை மூட்டை அரிசி வாங்கிட்டு வந்தன்னா, முக்கால் குவளைதான் வரும். நேத்து தினகர் போய் வாங்கிட்டு வந்து கொட்டுறான். குவளை நிரம்பி அரிசி கீழ வழியுது”.
“அது எப்படி வழியும்? குவளைய மாத்திட்டீங்களா?”
“அதெல்லாம் இல்ல. சொல்லு… அரை மூட்டைல எத்தனை கிலோ குறைப்ப?”
“நாலு கிலோ...” என்று ஃபோனை வைத்த எனக்குள் ஒரு கேள்வி.
அரிசியில் மாட்டிக்கொண்டோம். எண்ணெயில் எப்படி மாட்டவில்லை? எண்ணெயில் என்ன விஷயமென்றால், ஒரு கிலோ எண்ணெய் கேனில், ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி வரச் சொல்வார்கள். ஆனால் அந்த ஒரு கிலோ கேனில் 900 மில்லி லிட்டர்தான் கொள்ளும். மீதி 100 மில்லி காசை அடித்துவிடுவேன். இந்த விஷயத்தில் எப்படி மாட்டவில்லை? என்று ஒரே குழப்பம். ஊருக்குச் சென்றபோது என் தம்பி தினகரிடம் கேட்டேன். அவன், “கேன்ல ஒரு லிட்டர்தான் போடச் சொன்னேன். அவன் ஊத்திட்டு 900 மில்லிதான் ஊத்த முடியுதுன்னான். சரின்னு மிச்ச 100 மில்லி காச நான் எடுத்துகிட்டேன்” என்றான்.
“அப்புறம் ஏன்டா அரிசில மட்டும் மாட்டிவிட்ட?”
“எனக்கு என்ன தெரியும்? அரை மூட்டை வாங்கிட்டு வரச் சொன்னாங்க. வாங்கிட்டு வந்தேன். நீ முன்னாடியே சொல்லியிருந்தா அதையும் அடிச்சிருப்பேன்” என்றவனைப் பார்த்து மனதிற்குள், ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’ என்று பாடினேன்.
திருமணமான புதிதில், சம்பளப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்துவந்தேன். எனது செலவுக்காக எடுத்து வைத்துக்கொள்ளும் பணம் சீக்கிரம் காலியாகிவிடும். எனவே காய்கறி வாங்க என் மனைவி கொடுக்கும் காசில் கமிஷன் அடிக்க வேண்டியிருந்தது. நான் சம்பாதிக்கும் காசிலேயே, நான் கமிஷன் அடிப்பதை நினைத்தால் மிகவும் அவமானமாகத் தோன்ற... நிறுத்திவிட்டேன். கமிஷன் அடிப்பதை அல்ல. என் மனைவியிடம் பணம் கொடுப்பதை.
சரி... இப்போது கட்டுரையின் மிகவும் சஸ்பென்ஸான பகுதிக்கு வருகிறேன். சிறு வயதில் கமிஷன் அடித்த அவ்வளவு காசையும் என்ன செய்தேன்? நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். இதயக் குழாய்களில் அடைப்புள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம். அவ்வளவு காசுக்கும் தினமும் வாழைக்காய் பஜ்ஜிகள் வாங்கிச் சாப்பிட்டேன்.
- கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT