Published : 24 Jun 2016 01:02 PM
Last Updated : 24 Jun 2016 01:02 PM
ஜூன் 21-ம் நாளுக்கு வருடத்திலேயே நீளமான பகல் பொழுதைக் கொண்ட நாள் என்னும் சிறப்பு உண்டு. இதே நாளில்தான் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக இசை நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட நகரங்களில் இத்தகைய இசைக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் அலையன்ஸ் பிரான்சைஸ், மாக்ஸ்முல்லர் பவன், ரஷ்ய கலாசார மையம் போன்ற பல இடங்களில் நடைபெற்றன.
இசை நாளின் தொடக்கம்
1981-ல் மவுரிஸ் ஃபுளுவர்ட் என்பவர் பிரான்ஸ் நாட்டின் இசை, நடனத் துறைக்கு இயக்குநராக இருந்தார். அப்போது அந்நாட்டின் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த ஜாக் லாங்க், “பிரான்ஸில் இசை எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் பிரான்ஸின் வீதியில்தான் எங்கும் இசை நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 1982-ல் இதற்கான ஆய்வில் ஈடுபட்டார் மவுரிஸ். பிரான்ஸில் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இசைக் கருவியை வாசிக்கத் தெரிந்திருப்பதை அறிந்தார். வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டிருந்த இசையை வீதியில் வந்து வாசிக்கச் சொன்னார். அப்போது தொடங்கியதுதான் இந்த மக்கள் இசை. 1982 ஜூன் 21 அன்று மக்களால், மக்களுக்கான இசை பிரான்சின் ஃபீட் தி லா மியூசிக் என்னும் இடத்தில் ஒலிக்கத் தொடங்கியது. அன்றிலிருந்து ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில், ஈக்வடார், மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா, ஜப்பான் என உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.
அமெச்சூர், தொழில்முறைக் கலைஞர்கள் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரும் இணையும் திருவிழாவாக உலக இசை நாள் கொண்டாட்டங்கள் இருக்கும். “கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை, மியூஸி மியூஸிக்கல்ஸில் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்” என்றார் அதன் நிர்வாக மேலாளர் கிஷோர். ஜூன் 17 முதல் 22 வரை பல இடங்களிலும் இந்த விழாக்கள் நடைபெற்றன. கடந்த ஞாயிறன்று மியூஸி மியூஸிக்கலில் நடந்த விழாவில் மூன்று குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தினர்.
டிரம்ஸின் பின்னணியில்
வழக்கமாக வயலின், மிருதங்கம் பின்னணியில் ஒலிக்க மைத்ரீம் பஜதே பாடலைப் பலரும் பாடி கேட்டிருக்கிறோம். ஆனால் ஸ்டெக்கெட்டோ (Staccatto) என்னும் குழுவினர் டபுள் பாஸ் கித்தார், டிரம்ஸின் சீரான தாளக்கட்டின் பின்னணியில் பாடியது வெறும் வித்தியாசமாக மட்டுமில்லாமல் அந்த இசையில் ஒன்றவும் முடிந்தது.
‘குரங்கன்’ பிடியில் சிரித்த கூட்டம்
கொடுத்த வேலையைச் சொதப்புபவரை, ‘குரங்கு கையில பூமாலைய கொடுத்தா மாதிரி ஆயிடுச்சிடா’ என்று நொந்துகொள்வார்கள்’. ஆனால் மேடையேறிய ‘குரங்கன்’ குழுவின் இசையியும் பாடலின் கருத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது. காதல், காமம், சமூகம் சார்ந்த பல கருத்துகளைப் பாடலில் வெளிப்படுத்தினார் (பாடல்களை எழுதியவரும் இவர்தான்) கேபர் வாசுகி.
அரசன் என்பவன் அமைதி காக்க வேணும்
போர் கிளம்பும்போது வீரனாக வேணும்
அரசன் என்பவன் சட்டம் பார்க்க வேணும்
பசி எடுக்கும்போது சோறு போடவேணும்
அரசன் என்பவன் நடிகன் ஆக வேணும்
நாடக மேடை நாடு என்ற போதும்கூட…
என்று அரசியலையும்கூடப் பாட்டில் தெறிக்கவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT