Published : 29 Jul 2016 12:23 PM
Last Updated : 29 Jul 2016 12:23 PM

கங்கைக்கொரு கீதம்!

‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ - 1988-ல் சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது இந்த இசை வீடியோப் பதிவு. இதற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது தூய கங்கைத் திட்டத்திற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ‘நமாமி கங்கே கீதம்’.

இந்த கீதத்தை முழுக்க முழுக்கத் தயாரித்து இயக்கியவர்கள் மூன்று தமிழ் இளைஞர்கள் என்பது நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம். ‘திருச்சூர் பிரதர்ஸ்’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணா மோகன், ராம்குமார் மோகன் எனும் இரண்டு இளைஞர்கள் கர்நாடக இசையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள். இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி செய்தவர் தீபிகா சந்திரசேகரன். இந்த மூவர் கூட்டணிதான் ஒன்றரை ஆண்டுகள் உழைத்து ‘நமாமி கங்கே கீதத்தை’ உருவாக்கி இருக்கிறது.

இவர்களுக்கு இப்படியொரு யோசனை எப்படித் துளிர்த்தது? கீதத்தின் விஷுவலைசேஷன் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர்களில் ஒருவருமான திருச்சூர் பிரதர்ஸின் ராம்குமார் மோகன் அதை விவரித்தார். “செப்டம்பர் 2014-ல் அமெரிக்கா சென்றிருந்த நமது பிரதமர் மோடி அங்கே, கங்கையின் புனிதம் பற்றியும் அது மாசுபடுத் தப்பட்டுக் கிடப்பது பற்றியும் பேசினார். கங்கையை எப்படியாவது தூய்மைப்படுத்திவிட முடியாதா என்ற ஆதங்கம் அவரது பேச்சில் இருந்தது. அந்த உரைதான் எங்களை நமாமி கங்கே கீதம் இசைக்க வைத்தது.

தேசத்திற்காக ராணுவ வீரர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்வதுபோல இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விதத்தில் இந்த தேசத்திற்கான தங்களது பங்களிப்பைச் செய்யத் தாமாக முன்வரவேண்டும். அப்படித்தான், ‘நமாமி கங்கே’ திட்டத்தை பிரதமர் அறிவித்தபோது, இதற்காக நாமும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எங்களை முன்னோக்கித் தள்ளியது. நமக்குத் தெரிந்த இசை மொழி யில் ஏதாவது செய்தாலென்ன என்று யோசித்தோம். அதில் பிறந்தது தான் நமாமி கங்கே கீதம்’’ என்றார்.

இரண்டே நாளில் நமாமி கீதத்தின் இசை வடிவத்தை உருவாக்கிய திருச்சூர் சகோதரர்கள், அடுத்து, தங்களது திரைத்துறை நண்பரான தீபிகா சந்திரசேகரனின் கூட்டணியோடு இசைக்கு ஏற்ற காட்சி அமைப்புகளைப் படம்பிடிக்கக் கிளம்பினார்கள். வாராணசியில் ஆண்டு தோறும் ‘தேவ் தீபாவளி’ கொண்டாடப்படும். அப்போது, கங்கைக் கரையில் ஐந்து லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். முதல் கட்டமாக அந்த நிகழ்வையும் வாராணசியின் பிற கங்கைப் பகுதிகளையும் படம் பிடித்து மாதிரி வீடியோப் பதிவு ஒன்றை உருவாக்கியது திருச்சூர் பிரதர்ஸ் குழு.

அடுத்த கட்டமாக நகர்வதற்கு முன்பாக, இதை அரசின் பங்களிப்போடு செய்தால் என்ன என்ற கேள்வி மூவர் மனதிலும் உதிக்கிறது. உடனே, தாங்கள் எடுத்த மாதிரி வீடியோவோடு தங்கள் மனதில் உள்ள யோச னையையும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதிகமில்லை.. பதினைந்தே நாளில் பதில் வந்தது. ‘உங்களது தீம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. இதையே இன்னும் விசாலமாக ஒட்டுமொத்த கங்கையையும் காட்சிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பதிவைத் தயார் செய்யுங்கள்’ என்று சொன்னது மத்திய அரசு.

இந்தச் செய்தி மூவருக்கும் மகிழ்வின் எல்லையைத் தொட்டுக்காட்டியது. நமாமி கங்கே கீதத்தைத் தயாரித்து முடிப்பதற்கான ஒட்டுமொத்தச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பாரத ஸ்டேட் வங்கி சொன்னது. பிறகென்ன.. கங்கை உற்பத்தியாகும் உத்தராகண்டின் ‘கோமுக்’ நோக்கிப் புறப்பட்டது திருச்சூர் பிரதர்ஸ் குழு.

கங்கை நதி

“இசைக் கலைஞர்களையும் சேர்த்தால் எங்கள் குழுவில் மொத்தம் 60 பேர். இதில் களத்துக்குப் போய் காட்சிகளைப் படம்பிடித்து வந்த குழுவில் சுமார் 30 பேர் இருந்தார்கள். உத்தராகண்டில் தொடங்கும் கங்கை நதி ஐந்து மாநிலங்களில் வளைந்தோடி வங்கத்தில் கலக்கிறது. வீடியோப் பதிவைப் பார்ப்பவர்கள், ‘இவ்வளவு மோசமாகி விட்ட கங்கையை இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது’ என்று நினைக்கக் கூடாது. நாமும் கைகோர்த்தால் கங்கையைத் தூய்மைப்படுத்தி விடலாம்’ என்ற எண்ணம் அவர்களுக்குள் உதிக்கவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதற்காக ஐந்து மாநிலங்களிலும் கங்கையின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் படம்பிடித்தோம்” என்கிறார் கிருஷ்ணா மோகன்.

காட்சிகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பிரபல ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன், பிரேமல் ராவல் ஆகியோரின் கேமராக்களைக் கொண்டுபோய் களத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். இமயமலையை ஒட்டிய பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து சென்று தொட்ட இந்தக் குழுவினர், கங்கை உற்பத்தியாகும் ‘கோமுக்’ பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய சவாலையும் எதிர்கொண்டார்கள்.

கங்கை நதி இந்துக்களுக்கோ வடஇந்தியர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல. இந்தியர்கள் அனைவரும் போற்றிக் கொண்டாட வேண்டிய புனித நதி அது என்பதை, நமாமி கங்கே கீதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 6.12 நிமிடங்கள் கண்களைக் குளிரவைக்கும் நமாமி கீதத்தில் 40 விநாடிகள் வரும் நடனக் காட்சியில் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பிரபலமான நடனக் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக 60 நடனக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“மழை, வெள்ளம், கடுமையான தட்பவெட்பச் சூழல் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்தக் காட்சிப் பதிவை உருவாக்கி இருக்கிறோம். ஒலி, ஒளிப் பதிவுகள் சர்வதேசத் தரத்தில் கையாளப்பட்டுள்ளன. நாங்கள் உருவாக்கிய இந்த கீதத்திற்கு அரசு அளித்த அங்கீகாரமும் மக்கள் தந்திருக்கும் வரவேற்பும் ஒன்றரை வருட உழைப்பு தந்த களைப்பை எல்லாம் போக்கிவிட்டன’’ என்கிறார் தீபிகா சந்திரசேகரன்.

தீபிகா சந்திரசேகர்

திருச்சூர் சகோதரர்களின் நமாமி கங்கே கீதம் ஜூலை 7-ல் ஹரித்துவாரில் நடந்த விழாவில் முறைப்படி வெளியிடப்பட்டது. கடந்த இருபது நாட்களுக்குள் முகநூல் மற்றும் ‘யூ டியூப்’ வழியாகப் பத்து லட்சம் பேர் வரை நமாமி கீதத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்று சொல்லும் ராம்குமார் மோகன், “குட்லக் திருச்சூர் பிரதர்ஸ் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே ட்விட்டர் வழியாக எங்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்’’ என்கிறார் பெருமிதத்துடன்.

'திருச்சூர் பிரதர்ஸ்'

‘இவ்வளவு மோசமாகி விட்ட கங்கையை இனிமேல் ஒன்றுமே செய்யமுடியாது’ என்று நினைக்கக் கூடாது. நாமும் கைகோர்த்தால் கங்கையைத் தூய்மைப்படுத்தி விடலாம்’ என்ற எண்ணம் அவர்களுக்குள் உதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதற்காக ஐந்து மாநிலங்களிலும் கங்கையின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் படம்பிடித்தோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x