Published : 13 Apr 2017 11:58 PM
Last Updated : 13 Apr 2017 11:58 PM

வேலையற்றவனின் டைரி 24 - இளையராஜா எனும் நாஸ்டால்ஜியா

சென்ற வாரத்தில், வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருந்த ஒரு நள்ளிரவு. அந்த இரவு, அப்படி ஒரு இசை இரவாக மாறப்போவதை அறியாமல், இளையராஜாவின் ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் எட்டு நிமிட இன்ஸ்ட்ரூமென்டல் வெர்ஷனை யூட்டியூப்பில் கேட்க ஆரம்பித்தேன். யாருமற்ற மைதானத்தில் உதிரும் மழைத்துளிகள் போல, என்னுள் அந்த இசை இறங்க ஆரம்பித்தது. வயலின் இசையில் பாடல் வளர, வளர மனம் ஏதேதோ அலைக்கழிப்புகளில் தத்தளித்தது. வயலினுடன் ஆண், பெண் குரல்களின் ஹம்மிங்கும் சேர ‘கடவுளே…' என்று தவித்துப்போனேன்.

பாடலின் உச்சத்தில் இளையராஜாவின் குரல் இணைந்தபோது, மனதிற்குள் நிகழ்ந்த இசையின் மகத்தான மாயாஜாலத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நெஞ்சு விம்மித் தணிந்து, விழியோரம் லேசாக நீர் துளிர்த்தது. பாடல் முடிந்தபோது, இசையென்னும் காட்டாற்றில் குளித்துவிட்டுக் கரையேறியதுபோல இருந்தது. முழுமையான இசையின் உன்னதம் அது. அந்த இரவு அப்பாடலுடன் முடியவில்லை. அடுத்து ஒரு மேடை நிகழ்ச்சியில், ஷூபெர்ட்டின் சிம்பனியை இசைத்துவிட்டு இளையராஜா, ‘இதயம் போகுதே… எனையே பிரிந்தே’ பாடலைப் பாடியதைப் பார்த்தபோது, இதயத்தை யாரோ பிடித்து உலுக்குவது போல இருந்தது. மனம் மெல்ல ஒரு பித்த நிலையை நோக்கி நகர்ந்து.

தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை வெறி போலக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். இன்னும் இன்னும் என்று அந்த இரவு நீண்டுகொண்டேயிருந்தது. கடைசியாக ‘மௌனமான நேரம்… இள மனதில் என்ன பாரம்’ பாடலைக் கேட்டபோது, வெளியே மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது. இப்படி ஒரு முழு இரவையும், இசையால் மட்டுமே நிரப்ப இளையராஜா போன்ற மகா கலைஞனால் மட்டுமே முடியும்.

என்னைப் போல நாற்பது ப்ளஸ் வயதுகளில் இருக்கும் ஒருவன், வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது என்பது, மொத்த வாழ்க்கையையும் திரும்பிப் பார்ப்பது போன்றதாகும்.

கண்கள் கனத்துப் படுத்தபோது, சமீபத்தில் ஒரு இளம் வயது நண்பன், “நீங்க எப்பவும், எதுக்கும் இளையராஜாவை மட்டும் விட்டுக்கொடுக்கறதே இல்ல. ஏன் சார்?” என்று கேட்டது நினைக்கு வந்தது. என்னைப் போன்ற இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இளையராஜாவைத் தொடர்ந்து ஆராதித்துக்கொண்டேயிருக்கிறோம்?

ஏனெனில் இளையராஜாவின் பாடல்கள், ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக எங்களுடன் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டேயிருக்கின்றன‌. வாழ்க்கையின் மகத்தான பிரியங்களைச் சந்தித்தபோது, இளையராஜாவின் இசையே எங்களைத் தாலாட்டியது. எதிர்பாராத‌ துரோகங்களைச் சந்தித்தபோது, இளையராஜாவின் இசையே எங்களைத் தாங்கிக்கொண்டது. மாபெரும் கழிவிரக்கத்தில் தவித்தபோது, இளையராஜாவின் இசையே எங்களைத் தேற்றியது.

‘செந்தூரப் பூவே... செந்தூரப்பூவே...’ கேட்டபடி லட்சம் பெண்கள், தங்கள் கனவு ராஜகுமாரனுடன் ஐந்தே நிமிடத்தில், ஐம்பதாண்டு வாழ்க்கையை மனதிற்குள் வாழ்ந்து முடித்தனர். ‘என் தாயெனும் கோயிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே...’ கேட்டு மகன்கள் மனதிற்குள் அழுதார்கள். ‘குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் கேட்காதோ...’ கேட்டு முன்னாள் காதலிகள், விழியோரம் துளிர்த்த நீரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் துடைத்துக்கொண்டார்கள். ஒரு டிவி நிகழ்ச்சியில், 'ஈரமான ரோஜாவே' பாடல் பாடப்பட்டபோது, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கண்களிலிருந்து உதிர்ந்த நீர்த்துளிக்குள், என்ன ஞாபகங்களை யார் விதைத்தார்கள்?

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ஏனெனில் இளையராஜா தனது அபாரமான இசையின் வழியாக, நுட்பமான மனித உணர்வுகளை, நம் நடுநெஞ்சைக் குறிபார்த்துக் கடத்திவிடுகிறார். ஒரு இளையராஜா பாடலின் ப்ரிலூட் இசை, முதலில் நமது இதயத்தின் ரகசிய அறைகளின் கதவுகளை மெல்லத் தட்டுகிறது. பல்லவி ஆரம்பித்தவுடன், நமது ரகசிய அறைகளின் கதவுகள் திறந்துகொள்கின்றன. சரணம் வரும்போது ரகசிய அறைகளுக்குள் பாடல் வழிந்தோடி, பாடல் முடியும்போது, ஒரு வசந்த காலத்தில் நாம் மீண்டும் ஒரு முறை வாழ்ந்து முடித்திருக்கிறோம்.

இளையராஜாவின் பல காதல் பாடல்களில், நான் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைக் கவனித்து வியந்திருக்கிறேன். பொதுவாகக் காதலில், ஒரு மெலிதான காமமும் கலந்திருக்கிறது. நன்கு கவனியுங்கள். மெலிதான காமம்தான். முழுவதும் காமமாக இருந்தால், அது காதல் அல்ல. அல்லது துளிகூடக் காமம் கலக்காமல் இருந்தால், அதுவும் காதல் அல்ல. அதாவது ஈரக்கறுப்புப் படிக்கட்டில், ஆங்காங்கே உதிர்ந்திருக்கும் வெள்ளை நிறப் பூக்கள் போன்ற மெலிதான காமம் அது.

இந்த மெல்லிய காமத்தை, தனது பல காதல் பாடல்களில் இளையராஜா லேசாகக் கலந்திருக்கும் விதத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை. இளையராஜாவின் ‘ஏதோ மோகம் (கோழி கூவுது)’, ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே (அலைகள் ஓய்வதில்லை)’, ‘அந்தி மழை பொழிகிறது (ராஜ பார்வை)’ போன்ற பாடல்களில் இதை நீங்கள் துல்லியமாக உணரலாம்.

காதல் மட்டுமல்ல. ‘மனிதா… மனிதா… இனி உன் விழிகள் சிவந்தால்’ பாடல் கேட்டு, எனக்குள் ஏற்படும் போராட்ட எழுச்சி உணர்வை வேறு எந்தப் பாடலிலும் நான் அடைந்ததே இல்லை. ‘ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே’ பாடல், எந்த அப்பாவிப் பெண்ணையும் வீறுகொண்டு எழுவதற்கான சிந்தனையை உருவாக்கும். ‘என்னுள்ளே… என்னுள்ளே…’ பாடலில் வெளிப்படும் காமம், ‘பருவமே… புதிய பாடல் பாடு’ பாடல் உருவாக்கும் பரபரப்பில்லாத விடியற்காலை மனஉணர்வு, ‘காதலின் தீபம் ஒன்று…’ பாடலைக் கேட்கும்போது ஏற்படும் புதிய காதலின் உணர்வு, ‘ஜனனி… ஜனனி’ பாடலில் உருவாகும் பக்தி உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 2013‍-ம் ஆண்டு, எனது ‘இளையராஜா’ சிறுகதை பிரசுரமானபோது, என்னைத் தொடர்புகொண்டு பேசிய பலரும், இளையராஜாவின் பாடல்கள் சார்ந்து சொன்ன கதைகள்தான் எத்தனை எத்தனை? ஒரு இளம் நண்பர், ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலை கிட்டாரில் இசைத்தால் தனது காதலிக்குப் பிடிக்கும் என்பதற்காக, கிட்டார் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். இளையராஜாவின் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலை அடிப்படையாகக் கொண்ட எனது சிறுகதை வெளிவந்தபோது, என்னைத் தொடர்புகொண்டு பேசிய ஒரு வாத்திய இசைக் கலைஞர், சில நிமிடங்கள் உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு, இடையில் குரல் உடைந்து, தொண்டை அடைத்து போனை கட் செய்துவிட்டார். மீண்டும் போன் செய்து, “என்னால முடியல சார்” என்றபோது எல்லையில்லா நெகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.

இப்படி எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையில், தனி ஒரு மனிதன், தனது இசையால் மாற்றங்களை நிகழ்த்திய அற்புதம் இளையராஜாவாலேயே நிகழ்ந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும், என் நண்பன் ஒருவனும் திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அந்தத் திருமணத்திற்கு நண்பனுடைய முன்னாள் காதலியும் குடும்பத்துடன் வந்திருந்தாள். அவள் முன்னொரு காதல் காலத்தில், அவன் மீது வீசிய காதல் பார்வையை மீண்டும் வீசுவாள் என்று நண்பன் எதிர்பார்த்தான். அவளோ ஒரு இயந்திரம் போல அவனைப் பார்த்துவிட்டுச் செல்ல, நொந்துவிட்டான். “எப்படிரா யாரையோ பார்த்துட்டுப் போற மாதிரி போக மனசு வந்துச்சு?” என்று புலம்பிக்கொண்டேயிருந்தான். நான், “அவங்க ஃபேமிலியோட வந்துருக்காங்க. கல்யாண மண்டபம். எப்படிரா உன்ன ரொமாண்டிக் லுக் விட முடியும்?” என்ற பிறகும் அவன் விடாமல் அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

அப்போது ஆர்கெஸ்ட்ராவில், ‘ஜானி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என் வானிலே’ பாடலை பாட ஆரம்பித்தார்கள். நண்பன், “டேய்… இந்தப் பாட்ட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மொட்டை மாடில உட்கார்ந்து கேட்டுருக்கோம்டா” என்றபோதுதான் கவனித்தேன். எங்கோ மூலையில் உட்கார்ந்திருந்த அவள் நகர்ந்து, முன்வரிசைக்கு வந்து என் நண்பனைப் பார்க்க ஆரம்பித்தாள். இப்போது அவளிடமிருந்த குடும்பத் தலைவி முற்றிலும் விடைபெற்று, சில ஆண்டுகளுக்கு முந்தைய நண்பனின் காதலியாக அவன் முன்பு நின்றாள்.

பாடல் வளர, வளர அவர்கள் இருவரும் கல்யாண மண்டபம், ஆர்கெஸ்ட்ரா எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அந்த காதல் காலத்திற்குள் மீண்டும் ஒரு முறை பரிபூரணமாக வாழ்ந்தார்கள். பாடல் முடிந்தது. சில வினாடிகள் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, மீண்டும் பின் வரிசைக்கு யாரோ போல சென்றுவிட்டாள். அந்தப் பாடல் ஒலித்த ஐந்து நிமிடங்களில், ஒரு காதல் மீண்டும் பிறந்து, மீண்டும் இறந்துபோனதன் மௌன சாட்சியாக நான் நின்றுகொண்டிருந்தேன்.

இவ்வாறு எங்களுக்காக, எங்கள் வாழ்க்கையை இசைத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா!

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x