Published : 02 Sep 2016 12:16 PM
Last Updated : 02 Sep 2016 12:16 PM
நான் தினமும் அலுவலகம் செல்லும்போது, இரண்டு கல்லூரிகளைக் கடந்து செல்வேன். ஒவ்வொரு முறையும் அக்கல்லூரிகளைக் கடக்கும்போது, மனதில் ஒரு மெல்லிய பாரம் படர்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஏனெனில் ஒரு கல்லூரியைக் கடப்பது என்பது, ஒரு இறந்த காலத்தைக் கடப்பது போன்றதாகும். ஏனெனில் அவர்கள், நாங்கள் கூடிக் களித்து, கொண்டாடித் தொலைத்துவிட்ட இறந்த காலத்தில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் பேசுவதை எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் கேட்பேன்.
ஒரு முறை ஒரு மாணவன், “மனோகரு கெத்து காட்டலாம்ன்னு மஜாவா வந்து, செமையா மொக்க வாங்கிட்டுப் போய்ட்டான்” என்று கூறியதைக் கேட்டபோது, சப்டைட்டில் இல்லாமல் இத்தாலிய மொழி சினிமா பார்ப்பது போல் இருந்தது. பிறகு ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர், “திரு. மனோகர் அவர்கள் ஏதோ ஒரு சிறப்பான காரியத்தைப் பெருமிதத்துடன் செய்ய முயற்சித்து, அதை அவரால் சரியாகச் செய்ய முடியாமல் தலை குனிந்தார்” என்று புரிந்துகொள்ள முடிந்தது.
இருப்பினும், அந்த மாணவன் சொன்னதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்த(?) போதுதான், எனது மொழியறிவு எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்ந்துகொண்டேன். மிகவும் சிரமம் எடுத்து முயன்றபோது, “மனோகர் பெரிய ஆளாக தன்னைக் காட்டிக்கொள்ள தீவிரமாக முயற்சித்து, கடுமையாக மூக்குடைப்பட்டுப் போனான்” என்று மொழிபெயர்த்தேன். இருந்தாலும் அந்த மாணவன் பேசிய ‘கெத்து' மொழியில் இருந்த அட்டகாசமான இளமை உணர்வை, எனது வாக்கியத்தால் தொட முடியவில்லை. ஏனெனில் அந்தச் சொற்களுக்குள் நவீன இளைஞர்களின் இளமையும் உற்சாகமும் பொங்கித் ததும்பிக்கொண்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் பத்து வார்த்தைகள் கொண்ட ஒரு வாக்கியம் பேசினால், அதில் கெத்து, செம, மாஸ், தெறி, மொக்கை என ஐந்து வார்த்தைகள் தவறாமல் இடம்பிடித்துவிடுகின்றன.
இதில் கெத்தும், மொக்கையும் மிக மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூகுளில் ‘கெத்து’ என்று தேடினால், 0.65 செகண்டில் 1,44,000 கெத்து காட்டுகிறது. ‘மொக்கை' என்று தேடினால் 0.67 செகண்டில் 2 லட்சம் மொக்கை காட்டுகிறது (28.8.16 நிலவரப்படி).
‘கெத்து’ திரைப்படம் வெளிவந்தபோது, ‘கெத்து’ என்ற சொல் தமிழ் வார்த்தைதானா என்று இணையத்தில் பரவலாக விவாதம் நடைபெற்றது. இதுபற்றிக் கவிஞர் மகுடேசுவரன், “மீனைத் தூய்மையாக்க வாய்முதல் வால்வரை அதன் அடிப்புறத்தில் நேர்கோடாகக் கீறுவதற்கு 'கெத்துதல்' என்று பெயர். ஆணவமாகக் கொக்கரிப்பதும் ‘கெத்துவது' ஆகும். ஏமாற்றுவதையும் ‘கெத்துவது' என்று வழங்கியிருக்கின்றனர். தவிர, கெத்து என்பதைப் பெயர்ச்சொல்லாகவும் ‘தந்திரம்' என்ற பொருளில் வழங்குகின்றனர். ஆனால் தற்காலப் பேச்சுவழக்கில் மேற்காணும் பொருளை நாம் அறிந்திருக்கவேயில்லை” என்று கூறியுள்ளார்.
ஆம். கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் கூறியுள்ள எந்தப் பொருளிலும், இளைஞர்கள் ‘கெத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்துவ தில்லை. பெரும்பாலும் ‘சூப்பர்' என்ற அர்த்தத்தில்தான் கெத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால், கெத்தாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதே சமயத்தில் ஒருவன் மிகவும் பந்தாவாக, அல்டாப்பாக நடந்துகொண்டாலும் ‘கெத்து காட்றான்' என்கிறார்கள். நன்றாகத் தேர்வு எழுதினாலும், 'கெத்தா எழுதியிருக்கேன்' என்கிறார்கள். இவ்வாறு ‘கெத்து’ என்ற ஒற்றைச் சொல்லை, பல இடங்களில் பல பொருட்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனாலும் இந்த ‘கெத்து’ என்ற சொல், தாங்கள் நினைத்த முழு அர்த்தத்தையும் அளிக்கவில்லை என்று நினைத்தார்கள். எனவே இந்த ‘கெத்து’ என்ற சொல்லுக்கு ஏறத்தாழ இணையாக ‘செம’ மற்றும் ‘மாஸ்’ என்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு ‘ஒரு பாடல் நன்றாக இருக்கிறது’ என்பதைக் குறிப்பிட ‘கெத்தா இருக்கு', ‘மாஸா இருக்கு’, ‘செமயா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
இதில் ‘செம’ என்ற சொல், ‘செம்மையான’ என்ற சொல்லி லிருந்து வந்திருக்கலாம் என்று ஒரு நண்பன் கூறினான். ஆனால் ‘செம’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று 'கூகுள்' செய்தபோது கிடைத்த முடிவு, என்னை எல்லையில்லா அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Tagdef.com என்ற இணையதளத்தில், “இது தொடர்பான விளக்கம் ஏதும் இல்லை. நீயே இதற்கான விளக்கத்தை போடுரா” என்று மரியாதைக் குறைவாக சொல்லிவிட்டது. சரி இதையும் ‘சூப்பர்’ என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தலாம் என்று பார்த்தால், ‘செம ரகளை பண்ணிட்டான்', ‘செம ஸ்பீடுல போனான்' என்றும் சொல்கிறார்கள் இங்கு ‘செம’ என்ற சொல் ‘மிகவும்' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மண்டை காய்ந்துவிட்டது.
இவ்வாறு ஒரு விஷயத்தைப் புகழ்வதற்கு கெத்து, மாஸ், செம என்று மூன்று சொற்களையும் பயன்படுத்திவிட்டு, இளைஞர்கள் மெல்ல அடுத்த கட்டத்திற்குச் சென்றார்கள். ஒரு விஷயம் மிக மிக மிக நன்றாக இருக்கிறது என்பதைத் தங்கள் தமிழில், மிகவும் அழுத்தமாகச் சொல்ல நினைத்தார்கள். இதற்கான புதிய சொற்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. எனவே கெத்து, செம, மாஸ் என்ற மூன்று வார்த்தைகளையும் இணைத்து பயன்படுத்தி, அவர்கள் விரும்பிய தீவிர அழுத்தத்தை பெற்றார்கள். அதாவது ‘செம கெத்தா இருக்கு’, ‘செம மாஸா இருக்கு' என்று வார்த்தைகளை இணைத்தபோது அதில் தெரியும் வீரியத்தை கவனித்தீர்களா? இதில் வித்தியாசம் காட்ட சிலர் ‘மரண மாஸா இருக்கு’ என்று கூறி திகிலேற்றுகிறார்கள். இவ்வாறு கெத்தும், மாஸும், செமையாக செல்வாக்கோடு இருந்த காலத்தில், திடீரென்று ‘தெறி’ என்ற சொல்லுக்குக் கிடைத்த புகழைப் பார்த்து மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போனார்கள்.
இந்த ‘தெறி’ என்ற வார்த்தை கெத்தையும், மாஸையும் இடம்பெயர்க்க ஆரம்பித்தது. சூப்பராக இருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமாக ‘தெறியா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இந்தத் தெறியை, மாஸுக்கு முன்னால் போட்டு ‘தெறி மாஸ்’ என்று பொறி கிளப்பினார்கள். இவ்வாறு ‘தெறி’யும் ‘கெத்து’ குடும்பத்தோடு சேர்ந்தது.
தெறியோடு கெத்துக் குடும்பத்தின் வாரிசுகள் முடிந்துவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் மிகச் சமீபமாக கெத்து, மாஸ், தெறி, செம போன்ற வார்த்தைகளுக்கு இணையாக ‘பங்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ‘பங்கம்' தமிழின் நிரந்தர அங்கமாகுமா என்று இனிமேல்தான் பார்க்கவேண்டும்.
அடுத்து, மொக்கைக்கு வருவோம். அந்தக் காலத்தில் ‘அறுவை', ‘ரம்பம்' என்றிருந்து, பின்னர் ‘பிளேடா'க இருந்ததுதான், தற்போது மொக்கையாகப் பரிணமித்திருக்கிறது. ஏறத்தாழ மொக்கைக்கு இணையாக ‘சப்பை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும், மொக்கையின் செல்வாக்கைச் சப்பையால் இன்று வரையிலும் அடைய முடியவில்லை. இருப்பினும் கெத்துக்கு இணையாகப் பல தமிழ்ச் சொற்கள் உருவானது போல், மொக்கைக்கு இணையாகப் புதிய தமிழ் சொற்கள் இன்னும் உருவாகவில்லை. இளைஞர்களின் மொழியியலில், நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
‘சரி, இந்தக் கட்டுரைக்கு எதற்கு நடிகர்களின் பெயர் டைட்டிலாக?' என்று யோசிக்கிறீர்களா...? அட, இந்த வார்த்தைகளை வெச்சு அவங்க ‘செம ஃபிலிம்' காட்டிட்டாங்கள்ல..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT