Published : 26 Aug 2016 01:11 PM
Last Updated : 26 Aug 2016 01:11 PM
லண்டன் நகரத்தில் 1908-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்தான் முதன்முதலாகக் கால்பந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பிரேஸில் அணி 1952-ம் ஆண்டு முதல் விளையாடத் தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை கால்பந்தாட்ட உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற, பிரேஸில் ஒருமுறை கூட தங்கம் வென்றதில்லை. இது ஒரு சாபமாகவே இருந்து வந்தது. ‘அந்தச் சாபத்தைப் போக்க நெய்மாரால் முடியுமா?' என்று ஊடகங்கள் எல்லாம் கேள்வி எழுப்பி வந்தன.
இந்த ஆண்டு ரியோவில் அந்தச் சாபத்துக்கு நெய்மார் மூலமாகவே விமோசனம் கிடைத்தது. அவர் போட்ட ‘கோல்'தான் பிரேஸிலுக்குக் கால்பந்தாட்டத்தில் முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆச்சர்யம்... இந்த அணிக்கு, நெய்மார்தான் கேப்டன். அதிர்ச்சி... இந்தப் போட்டியுடன் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகப் போவதாக நெய்மார் அறிவித்திருப்பது! எனினும், 'கால்பந்தாட்டத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று நாம் நினைத்ததை நெய்மார் முடித்துவிட்டார்' என்று உச்சிமுகர்கிறார்கள் ரசிகர்கள்.
ரியோ ரிடையர்மென்ட்!
விளையாட்டுத் துறையில் சிலருக்குத் தொடர் வெற்றிகள் அலுத்துவிடும். அந்தச் சமயத்தில் அவர்கள் ரிடையர்மென்ட் பெற்றுவிடுவார்கள். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று, அதில் தொடர்ந்து 4 முறை பதக்கங்களை வென்று, மொத்தமாக 28 பதக்கங்களை (அவற்றில் 23 தங்கம்) பெற்ற சந்தோஷத்தில் மைக்கேல் பெல்ப்ஸ் போன்ற வீரர்கள் ‘ரிடையர்' ஆவது ஒரு வகையினர் என்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத கடுப்பில் ‘ரிடையர்' ஆவது இன்னொரு வகை. அதற்குச் சிறந்த உதாரணம் யெலனா இஸின்பயேவா.
ரஷ்யாவைச் சேர்ந்த போல்வால்ட் வீராங்கனை. இரண்டு முறை தங்கம் வென்றவர். ஆனால் இந்த முறை ஊக்க மருந்து பயன்படுத்தியது தொடர்பான பிரச்சினைகளால், சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்த ஒலிம்பிக்கில் இவர் பங்கேற்கத் தடை விதித்தது. கடுப்பான யெலனா, ‘நான் இல்லாத இந்த ஒலிம்பிக்கில் போல்வால்ட்டில் தங்கம் வென்றவர்கள், நியாயமான முறையில் வென்றவர்களாக நான் கருத மாட்டேன்' என்று தன் ‘ஸ்டொமக் பர்னிங்'கை வெளிப்படுத்தியவர், போல்வால்ட்டிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் கடந்த வாரம் அறிவித்தார்.
‘ராங்' ஆகிப் போன ‘ரிலே'!
ஆண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவிலிருந்து ஒரு அணி கலந்துகொண்டது. அதில் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் தோற்றிருந்தாலும்கூடப் பரவாயில்லை. ஆனால், தகுதியிழப்புச் செய்யப்பட்டிருக்கின்றனர். காரணம், 'ரிலே' ஓடும்போது கையில் கொண்டு செல்லும் பிரம்பை தருண் மற்றும் ராஜீவ் ஆகியோர் மாற்றிக்கொள்ளும்போது தவறு செய்துவிட்டனர் என்பதுதான். அடப்பாவமே... ரூல்ஸ் தெரியாமலேயே ரிலே ஓடப் போயிருப்பாங்களோ..?
போடியம் பாலிடிக்ஸ்!
ஒலிம்பிக் போட்டிகளின்போது மிகவும் முக்கியமான ஒரு தருணம் ‘மெடல் செரிமனி'. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பதக்கம் வழங்கப்படும் மேடையில் ஏறி நிற்பார்கள். தங்கம் வாங்கியவர் நடுவில் நிற்க, அவருக்கு வலது பக்கத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரும், இடது பக்கத்தில் வெண்கலம் வாங்கியவரும் நின்று தங்கள் பதக்கங்களைப் பெறுவார்கள். அப்போது, தங்கம் வென்ற நாட்டினரின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது, அவர் தன் வலது கையைத் தன் இதயத்தின் மீது வைத்து மரியாதை செலுத்த வேண்டும். இது நடைமுறை.
ஒவ்வொரு முறை இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்போது, ஏதேனும் ஒரு சர்ச்சை எழுவது வாடிக்கை. இந்த முறை, சர்ச்சைக்கு உள்ளானவர் அமெரிக்காவின் பெண்கள் ‘ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்' அணியைச் சேர்ந்த காப்ரியல் டக்ளஸ். இந்தப் போட்டியில், இவருடைய அணி தங்கப் பதக்கம் பெற்றது. அப்போது, அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்குரிய மரியாதையைச் செய்யவில்லை என்று ஊடகங்கள் உட்பட பலர் குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். அது ஏன் அவர் மீது மட்டும்? ஏனென்றால் அவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
‘ஹாய்' டோக்கியோ!
ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழா 21-ம் தேதி நிறைவடைந்தது. நிறைவு விழாவின்போது, அடுத்து எந்த நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ளதோ, அந்த நாட்டின் சிறப்பம்சங்கள் ஒரு சிறிய முன்னோட்டமாக நடைபெறுவது வழக்கம். அப்படி இந்த முறை, ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே பிரபல ‘கேமிங்' கதாபாத்திரமான ‘சூப்பர் மரியோ' போன்று உடையணிந்து, ரசிகர்களை ஈர்த்தார். அதோடு பிரேஸில் நாட்டின் ‘சம்பா' நடனத்தோடு ரியோவுக்கு ‘குட்பை' சொல்லிவிட்டு நாமும் ஃப்ளைட் ஏறினோம். 2020-ல் டோக்கியோவில் சந்திக்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT