Published : 10 Jun 2016 12:42 PM
Last Updated : 10 Jun 2016 12:42 PM

பொருள்தனை போற்று 20: நம்பிக்கை தரும் இந்தியப் பொருளாதாரம்

‘உலக வர்த்தகம்’ என்னை என்ன பொருள் ? இந்தியாவுக்கு வெளியே, உலக நாடுகளுடன் நடத்தும் வர்த்தகம். மிகச் சரி. 'சர்வதேச வர்த்தகம்' என்று சொன்னாலும், நிஜத்தில், ஒரு சில நாடுகளுடன் நமக்கு இருக்கும் வர்த்தக உறவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். குறிப்பாக, அமெரிக்க - சீன - இந்திய உறவுகள். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தக உறவு பற்றிய பார்வையும் நமக்குத் தேவைப்படுகிறது.

ஏனென்றால், கலாச்சாரம், பண்பாடு, சமூக நிலை, வாழ்க்கை முறை போன்று பல அம்சங்களில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை விடவும், ஆப்பிரிக்க நாடுகள்தாம் நமக்கு மிகவும் நெருக்கமானவை. அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் பல பிரச்சினைகள் அனேகமாகப் பொதுவானவை.

இங்கே சாதி; அங்கே நிறம்; இங்கே மொழி; அங்கே இனம்; மற்றபடி, ஏழ்மை, அறியாமை, நோய்கள், ஊட்டச் சத்துக் குறைபாடு, பல்வேறு அரசியல் குழுக்கள் என்று பல நன்மைகள் உள்ளன. என்ன? நாம் இவற்றுடன் போரிட்டு, ஏறத்தாழ ஓரளவு வெற்றி பெற்று விட்டோம். ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் தம் போராட்டத்தை முழு முனைப்புடன் தொடங்கவே இல்லை.

ஆனாலும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நாம் இன்னமும் வலுவான வர்த்தக, பொருளாதார உறவை வளர்த்துக் கொள்ளவில்லை என்கிற கருத்து சிலருக்கு உண்டு. இத்திசையில் நாம் முனைந்து செயல்பட நினைத்தாலும், 'கள நிலவரம்', இதனை ஊக்குவிக்கும் நிலையில் இல்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஜனநாயக அமைப்புகள் வலுவாக வேரூன்றாமை; சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், முதலீட்டுத் தொகைக்குப் பாதுகாப்பு இன்மை, 'ஒருபொருள்' பொருளாதாரம் என்று பல காரணங்கள்.

அது என்ன ‘ஒருபொருள்’? நம் நாட்டில் விவசாயம், நெசவு, மீன் பிடித்தல் போன்ற மரபுவழித் தொழில்கள், மென்பொருள் துறை, மனித வளம் என்று நவீனத் தொழில்கள் வரை அத்தனைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், மிகப் பல ஆப்பிரிக்க நாடுகள், தங்கம், வைரம், பிற கனிமப் பொருள் என்று ஏதேனும் ஒரே ஒரு பொருளை மட்டுமே நம்பி செயல்படுபவை. பிற துறைகளில், தொழில் தொடங்க, வசதிகளும் இல்லை; வாய்ப்புகளும் இல்லை.

ஆப்பிரிக்க நாடுகளில் பல, அளவில் மிகச் சிறியவை. நம் நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் கூட அல்ல; ஒரு மாநகரம் அளவுக்குக் கூட இல்லை. ஆனாலும் தனி நாடு; தனி அரசு; தனிக் கொள்கைகள்! இந்த நாடுகளில் பொறுப்பில் உள்ளவர்களிடம், சர்வதேச நிதியைக் கையாள்வதில், போதுமான பக்குவம் இன்மையும் ஒரு மிகப் பெரிய

தடைக்கல். சமீப சில ஆண்டுகளாக, ஆப்பிரிக்கத் தலைவர்கள், சர்வதேச அரங்கில் அதிக ஆர்வமும் சிரத்தையும் காட்டி வருகின்றனர். இதன் விளைவாய் பல நாடுகளின் பார்வை, ஆப்பிரிக்காவின் பக்கம் திரும்பி இருக்கிறது. குறிப்பாகச் சீனா, இது விஷயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. நாமும் பல்வேறு நிலைகளில் இது குறித்து பேசி, திட்டமிட்டு வருகிறோம்.

ஒரு உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவின் பொருளாதார முன்னேற்றமும் நம்முடைய வளர்ச்சியும் இணைந்து செல்லத்தக்க இரு கோடுகள். அமெரிக்க, சீன வர்த்தகம் அப்படியல்ல. இவ்விரு நாடுகளும் நம்மிடம் காட்டும் வர்த்தக ஆர்வம், உதடு வரையிலான உறவு. இவை, இந்தியாவின் வளர்ச்சியை முழு மனதுடன் வரவேற்கக் கூடியவை அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. காரணம், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், சந்தேகத்துக்கு இடமின்றி, முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா.

அமெரிக்காவின் நெருக்கடி

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. ‘தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம்’ கதைதான்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மிகக் கடுமையான சொல்தாக்குதலுக்கு உள்ளானார். எவ்வாறு இந்தியப் பொருளாதாரம், தனி நபர் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதோ, ஏறத்தாழ அதேபோல, தனி நபர் செலவுகளை அடித்தளமாகக் கொண்டு செயல்படுகிறது அமெரிக்கப் பொருளாதாரம்.

போதுமான உத்தரவாதம் இன்றி, வங்கிகள் அள்ளி வீசிய கடன்கள், உலகின் மிகப் பெரிய அமெரிக்க வங்கிகளை, திவால் நிலைக்குத் தள்ளியது. பல முனைகளில் இருந்தும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தது அமெரிக்கப் பொருளாதாரம். வெளி நாடுகளில், (வீம்புக்கேனும்) நிறுத்தப் பட்டு இருந்த, அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப் பட்டன. ‘உலக அமைதி’, உண்மையான காரணம் அல்ல. உள்நாட்டுப் பொருளாதாரம் தந்த அழுத்தம். தற்போதுதான், மூச்சுத் திணறலில் இருந்து சற்றே வெளிவந்து இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

2016 மார்ச் மாத நிறைவில், 2015-16 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், வளர்ச்சி விகிதத்தில், சீனாவை நாம் முந்தி இருக்கிறோம். பலர் இதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். சீனப் பொருளாதாரம், வெளியில் பரவலாக நம்பப் படுகிற மாதிரி, அத்தனை வலுவானதாக இல்லை என்றுதான் படுகிறது.

இரும்புக் கோட்டைக் கதவுகளுக்குள் தாழிட்டுக் கொண்டு, தான் சொல்வதை அப்படியே உலகம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறது சீனா.

அது எந்த அளவுக்கு உண்மை? சீன மக்களுக்கு அல்ல; சீன ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கடந்த ஆண்டு, திடுதிப்பென்று, தனது கரன்ஸியின் மதிப்பைத் தடாலடியாகக் குறைத்துக் கொண்டது சீனா.

உலக வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக என்று சொல்லப் பட்டாலும், ‘ஏதோ சரியில்லை’ என்பதற்கான‘ஆழமான’ சமிக்ஞைதான் இது.

உலகம் மொத்தமுமே நிச்சயமற்ற, அசாதாரண சூழல்.

உலகின் பெரிய நாடுகளில், இந்தியா மட்டுமே உறுதியாக முன்னேறியது; வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

பள்ளிப் பாடப் புத்தகளில் படித்து இருப்போம். ‘இந்தியாவின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது’. விவசாயத்துக்கு அடுத்தபடியாக, நெசவு, மீன்பிடித்தல் ஆகியன. இவையும் அன்றி, கிராமக் கைத்தொழில்கள், குடிசைகளில் இருந்து முகிழ்த்தன. இவை அனைத்தும் சேர்ந்து,‘கிராமியப் பொருளாதாரம்’ என்ற சிறப்புடன் விளங்குகிறது இந்தியப் பொருளாதாரம்.

மேலே உள்ள நான்கு வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். ஓர் உண்மை, பளிச்சென்று புரிந்திருக்குமே?

விவசாயம், கைத்தறி, மீன் பிடித்தல், குடிசைத் தொழில்கள் என எதற்கும், ‘வெளியாள்’ தயவு தேவை இல்லை. நாம் உழைக்கிறோம்; சம்பாதிக்கிறோம். இதுதான் 'உள் நாட்டுப் பொருளாதாரம்' என்பது. (indigenous economy) இந்தியாவுக்கே உரித்தானது.

வளர்ச்சியின் தேவை

இதில் என்ன சாதகமான அம்சம்? அயல் நாடுகளில் ஏற்படும் அதிர்வலைகள், நம் நாட்டுப் பொருளாதாரத்தை அதிகம் பாதிப்பது இல்லை. உள் நாட்டில் உற்பத்தி; உள் நாட்டு சந்தை;‘விளைவிப்போரும், வாங்கிப் பயன் அடைவோரும் உள் நாட்டினரே! நமக்கு வேண்டியது அனைத்தும் இங்கேயே நம்மாலே விளைவிக்க முடியும்; உற்பத்தி செய்ய முடியும். அதிகம் முதலீடுகூட வேண்டாம். வேண்டியது எல்லாம், மனித உழைப்பு, இயற்கையின் ஒத்துழைப்பு. அவ்வளவே.

‘தன்னிறைவு பெற்ற உள்ளாட்சி அமைப்புகள்...’ கேட்ட குரலாக இருக்கிறதா? மகாத்மா காந்தியின் சித்தாந்தம். அரசியலில் மட்டுமல்ல; பொருளாதாரத்திலும், காந்தியம்தான், மக்கள் மேம்பாட்டுக்கான ஆகச் சிறந்த வழி என்பதை உலக நாடுகள் உணரத் தொடங்கி விட்டன.

பொருளாதார அரசியல்

இந்த இடத்தில் ஓர் உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில், பொருளாதாரம்தான் அரசியல். அமெரிக்காவில் தற்போது, ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது அல்லவா? ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் எதைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்? நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, இதை விடவும், பொருளாதாரத் திட்டங்கள்; கோட்பாடுகள். இந்திய அரசியலும் மெல்ல மெல்ல இந்த திசையில் திரும்பும். நம்பலாம்.

சரி. வர்த்தகத்துக்கு வருவோம். பரபரப்புடன் மேலும் கீழுமாய் அலை பாய்ந்தது உலகப் பொருளாதாரம். எந்த ‘ஆட்டமும்’ இன்றி, சீராகப் பயணித்தது இந்தியப் பொருளாதாரம்.

இதை உற்று நோக்கிய அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள், இந்தியாவை நோக்கிப் ‘படை’ எடுக்கின்றன. 'நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்’ என்கிற நிலையில் நாம் இல்லை. 'இதற்குச் சம்மதம்’ எனில் வாருங்கள் என்று தீர்மானமாகச் சொல்லும் நிலையில் வலுவாக உள்ளோம்.

ஏற்றுமதிப் பொருளாதாரம், பன்னாட்டு நிறுவனங்கள், ராட்சத இயந்திரங்கள், பல்லாயிரம் கோடி முதலீடு இவை தராத பொருளாதார ஸ்திரத் தன்மையை, உள்நாட்டுப் பொருளாதாரம் மூலம், வெகு எளிதில் சாதித்துக் காட்டியதால், நம்மைக் காட்டிலும், அயலாருக்கு நம் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஆம். இந்தியப் பொருளாதாரம், பல படிகள் முன்னேறி, ‘நம்பிக்கைப் பொருளாதாரம்’ (economy of hope) என்கிற தகுதியைப் பெற்று விட்டது. இந்தப் பின்னணியை மனதில் கொண்டு இந்திய - அமெரிக்க - சீனப் பொருளாதார உறவுகளைப் பார்ப்போம்.

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x