Published : 02 Sep 2016 12:20 PM
Last Updated : 02 Sep 2016 12:20 PM

கொஞ்சம் சேட்டை ப்ளீஸ்...!

‘யூடியூப்' தளத்தில் அரசியல், சினிமா விமர்சனம் என ஒன்று விடாமல் கலாய்த்து சேட்டை செய்யும் ‘ஸ்மைல் சேட்டை' டீம். அவ்வப்போது வித்தியாசமான மனிதர்களைத் தேடிப் பேட்டியெடுத்துக் கலங்கடிக்கவும் வைப்பார்கள். சந்திக்கலாமே என்று அவர்களுடைய இடத்துக்குச் சென்றால் ‘கோரஸ்' ஆக நம்மை வரவேற்கிறார்கள்.

உங்க குழு சார்பா யார் பேசத் தயார் என்றவுடன், அனைவரும் சொன்னது ‘தல’ விக்னேஷைத்தான். ‘ஸ்மைல் சேட்டை'யின் தொடக்கம், வளர்ச்சி என்று தங்களுடைய பயணத்தை விவரித்தார் விக்னேஷ்.

“நான் ரேடியோவில் பணிபுரியும் போது ஒரு ‘டீம்' செட் ஆச்சு. நம்மிடம் இருப்பவர்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலில் திட்டமிட்டேன். அப்போ ‘ஸ்டூடியோ ஸ்மைல்'னு ஒரு ப்ரொடக் ஷன் ஸ்டூடியோ, ‘வெப்' ரேடியோன்னு சில விஷயங்கள் பண்ணோம். எல்லாமே நஷ்டம்தான். 'சரி. அப்புறம் என்ன?'ன்னு யோசிச்சப்போதான் ‘யூடியூப் சேனல்' ஐடியா சிக்குச்சு.

அதுல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கலாய்த்து ஒரு வீடியோ பண்ணினோம். அது பெரிய ஹிட். அப்படியே அதைத் தொடர்ந்து பண்ணும்போது, நிறைய டி.வி.களிலிருந்து அழைத்து நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லிப் பேசினார்கள். என்னிடம் இருந்த டீம் அப்போ வரைக்கும், பணம் என்கிற விஷயத்தைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. சாப்பாட்டுக்கு, தங்குவதற்கு மட்டுமே காசு கிடைக்கும். அதனால் நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லி வந்த ஆஃபர்களை ஏற்றுக்கொண்டோம்.

அப்போது சிலர் ‘புட் சட்னி', ‘மெட்ராஸ் மீட்டர்' எனப் புதிது புதிதாக யூடியூப்பில் சேனல் தொடங்கி பட்டையக் கிளப்பிக்கிட்டிருந்தாங்க. ‘யூடியூப் சேனல்' ஒரு நல்ல‌ மார்க்கெட் ஆகவும் இருந்துச்சு. அதை நாமளும் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சு கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ‘ஸ்மைல் சேட்டை' தொடங்கினோம்” என்றார்.

தேர்தல் நேரத்தில் இவர்கள் செய்த‌ அரசியல் நையாண்டி வெகு பிரபலம். அதைப் பற்றிக் கேட்டபோது, “எனக்கு அரசியல் நையாண்டி பண்ணணும் என்று ரொம்ப நாள் ஆசை. தேர்தல் சூடுபிடிக்கப் போகுது, அதை வைத்துத்தான் அடுத்த 6 மாதங்கள் செய்தி இருக்கும் என்பதால் எனது அணியும் சூப்பரா பண்ணலாம் என்றார்கள்.

‘தி பீப் ஷோ' என்று பெயரிட்டுப் பண்ணத் தொடங்கினோம். செம்ம‌ ரீச். டிசம்பர் வெள்ளம் வேறு முடிந்திருந்ததால் ஸ்டிக்கர் மேட்டரில் தொடங்கி அரசியலில் நடந்த ஒரு விஷயத்தையும் விடாமல் கிண்டல் செய்து வீடியோ பண்ணினோம். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்தோம். மற்றவர்கள் முகத்தைக் காட்டாமல் கிண்டல் பண்ணும்போது, நாங்கள் முகத்தைக் காட்டியே கிண்டல் செய்ததால் புதிதாக இருந்தது.

அடுத்து, ‘ஆல் இந்தியா பக்சோத்' எனும் ஒரு காமெடி குரூப் நார்த்ல ரொம்பப் பிரபலம். ‘திரையரங்குகளில் இந்தியர்கள் எப்படி இருப்பார்கள்'னு அவங்க ஒரு வீடியோ பண்ணியிருந்தாங்க‌. அதைப் பார்த்து ‘டம்பெஸ்ட் ரிவ்யூ'ன்னு ஒரு நிகழ்ச்சி பண்ணினோம். அதுக்கு நல்ல பேர் கிடைத்தது” என்றவரிடம், ‘இதுக்கெல்லாம் உங்க மேலே அவதூறு வழக்கே போட்டிருக்கணும் போலயே' என்று காலை வாரினால் நமக்கே ‘ஷாக்' கொடுத்தது சேட்டை டீம்.

“ஆளும்கட்சி சேனல்களிலும், எதிர்க்கட்சி சேனல்களிலும் இருந்து நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லிப் பேசினார்கள். மிரட்டல் எல்லாம் வரவில்லை. எங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து ‘அவங்க பார்த்தால் என்ன நடக்கும் தெரியும்ல. சீரியஸ்னஸ் தெரியாமப் பண்றீங்க. பார்த்து இருந்துக்கோங்க'ன்னு சொன்னாங்க‌. ஆனால், நாங்கள் ஒரு சார்பாகக் கிண்டல் பண்ணவில்லை. அனைவரையுமே கிண்டல் செய்ததால் விட்டுவிட்டார்கள். முதலில் பண்ணும்போது பயம் இருந்தது உண்மைதான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அதே மாதிரி நாங்கள் கிண்டல் செய்யும் அனைத்து வீடியோவும் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தாலும் சிரிக்கணும் என்ற எண்ணத்தில்தான் பண்ணினோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் விக்னேஷ்.

ஆர்.ஜே.விக்னேஷ்

‘சரி. உங்க அணியின் தனித்துவம் என்ன?' என்று கேட்டதற்கு “எங்கள் அணியில் புதிதாக இணைந்தால், இணைபவருக்கு என்ன திறமை இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட ‘ஷோ'தான் கொடுப்போம். அதனால், சம்பளம் குறைவாக இருந்தாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அனைவருக்குமே ஒரு காலத்தில் பேர் வரும் என்ற நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. அப்போது பணம் பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையில்தான் அனைவருமே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்” என்று விக்னேஷ் சொல்ல, அதனை அத்தனை பேரும் ஆமோதிக்கிறார்கள்.

‘ஸோ, வாட் நெக்ஸ்ட்?' என்றதற்கு, “நிறைய இருக்கு சார். ‘ரகசியன்' என்ற பெயரில் தமிழர்களுடைய மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றை வரிசையா வீடியோவாகப் பண்ணப் போறோம். அதில் முதலாவதா ‘மருதநாயகம்' வரலாற்றை வெளியிட்டுள்ளோம்.

‘ஸ்மைல் மிக்சர்' என்ற சேனலில் ‘விக்கிலீக்ஸ்' என்று ஒரு வீடியோ பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு ‘ஸ்மைல் ஓட்ஸ்', ‘ஸ்மைல் ஷார்ட் பிலிம்' என சேனல்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய அணியை 'பிராண்ட்' பண்ணுவதற்கு சினிமா வாய்ப்புகள் வருது. எழுத்தாளர்களாக சினிமாவுக்குப் பண்ண வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. முன்பு கதை இலாகா என்று இருந்தது. இப்போது இல்லை. எங்களிடம் ஒரு கதையைக் கொடுத்தால், திரைக்கதை அமைத்துக் கொடுகக் தயாராக இருக்கிறோம்" என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்.

"எங்களின் வீடியோவுக்கு வரும் கமெண்ட்களுக்குப் பதில் சொல்வதையே ஒரு கான்செப்ட்டாக ஆக்கிவிட்டோம். கமெண்ட் போடுபவர்கள் அனைவருமே நிறைய திட்டித்தான் போடுவார்கள். ஆனால் அவர்களது கமெண்ட்களுக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிடுகிறோம். திட்டத் திட்ட சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லிவிடுவோம்" என்று சொல்லும் விக்னேஷ், "இன்னும் கொஞ்சம் நாட்கள்ல‌ நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் யூடியூப்பில் இருந்துதான் உருவாகப் போறாங்க. அப்போ எங்களைத் திட்டறவங்களும் எங்களைப் பாராட்டுவாங்க பாருங்க!" என்று விடைகொடுத்தார் விக்னேஷ்.

இவர்கள் சேட்டையை நீங்களும் ரசிக்க இங்கே சொடுக்கவும்: >https://www.youtube.com/c/smilesettai

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x