Last Updated : 13 Sep, 2014 12:46 PM

 

Published : 13 Sep 2014 12:46 PM
Last Updated : 13 Sep 2014 12:46 PM

சிறு துளிகளாய்ச் சில உதவிகள்

படிக்க வசதியில்லாத மாணவர்களின் கல்விக்கும், அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுக்கும் நிதியுதவி செய்துவருகிறது அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ‘சிறுதுளிகள்’ இயக்கம். பெயருக்கு ஏற்றார்போல் ‘சிறுதுளிகள்’ இயக்கம் சிறிதளவில் சேமித்துப் பெரிய அளவில் தொண்டு செய்துவருகிறது.

2011-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றளவும் இயங்கிவருகிறது. இந்த அமைப்பில் உதவிபெற மாணவர்கள் கல்வியாண்டின் தொடக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களைப் பற்றிய தகவல்களைச் சரிபார்த்த பின்னர் அவர்களுக்கான உதவி கிடைக்கும். விருப்பப்பட்ட மாணவர்கள் அவர்களால் முடிந்த உதவியைச் ‘சிறுதுளி’களுக்கு வழங்குவார்கள்.

இதுவரை சிறுதுளி இயக்கம் மூலம் ரூபாய் 6.5 லட்சத்தைச் சேகரித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்திருக்கிறார்கள். விண்ணப்பித்தவர்களை இயன்றவரை சிறுதுளி இயக்கமே படிக்க வைக்கிறது. அதற்கு சாத்தியம் இல்லாத நிலையில் ‘முன்னாள் மாணவர்கள் சங்கம்’ மூலம் அவர்களுக்குத் தேவையான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்கள் சிறுதுளி இயக்கத்தினர்.

சிறுதுளி இயக்கத்தினர் மாணவர்களுக்கான கல்வி அளிப்பது, புத்தகங்கள் வாங்கித் தருவது போன்ற உதவிகள் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் செலவுக்கான உதவியும் செய்து வருகிறார்கள்.

சிறுதுளி இயக்கத்திற்கு மாணவர்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது. மாணவர்கள் பலரும் தாங்களே முன்வந்து தங்களால் இயன்ற நிதியுதவியைச் சிறுதுளிக்குச் செய்து வருகின்றனர். மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதில் ஒரு திருப்தி கிடைக்கிறது என்கிறது சிறுதுளி அமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x