Published : 24 Aug 2018 09:21 AM
Last Updated : 24 Aug 2018 09:21 AM
மாணவர்களே, நீங்கள் புவியியல் அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்றார் புவியியல் ஆசிரியர். இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? புவியியல் ஆசிரியர் புவியியலைப் பற்றிப் பெருமையாகத்தான் சொல்வார்.
ஆனால், இந்த ஆசிரியர் பெருமைப்படுவதோடு நிறுத்த வில்லை. ஏன் புவியியலைக் கற்க வேண்டும் என்று விளக்கத் தொடங்கினார்.
"இன்று நான் ஒரு வெளிநாட்டுக் காரரைச் சந்தித்தேன். அவர் எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்று கேட்டேன். அவரும் பதில் சொன்னார். ஆனால், அந்தப் பதில் எனக்குப் புரியவில்லை. ஏனெனில், அவர் சொன்ன நாட்டின் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அதன் பிறகு, அவர் உலகப் படத்தில் தன்னுடைய நாட்டைச் சுட்டிக்காட்டினார். இப்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று எனக்குப் புரிந்துவிட்டது. அதனால்தான் சொல்கிறேன், நம் எல்லோருக்கும் புவியியல் அறிவு மிகவும் அவசியம்!"
ஆசிரியர் இப்படிச் சொன்னதும், அந்த வகுப்பிலிருந்த ஒரு மாணவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். புவியியலுக்காக இல்லை, ஆங்கிலத்துக்காக.
அந்த மாணவனுடைய பெயர் மா யுன். அவனுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், அவனுடைய ஊரில் ஆங்கிலம் கற்றுத்தர யாரும் இல்லை. புத்தகங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக்கூட வாய்ப்பில்லை.
அப்போதும் அவன் விடவில்லை. வானொலியில் வரும் ஆங்கில நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கேட்டான், மெதுவாகக் கற்றுக்கொண்டான். ஆனால், இவையெல்லாம் ஏட்டுக் கல்விதானே? உண்மையில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் யாரிடமாவது இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். இதுதான் சரியான முறையா என்று தெரிந்துகொள்ள வேண்டும், தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும், அதற்கு என்ன வழி?
அவர்கள் வாழ்ந்த சீனாவில் பெரும்பாலானோர் சீன மொழி பேசுகிறவர்கள். இதனால், ஆங்கிலத்தை முறையாகப் பேசுகிற வர்களோடு பேசிப் பழகுவதற்கு அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகவே, புவியியல் ஆசிரியர் இந்த நிகழ்ச்சியை விவரித்தவுடன் அவனுக்கு ஒரு சிந்தனை. 'இந்த வெளிநாட்டுக்காரர்களோடு நாம் ஆங்கிலம் பேசிப் பழகினால் என்ன?'
அவர்கள் சீனாவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள்; நம்மோடு பேசுவதற்கு, ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமிருக்குமா?
நேரத்தை நாமே உருவாக்க வேண்டியதுதான். அதற்கும் மா ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.
மறுநாள் காலை, மா சைக்கிளில் புறப்பட்டான். 40 நிமிடங்கள் சைக்கிள் மிதித்து ஊருக்கு வெளியிலிருக்கும் அந்தத் தங்கும் விடுதிக்கு வந்தான்.
அந்த ஊருக்கு வருகிற வெளிநாட்டுப் பயணிகளெல்லாம் அந்த விடுதியில்தான் தங்குவார்கள். அவர்கள் தங்களுடைய அறைகளிலிருந்து புறப்பட்டு ஊரைச் சுற்றிப் பார்க்க வெளியில் வரும் நேரத்தில், மா அங்கு காத்திருந்தான். அவர்களை நெருங்கி, “நான் உங்களுக்கு ஊரைச் சுத்திக்காட்டறேன். எனக்கு நீங்க காசு தர வேண்டாம், இலவசம்!” என்றான்.
வெளிநாட்டவர்கள் அவனை விநோதமாகப் பார்த்தார்கள்.
“நிஜமாவா?”
“ஆமாங்க, நீங்க என்னுடன் ஆங்கிலத்துல பேசினாப் போதும், எனக்கு அதுல ஏதாவது சந்தேகம் வரும்போது அதுக்கு விளக்கம் சொன்னாப் போதும், உங்க தயவுல நான் ஆங்கிலம் கத்துக்குவேன், உங்களுக்கும் ஊர் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும், என்ன சொல்றீங்க?”
மா பேசிய விதத்தில் பெரும் பாலானோர் ஒப்புக்கொண்டார்கள். அவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டியபடி ஆங்கிலத்தில் பேசிப் பழகிக்கொண்டான் அவன்.
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அந்த விடுதிக்குச் சென்றுவிடுவான் மா. மழை வந்தாலும் வெயில் கொளுத்தினாலும் அவனுடைய வேலைக்கு விடுமுறை கிடையாது.
இதனால், அவனுக்குப் பல வெளிநாட்டவர்கள் நண்பர்களானார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வருகிறவர்களுடன் பேசிப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தான். புரியாதவற்றுக்கு விளக்கம் கேட்டான். தன்னுடைய பேச்சில் அவர்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய ஆங்கிலம் மேம்பட்டது.
இந்த வெளிநாட்டவர்கள் தங்களுடைய நாட்டுக்குத் திரும்பிச் சென்ற பிறகும் மா-வுக்குக் கடிதங்கள் எழுதினார்கள். அவனோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒரு பெண், “உன்னோட பேரை உச்சரிக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றார். “நீ ஆங்கிலம் கத்துக்கணும்னு ஆசைப்படறே, அதுக்கேத்த மாதிரி ஓர் ஆங்கிலப் பெயரை வெச்சுக்கோயேன்.”
“தாராளமா” என்றான் மா. “நீங்களே ஒரு பேர் வையுங்க!”
“எங்க அப்பா பேர் ஜாக், என் கணவர் பேரும் ஜாக், உனக்கும் அதே பேரை வெச்சுடறேன்” என்றார் அந்தப் பெண். அப்போதிலிருந்து, ‘மா யுன்’ என்ற பெயர் ‘ஜாக் மா’ என்று மாறியது.
ஆம், இன்று உலக அளவில் பல துறைகளில் சிறந்து விளங்குகிற, அதிவேகமாக முன்னேறிப் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிற ‘அலிபாபா’ குழுமத்தின் தலைவர் ஜாக் மா-தான் அந்தச் சிறுவன். சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக ஊரைச் சுற்றிக் காட்டிக் கொஞ்சம்கொஞ்சமாகக் கற்றுக்கொண்ட ஆங்கிலம்தான் அவருடைய தன்னம்பிக்கையைப் பெருக்கியது. உள்ளூரில் மட்டுமின்றிச் சர்வதேசச் சந்தையைக் குறிவைத்து உழைக்கச் சொன்னது.
ஜாக் அந்தச் சுற்றுலாப் பயணி களோடு ஊர் சுற்ற முக்கியக் காரணம், ஆங்கிலம் கற்றுக்கொள்வதுதான். ஆனால், அதன்மூலம் அவருக்கு இன்னொரு மிகப் பெரிய நன்மையும் கிடைத்தது. அவருடைய உலகப் பார்வை விரிவானது.
அதுவரை அவர் சீன மொழியில் வெளியான உள்ளூர்ப் புத்தகங்களை மட்டும்தான் வாசித்திருந்தார். உள்ளூர் மக்களோடுதான் பேசியிருந்தார். அதனால், சீனாவைப் பற்றியும் உலக நாடுகளைப் பற்றியும் அவருக்குள் ஒரு குறுகிய பார்வை உரு வாகியிருந்தது. அதையே உண்மை என்று நினைத்துக்கொண்டிருந்தார்.
இப்போது, அவர் பல நாட்டவர்களுடன் பேசும்போது, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும்போது, அவர்கள் சிந்திக்கும் விதத்தைப் பார்க்கும்போது பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். ஊரில் மற்ற எல்லாரும் ஒரேமாதிரி சிந்தித்துக்கொண்டிருந்தபோது இவர் மட்டும் வேறுவிதமாகச் சிந்திக்கத் தொடங்கினார். இது அவருடைய தொழில் முயற்சிகளுக்குப் பெரிய அளவில் உதவியது.
நாம் பிறக்கும் நாடு, பேசும் மொழி, நம்முடைய பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உருவாக்கும் சூழல்தான் நமக்கான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது. ஆனால், சில நேரம் அது நம்மைக் கட்டுப்படுத்திவிடக்கூடும். மொழி, மாநிலம், நாடு, கலாசாரம் போன்ற வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உலகப் பார்வையோடு சிந்திக்கும்போது இன்னும் பல வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கும்.
ஆனால், அந்தப் பார்வை எளிதில் கிடைத்து விடாது. நம்மைப் போலவே இருக்கிறவர்கள், நம்மைப் போலவே சிந்திக்கிறவர்களிடம் மட்டும் பழகாமல், கொஞ்சம் வெளியில் வந்து பார்க்க வேண்டும், பார்வைக்கோணம் மாறும்போது காட்சிகள் மாறும், மனம் விரிவாகும், தன்னம்பிக்கை பெருகும், புதிய முயற்சிகளில் துணிவோடு இறங்கி வெற்றிபெறுவோம்!
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT