Published : 28 Sep 2018 11:38 AM
Last Updated : 28 Sep 2018 11:38 AM
உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டு வாசலில் விற்பனையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார் அவர். என்னை வரவேற்று வீட்டின் உள்ளே உட்காரச் சொன்னார்.
ஆறு நிமிடங்களுக்குப் பிறகுதான் அவரால் உள்ளே வர முடிந்தது. அவர் முகத்தில் சோர்வு.
“தினமும் பலவித விற்பனைப் பிரதிநிதிகள் இங்கே வருகிறார்கள். வேண்டாம் என்றாலும் விடுவதில்லை. தொடர்ந்து எதையாவது பேசித் தங்கள் பொருளை என் தலையில் கட்டிவிடப் பார்க்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்.
அவர் ஒன்றை உடனடியாகச் செய்யலாம் என்று என் மனதுக்குப் பட்டது. வீட்டில் அவரைக் கடந்து வந்தபோது பார்த்த ஒரு காட்சியும் கேட்ட ஓர் உரையாடலின் பகுதியும்தான் இப்படி ஓர் ஆலோசனையை அவருக்கு அளிக்கத் தோன்றியது.
“விற்பனையாளர்கள் சில உத்திகளைக் கடைப்பிடிப்பார்கள். முதல் உத்தி தங்கள் பொருட்களை உங்கள் கையில் கொடுப்பது. “சும்மா கையில் வாங்கிப் பாருங்க. உங்களுக்கே பிடிக்கும்” என்பதுபோல் கூறுவார்கள். அந்தப் பொருளை நீங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பில்லை என்றாலோ நீங்கள் அது வேண்டாம் என்பதைத்தான் நிச்சயமாகச் சொல்லப் போகிறீர்கள் என்றாலோ அதைக் கையில் வாங்காதீர்கள்.
ஏனென்றால், அந்தப் பொருளை நீங்கள் திருப்பிக் கொடுத்தால்தான் உங்கள் வீட்டுக்குள் செல்ல முடியும். விற்பனைப் பிரதிநிதி அந்தப் பொருளைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார். நீங்கள் திணறுவீர்கள், என் உறவினரைப் போல.
இதேபோன்ற நடத்தையை நம்மில் சிலர் வேறுவிதத்திலும் வெளிக்காட்டுவோம். யாருக்காவது பிரச்சினை என்றால் அதற்காக அனுதாபப்படுவது இயற்கை. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க உங்களிடம் ஏதாவது வழி இருந்தால், அதை நிச்சயம் வெளிப்படுத்துங்கள்.
ஆனால், “நீ கவலைப்படாதே. நான் யோசிச்சு நல்ல தீர்வை இதுக்குத் தரேன்” என்பதுபோல் ஒருபோதும் கூறாதீர்கள். விற்பனைப் பிரதிநிதியின் பொருளைக் கையில் பெற்றுக்கொள்வதுபோல், அதன் பிறகு அது உங்கள் பிரச்சினை ஆகிவிடுகிறது. அதாவது, தீர்வு காண முடியவில்லை என்றால் உங்களுக்குக் குற்ற உணர்ச்சி தோன்றும். வேண்டாததை ஒருபோதும் கையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
(மாற்றம் வரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
ஓவியம்: பாலசுப்பிரமணியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT